சுரேஷ் சலே விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் சுரேஷ் சலே: சந்தேகம் எழுகிறது! – நளிந்த ஜயதிஸ்ஸ
கோட்டாவின் பயணத்தடைக்குப் பின்னரே போராட்டங்கள்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்கள் தொடர்பான விசாரணை செயன்முறை குறித்து ஏனையோரை விடவும் புலனாய்வுப் பிரிவு பிரதானியாகப் பதவி வகித்த சுரேஷ் சலேவுக்கு நன்கு தெரியும். அவர் உண்மையிலேயே எந்தவொரு குற்றத்தையும் புரியவில்லை என்றால், இந்த விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதே அவர் செய்யக்கூடிய சிறந்த விடயமாகும். மாறாக அவர் ஏனைய தரப்புக்களுடன் இணைந்து, விசாரணை செயன்முறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதனால், இத்தாக்குதல்களுடன் அவருக்குத் தொடர்பு இருக்கக்கூடுமோ எனும் சந்தேகம் எழுகிறது என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (9) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
அதன்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற வகையில் மிகமோசமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டாரா எனவும், அவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பிலும், சுரேஷ் சலே உள்ளடங்கலாக எதிரணி உறுப்பினர்களால் சிலரால் முன்வைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கக் கோரிக்கை குறித்தும் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறிய விடயங்கள் வருமாறு:
கோட்டாவின் பயணத்தடைக்குப் பின்னரே போராட்டங்கள்
பெரும் எண்ணிக்கையான உயிர்களைக் காவுகொண்ட உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுடன் தொடர்புடைய வகையில் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி சுரேஷ் சலே கைதுசெய்யப்பட்டார். பெப்ரவரி 27 ஆம் திகதி அவருக்கான தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, 90 நாட்கள் அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். அந்த அதனைத்தொடர்ந்து மீண்டும் கடந்த மே 27ஆம் திகதி அவருக்கு எதிரான தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டது.
இங்கு முக்கியமாக அவதானிக்கப்படவேண்டிய விடயம் என்னவென்றால், பெப்ரவரி மாதத்திலிருந்து அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்த 90 நாட்கள் எவ்வித குழப்பங்களும் எழவில்லை. அதனை எதிர்த்து யாரும் போராடவில்லை. ஆனால் கடந்த 3 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டதன் பின்னரே இந்தப் போராட்டங்கள் நடாத்தப்படுகின்றன. எனவே இதனுடன் தொடர்புடைய ஏதோவொரு தரப்பின் தேவைக்கு அமைவாகவே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுபோல் தெரிகிறது.
எத்தனை கூடாரங்கள் அமைத்துப் போராடினாலும் விசாரணை தொடரும்
இந்தப் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் அனைத்தும் உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் சரியான பாதையில் செல்கின்றன என்பதற்கான அத்தாட்சியேயாகும். ஆகையினாலேயே இவ்விவகாரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது பதறுகிறார்கள். தற்போது ஒரு கூடாரம் அல்ல, பத்து கூடாரங்கள் இட்டுப் போராடினாலும், விசாரணைகள் தொடர்ந்து நடைபெறும். இத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கான நீதி நிலைநாட்டப்படும் என வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படும்.
விசாரணைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் கருத்துக்கள்
அதேபோன்று இவ்விசாரணைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிடுவோர் மற்றும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் குற்றப்புலனாய்வுப்பிரிவு நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரும். அதன்பின்னர் நீதிமன்றம் உரிய தீர்மானங்களை மேற்கொள்ளும்.
எல்லோரையும் போன்றே சலேவும் கையாளப்பட்டார்
அடுத்ததாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சுரேஷ் சலே, இதற்கு முன்னைய சந்தர்ப்பங்களில் அச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் நடாத்தப்பட்டதைப் போன்றே நடாத்தப்படுகிறார். மாறாக அவர் அசாதாரணமான சித்திரவதைகளுக்கோ அல்லது மீறல்களுக்கோ உட்படுத்தப்படவில்லை.
குற்றம் புரியாவிடின் விசாரணைக்கு ஒத்துழையுங்கள்
இச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்கள் தொடர்பான விசாரணை செயன்முறை குறித்து ஏனையோரை விடவும் புலனாய்வுப் பிரிவு பிரதானியாகப் பதவி வகித்த சுரேஷ் சலேவுக்கு நன்கு தெரியும். அவர் உண்மையிலேயே எந்தவொரு குற்றத்தையும் புரியவில்லை என்றால், இந்த விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதே அவர் செய்யக்கூடிய சிறந்த விடயமாகும். மாறாக அவர் ஏனைய தரப்புக்களுடன் இணைந்து, விசாரணை செயன்முறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதனால், இத்தாக்குதல்களுடன் அவருக்குத் தொடர்பு இருக்கக்கூடுமோ எனும் சந்தேகம் எழுகிறது.
தெரிந்த தகவல்களை புலனாய்வுப் பிரிவுக்கு வழங்குங்கள்
அதேவேளை உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல் சூத்திரதாரி குறித்து புத்தகம் எழுதிய உதய கம்மன்பில போன்றவர்கள், இதுபற்றிய உண்மைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வழங்கவேண்டும். அதனூடாக விசாரணைகள் எளிதாக்கப்பட்டு, இதனுடன் தொடர்புபட்டவர்களைக் கண்டறியமுடியும். இவ்வாறான சம்பவங்கள் இனிவருங் காலங்களில் நடைபெறுவதைத் தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும்.
பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரயோகம்
மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கும், அதற்குப் பதிலாகப் புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதற்கும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும் அதுவரை தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரகாரமே இவ்விவகாரம் கையாளப்படும் என்றார்.
- நா.தனுஜா


