“அந்தச் சிரிப்பும் கடைசி வார்த்தைகளும்...”
குணேந்திரன்/குணா தொடர்பாக முகப்புத்தக உறவு திரு.யோகபாலன் அவர்களது உணர்வாமான பதிவின் பிரதிப் பதிவு!
குணேந்திரனை சுட்டுவிட்டு அங்கு நின்ற மாணவர்களுக்கு பிஸ்டலை ஊதிக்காட்டிவிட்டு சென்றார்கள் துரோகிகள்!
யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் பின்பக்கத்தில் அழைத்து குணேந்திரனை சுட்டுவிட்டு அங்கு நின்ற மாணவர்களுக்கு பிஸ்டலை ஊதிக்காட்டிவிட்டு சென்றார்கள் துரோகிகள். அவர்களும் பின்னாளில் களையெடுக்கப்பட்டார்கள்.
குணேந்திரன்/குணா தொடர்பாக முகப்புத்தக உறவு திரு.யோகபாலன் அவர்களது உணர்வாமான பதிவின் பிரதிப் பதிவு
“அந்தச் சிரிப்பும் கடைசி வார்த்தைகளும்...”
2006 ஆம் ஆண்டு மே மாதமளவில் அவனை கடைசியாக சந்தித்திருந்தேன். உடலாலும் மனதாலும் சோர்ந்திருந்தான்.
அதற்கு ஒரு மாதம் முன்பு வீதியால் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்திருந்தான். ஓட வழியின்றி இரண்டு மூன்று மதில்களால் ஏறி பாய்ந்தவனால், அதிக குருதிப்பெருக்கத்தால் ஒரு கட்டத்தில் இயலவில்லை. அருகில் தெரிந்த வீடொன்றின் மலசலகூடமொன்றில் சென்று படுத்துவிட்டான் - இல்லை மயங்கிவிட்டான். சிறிது நேரத்தில் அங்கு வந்த வீட்டின் அம்மா, இவனை அடையாளம் கண்டு கொண்டுள்ளார். உடனடியாக சறமொன்றினால் காயத்தை கட்டிவிட்டு தனக்கு தெரிந்த மருத்துவபீட மாணவன் ஒருவருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
உடனேயெ சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அவனுக்குரிய அவசர மருத்துவ உதவிகளை செய்துவிட்டு பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச்சென்று மேலதிக சிகிச்சை வழங்கினர். அதன்பின் அவனுக்கு பல்கலைகழக நூலகமும் சிற்றுண்டிச்சாலையுமே வீடாகிற்று.
நான் மீண்டும் சந்தித்த போது, அவனில் இருந்த பழைய உறுதியும் தீவிரமும் மங்கியிருந்தது. தன் இறுதிக்காலம் நெருங்கிவிட்டதென்றே எண்ணியிருப்பான் போல. ஆனால் எனக்கு அது கடைசி சந்திப்பென்று புரியவில்லை.
பழைய அதே புன்னகையுடன் 'இப்பவும் அந்தப்பிள்ளைய பார்க்கிறனியா? படிடா, நல்லா இருக்கனும்' என்றான். அவனது புகைப்படம் பார்க்கும்பொழுதெல்லாம் அந்தச்சிரிப்பும் கடைசிவசனங்களும் எனக்குள் வந்து தொலைக்கும்.
'நான் இறந்தபின் என்னோட பள்ளிக்கூடத்தில ஒரு போட்டோ கூட வைக்கமாட்டிங்க என்னடா?' இந்த ஒரு வார்த்தைக்கு பின் என்னால் அவனுடன் பேசமுடியவில்லை.
பல்கலைக்கழகத்தை விட்டு வெளியே வந்த பின்னும் அவன் அதே இடத்தில் இருந்தபடி வேலியால் பார்த்துக்கொண்டே இருந்தான்.
மாணவர் ஒன்றியத் தலைவராக — சுனாமி அனர்த்த மீட்பு உட்பட பல தளங்களில் தன் நேர்த்தியான தலைமைத்துவத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டியவன்.
நாம் சுனாமி பற்றிய செய்தியை அறிந்த வேளையில், அவன் ஏற்கனவே பல சடலங்களை மீட்டதுடன், அல்லல்பட்ட பலரை ஆலயங்களிலும் பொதுமண்டபங்களிலும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான்.
அது ஒன்றே அவனது அர்ப்பணிப்பிற்கு சான்றாகும்.
17 வயதில், அந்த நேரத்தில் எமக்கு மோட்டார் சைக்கிள் — அதுவும் கிளட்ச் மொடல் — என்றால் தொட்டுப் பார்த்ததில்லை.
ஒரு நாள் வேலை அலுவலாகச் செல்லும் பொழுது, “மோட்டார் சைக்கிள் ஓடுவியா?” என்றான்.
“அய்யோ, தெரியாது,” என்றேன்.
சட்டென்று கரைக்கெடுத்தவன், “இந்த பிடி... ஓடு,” என்றான்.
“அடேய், ஸ்டார்ட் அடிக்கமாட்டன்டா! எங்கயாச்சும் மதிலுக்க விட்டிரப்போறன்,” என்றேன்.
“நீ நினைக்கிற மாதிரி இதெல்லாம் பெரிய விஷயமில்லடா... இந்தா,” என்று சொல்லிக் கொண்டு வெறும் ஐந்து நிமிடங்களில் கற்றுத்தந்து,
அன்றைய நாள் முழுதும் என்னையே ஓடவைத்தான்.
2008 ஆம் ஆண்டு தை 21 இல் நான் சந்தித்த அந்த இடத்திற்கு சற்று அருகில் தான் சுடப்பட்டு இறந்திருந்தான்.
கடந்த மூன்று நாட்களாக அவனது நினைவுகள் மீண்டும் வந்து உறுத்திக்கொண்டே இருக்கின்றன. ஆம் அவனின் அந்த இரத்தக்கறை படிந்த சறத்திற்கு வயது 19.
எல்லாளன் என்ற குணேந்திரன் - நயினாதீவிலிருந்து வைத்தியர் கனவுடன் வந்து தன் கனவினை அகலமாக்கிய மாறாப்புன்னகை


