செம்மணி மனித புதைகுழியைப் பார்வையிட வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு அனுமதி!
இடைநிறுத்தப்பட்டுள்ள அகழ்வுப்பணிகள் மற்றும் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்திடம் கோரப்பட்ட நிதி பல மாத காலமாக அங்கீகரிக்கப்படாத நிலை!
இடைநிறுத்தப்பட்டுள்ள அகழ்வுப்பணிகள் மற்றும் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்திடம் கோரப்பட்ட நிதி பல மாத காலமாக அங்கீகரிக்கப்படாத நிலையில், வடக்கில் அமைந்துள்ள இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியை பார்வையிடுவதற்கு வெளிநாட்டு தூதுவர்களுக்கு நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது.
மனிதப்புதைகுழியைப் பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் உள்ளிட்ட வெளிநாட்டு தூதுவர்களுக்கு யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமாரின் அனுமதி கிடைத்துள்ளதாக, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை 2026 ஏப்ரல் 7ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் மனித உரிமைகள் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
“ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் புதைகுழியைப் பார்வையிட அனுமதி கோரியிருந்தனர், நீதிமன்றம் அவர்களுக்கு முற்பகல் 9.00 மணிக்கு முன்னதாக அல்லது பிற்பகல் 2.30 மணிக்குப் பின்னர் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள் வருகை தர எதிர்பார்க்கும் நேரம் குறித்து முன்கூட்டியே அறிவிக்குமாறும் நீதிமன்றம் அவர்களிடம் கோரியுள்ளது.”
மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திடம் அனுமதி கோரியிருந்ததாகவும், அந்த கோரிக்கையை நீதிமன்றத்திற்கு முன்வைத்ததாகவும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) சட்டத்தரணி பூர்ணிமா மரியநாயகம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிற்கு மேலதிகமாக பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ருமேனியா தூதரக அதிகாரிகளும் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட அனுமதி கோரியிருந்தன.
ஏழு மாதங்களுக்கு முன்னர் பணிகள் இடைநிறுத்தப்பட்ட மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான உத்தேச தினமாக கடந்த வழக்கு விசாரணையின் போது நீதவானால் ஏப்ரல் 20ஆம் திகதி பெயரிடப்பட்டிருந்தது. அதற்காக கோரப்பட்ட நிதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை என நீதிமன்றம் அறிவித்ததோடு, ஏப்ரல் 21ஆம் திகதி அதன் முன்னேற்றம் பரிசீலிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி ரணிதா குறிப்பிடுகின்றார்.
“அகழ்வுப் பணிகளின் அடுத்த கட்டத்துக்கான நடவடிக்கைகள் நிறைவடைந்து தயார் நிலையில் இருப்பதாக சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அறிவித்தார். இருப்பினும், 2026 பெப்ரவரி 12ஆம் திகதி யாழ்ப்பாண உயர் நீதிமன்றத்தினால் நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்ட பாதீடு இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்தது. அகழ்வுப் பணிகளின் அடுத்த கட்டத்தை ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்த போதிலும், அந்தத் திகதியில் ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இருப்பினும், நிதி கிடைத்தால் அகழ்வுப் பணிகளை ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அந்த அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான பாதீடு தயாராக உள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்ப்பதற்காக ஏப்ரல் 21ஆம் திகதி வழக்கு மீண்டும் அழைக்கப்படும்.”
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காகவும், இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவும் கோரப்பட்ட நிதியும் அங்கீகரிக்கப்படவில்லை என மனித உரிமைகள் சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.
“அகழ்வுப் பணிகள் மற்றும் மனித எலும்புப் பரிசோதனைக்கான பாதீடு என்பன ஒன்றாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இரண்டுக்குமே இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. மனித எலும்புப் பரிசோதனைக்கான பாதீட்டினை நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி சிறு திருத்தங்களுடன் மீண்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இரண்டுக்கும் அனுமதி வழங்குமாறு சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.”
மனிதப் புதைகுழியில் மேலும் இரண்டு மாத கால அகழ்வுப் பணிகளுக்காக கடந்த ஆண்டு கோரப்பட்ட 19 மில்லியன் ரூபா நிதி நீதி அமைச்சினால் வழங்கப்பட்டிருந்த போதிலும், அப்பிரதேசத்தில் நிலவிய மழையுடன் கூடிய காலநிலை காரணமாக அகழ்வுப் பணிகளை இதுவரை ஆரம்பிக்க முடியாமல் போனதுடன், 2025ஆம் ஆண்டு முடிவடைந்ததனால் அந்த நிதியை இந்த ஆண்டின் முற்பகுதியில் மீண்டும் திருப்பி அனுப்ப வேண்டியிருந்தது.
அதற்கமைய மேலும் ஐம்பத்தாறு நாட்கள் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி மதிப்பீட்டை 2026 பெப்ரவரி 09ஆம் திகதி யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மீண்டும் ஒருமுறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இவ்வாறு அகழ்வுப் பணிகளுக்காக மாத்திரம் புதிதாகக் கோரப்பட்டுள்ள நிதி சுமார் 21 மில்லியன் ரூபாய் என பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரது வழிநடத்தலில் யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் முதன்முறையாக 2025 மே 15ஆம் திகதி ஆரம்பமாயின.
45 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2025 செப்டம்பர் 06ஆம் திகதி மதியம் நிறைவடைந்த போது, மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட 240 மனித எலும்புக்கூடுகளில் ஒன்றைத் தவிர அனைத்து எலும்புக்கூடுகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியிலிருந்து மனித எலும்புகளுடன் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்ட ஏனைய பொருட்களுள் பால் போத்தல், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலைப் பைகளும் உள்ளடங்குகின்றன.
28 சிறுவர்கள் உட்பட 376 மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட மன்னார் சதொச மனிதப் புதைகுழியானது இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக கருதப்படுகிறது.


