டெல்லியில் ஈபிஎஸ் அளித்த விளக்கம்! அமித் ஷாவை சந்தித்தது ஏன்.. பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? -
தமிழகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு, பாலியல் வன்கொடுமைகள்

தமிழகத்தில் இரு மொழி கொள்கையை தொடர வைப்பது, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மேற்கொள்ளவும் வலியுறுத்தினோம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது ஏன் என்பதை டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அதில், "தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சனைகளை உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கவனத்துக்கு கொண்டுச் சென்றோம். இன்றைக்கு பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி காலதாமதமாகியுள்ளது. அதனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை அவரிடம் கோரிக்கை விடுத்தோம். குறிப்பாக 100 வேலை திட்டத்துக்கு வரவேண்டிய நிலுவை தொகை, கல்வித் துறைக்கு விடுவிக்க வேண்டிய தொகை குறித்தும் கோரிக்கை வைத்தோம்.
அதோடு, தமிழகத்தில் இரு மொழி கொள்கையை தொடர வைப்பது, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மேற்கொள்ளவும் வலியுறுத்தினோம். மேகதாது, முல்லைப்பெரியாறு அணை விவகாரங்களிலும் நடவடிக்கை கோரியும், தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலை முழுமையாக விசாரிக்க கோரியும் வலியுறுத்தினோம். தமிழகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு, பாலியல் வன்கொடுமைகள் பிரச்சினைகள் குறித்தும் அமித் ஷாவிடம் தெரிவித்தோம்." என்றார்.