தரம் – 1 மாணவர் அனுமதிக்காக வடக்கு ஆளுனரிடம் சிபாரிசு கோரும் தரப்பு!
‘சிறகடிக்கும் சிட்டுக்கள் – 2024’ கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் பாராட்டுதலும்,பரிசில் வழங்குதலும் நிகழ்வு.

“தரம் – 1 மாணவர் அனுமதிக்காக என்னுடைய சிபாரிசைக்கோரி பலர் அணுகினார்கள். எவருக்கும் நான் சிபாரிசை வழங்கவில்லை. ஒருவருக்கு வழங்கினாலும், என்னை அணுகும் எல்லோருக்கும் வழங்கவேண்டிவரும். அது பாடசாலைகளின் நிர்வாகத்துக்கு தேவையற்ற தலையீடுகளுக்கு அனுமதித்துவிடும்” என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், தெரிவித்தார்.
கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் 2024ஆம் ஆண்டு தரம் – 5 மாணவர்களின் ‘சிறகடிக்கும் சிட்டுக்கள் – 2024’ பாராட்டுதலும், பரிசில் வழங்குதலும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை பெற்றோரான பா.ரஜனிகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி கவின்ஜா நவஜீவா சிறப்பு விருந்தினராகவும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் கௌரவ விருந்தினராகவும், ஆளுநர், ஆளுநரின் பாரியார் திருமதி பிரதீபா வேதநாயகன் இருவரும் பிரதம விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர்,
“சிறந்த தலைமைத்துவம் கிடைக்கும்போது பாடசாலைகளும் வளர்ச்சியடையும். உங்களின் பாடசாலைக்கு தரம் – 1 இற்கு அனுமதிகோரி கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களே அதற்குச் சான்று.
மாணவர்களுக்கு இரக்கம், ஏனையோருக்கு உதவுதல், மற்றையவர்கள் மதித்தல் ஆகிய பண்புகளை ஆசிரியர்கள் கட்டாயம் போதிக்கவேண்டும்.
மாணவர்கள் கடவுள் சிந்தனை உள்ளவர்களாக வளர்க்கப்பட வேண்டும். எதிர்கால சிற்பிகளான அவர்களுக்கு தலைமைத்துவப் பண்பும் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும். இளமையில் பயில்வதே என்றும் அவர்கள் மனதிலிருக்கும்.
உண்மையில் எமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருப்பதற்கும் மாணவர்களுக்கு இப்போதே பழக்கவேண்டும். அதைச் செய்வது ஆசிரியர்களின் கடமை”, என ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.