திருச்செந்தூர் கடல் உள்வாங்கிய போது கிடைத்த பொக்கிஷம்
கடந்த 6 மாத காலத்திற்குள் 50க்கும் மேற்பட்ட கல் சிலைகள் மற்றும் 5 கல்வெட்டுகள் கடல் மற்றும் கடற்கரைக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் கடல் உள்வாங்கும் போது கடற்கரையில் தினமும் ஒருவித சிற்பங்கள், கல்வெட்டுக்கள் கரை ஒதுங்குகிறது. அந்த வகையில், இந்த முறை என்ன கிடைத்துள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் அடிக்கடி கடல் உள்வாங்குவதால், பழமையான சிற்பங்கள், கல்வெட்டுக்கள் உள்ளிட்டவை கரை ஒதுங்குகிறது. இந்த நிலையில், பழமைவாய்ந்த ‘கந்த மாதன தீர்த்தம்’ என குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்று கரை ஒதுக்கியுள்ளது. இப்படி கரையில் தென்படும் கல்வெட்டு, சிற்பங்களை அரசு பாதுகாக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தருகின்றனர். குறிப்பாக, திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
மேலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சிறந்த பரிகார தலமாகவும் விளங்குகிறது. கோயில் கடற்கரையோரம் இருப்பதால், பக்தர்கள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் கோயில் முன்புள்ள கடற்கரையில், கடல் அவ்வப்போது உள்வாங்கிக் காணப்படுகிறது. அப்படி கடல் உள்வாங்கும் சமயங்களில், கடலுக்குள் கிடக்கும் சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் வெளியே தெரிந்து வருகின்றனர்.
கடந்த 6 மாத காலத்திற்குள் 50க்கும் மேற்பட்ட கல் சிலைகள் மற்றும் 5 கல்வெட்டுகள் கடல் மற்றும் கடற்கரைக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த கல்வெட்டுகளில் திருச்செந்தூர் கோயிலைச் சுற்றியுள்ள தீர்த்தங்கள் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, அவை அனைத்தும் பராமரிப்பில்லாமல் காணப்படுவதால் கல்வெட்டுகளும் காணாமல் போய் விட்டது எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடல் உள்வாங்கி வருவதால், கடல் மற்றும் கடற்கரையில் கிடக்கும் கல்வெட்டுகள் வெளியே தெரிந்து வருகின்றன. கடந்த 6 மாத காலத்திற்குள் சத்திய தீர்த்தம், முனி தீர்த்தம், மாதர் தீர்த்தம் பிதா தீர்த்தம் என பல்வேறு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று கடல் மேலும் உள்வாங்கியுள்ள நிலையில் பச்சை பாசி படிந்த பாறைகள் அருகே மற்றொரு கல்வெட்டு கிடைத்துள்ளது. இந்த கல்வெட்டில் ‘கந்த மாதன தீர்த்தம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு ‘பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பச்சை படிந்த இந்த பாறையைப் பார்த்து அதன் அருகே நின்று ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்வதோடு, அந்த பகுதியில் உள்ள கல்வெட்டையும் பார்த்துச் செல்கின்றனர். ஆனால் கடந்த சில தினங்களாக உள்வாங்கி காணப்பட்ட கடல் இன்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது. இதனால் கடலுக்குள் கிடக்கும் கல்வெட்டு மீண்டும் மூழ்கியுள்ளது. மீண்டும் கடல் உள்வாங்கும் சமயத்தில் இந்த கல்வெட்டை மீட்டுப் பாதுகாக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.