நாடு திரும்பியதும் ஜனாதிபதி அநுர தமிழரசு கட்சியை சந்திப்பிற்கான திகதியை வழங்குவார்.
அநுரவை சந்திப்பதற்கான இலங்கைத் தமிழரசு கட்சியின் கோரிக்கை நிறைவேறும்.
இனப்பிரச்சினையை தீர்ப்பதில் யார் உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படுகின்றார்கள் என்பதில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. சுய அரசியல் நலன்களுக்காகவே பலரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுகின்றனர். ஆனால் அந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து அரசாங்கம் கூடுதல் முக்கியத்துவம் அளித்து செயற்படுகிறது. இந்த இலக்கை அடைவதற்கு அனைத்து தரப்பினருடனும் ஜனாதிபதி கலந்துரையாடுவாரென அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்திப்பதற்கான இலங்கைத் தமிழரசு கட்சியின் கோரிக்கை மற்றும் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதில் அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் குறித்து தெளிவுப்படுத்தும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்திப்பதற்கான இலங்கைத் தமிழரசு கட்சியின் கோரிக்கை நிறைவேறும். நாடு திரும்பியதும் ஜனாதிபதி அநுர சந்திப்பிற்கான திகதியை வழங்குவார்.
எனினும் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் உண்மையான ஈடுபாடுக்கும் சுய அரசியல் நலன்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை அனைவரும் உணர வேண்டும் எவ்வாறாயினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இனப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, இலங்கைத் தமிழரசு கட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு உத்தியோகபூர்வமாகக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி அனுப்பப்பட்ட இந்தக் கடிதம், ஜனாதிபதியுடன் தமது கட்சி கடைசியாக நடத்திய பேச்சுவார்த்தை இடம்பெற்று வருடம் கடந்துவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


