முன்னாள் STF அதிகாரியால் பாதிக்கப்பட்ட பெண் சட்டமா அதிபரிடம் நீதி கோருகிறார்!
வருண ஜயசுந்தர நீதிமன்றத்தை விடவும் மேலானவரா?
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) முன்னாள் தலைவர் தமக்குத் தொடர்ச்சியாக மரண அச்சுறுத்தல் விடுத்து வருவதாக கொலை வழக்கு ஒன்றின் பிரதான சாட்சியாளர் சட்டமா அதிபருக்கு நீண்ட கடிதமொன்றின் ஊடாக முறைப்பாடு செய்துள்ளார்.
“சாட்சியாளரான என் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுவது தொடர்பானது" என்ற தலைப்பின் கீழ், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸுக்கு இந்தக் கடிதத்தை அனுப்பியவர், மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தடுப்புக்காவலில் இருந்த நிலையில் உயிரிழந்த மகேஷ் இந்திக்க பிரபாத் என்பவரை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த பெலிதெனிய, கோட்டேகொட என்ற முகவரியைச் சேர்ந்தவரான வங்கி உத்தியோகத்தர் பியுமி வத்சலா ஆவார்.
2022 ஒக்டோபர் 13 ஆம் திகதி, இந்திக்க பிரபாத் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டு, கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக, அன்றைய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதியாக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர மற்றும் பொலிஸ் பரிசோதகர் லக்ஸ்மன் சமரதுங்க கொலம்பகே உள்ளிட்ட குழுவினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வருண ஜயசுந்தர நீதிமன்றத்தை விடவும் மேலானவரா?
தனது கணவர் கொல்லப்பட்டது முதல் இதுவரையில் வருண ஜயசுந்தரவிடமிருந்தும் பொலிஸாரிடமிருந்தும் தான் அனுபவிக்க நேரிட்டுள்ளதாகக் கூறப்படும் துன்புறுத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பலவற்றை சட்டமா அதிபர் திணைக்களத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ள அவர், நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையிலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளைத் தளபதியும் அவருக்கு நெருக்கமானவர்களும் முறையற்ற வகையில் அழுத்தம் பிரயோகித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தனது கணவரான இந்திக்க பிரபாத் கொலை தொடர்பில் பலபிட்டிய நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற முதற்கட்ட சாட்சி விசாரணையின் பிரதான சாட்சியாளரான தன்னை கொலை செய்வதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் தலைவர் பலமுறை முயற்சி செய்துள்ளதாகவும், இது குறித்து பல சந்தர்ப்பங்களில் பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களம், பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளைப் பாதுகாக்கும் அதிகாரசபை மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு வாய்மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டு அவர் அந்தக் கடிதத்தின் மூலமாக இவ்விடயத்தை பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். மேலும், தமக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றத்தினால் பாதிக்கப்பட்ட தனக்குக் கிடைப்பதை விடவும் அந்தக் குற்றத்தின் சந்தேகநபரான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவுக்கு சட்டத்தை அமுலாக்கும் நிறுவனங்களின் பாதுகாப்பும் சலுகைகளும் அதிகமாகக் கிடைத்துள்ளதாக அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரண அச்சுறுத்தல்கள்
“எனது கணவரின் கொலைக்கு எதிராக பலபிட்டிய நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கின் நேரில் கண்ட பிரதான சாட்சி நானாவேன். 2022 நவம்பர் 01 ஆம் திகதி 750118619 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து வந்த குறுஞ்செய்தியில், அன்றைய தினம் சாட்சியம் அளிக்கும் பட்சத்தில் நான் கொல்லப்படுவேன் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இருந்தாலும், அந்த அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் அன்றைய தினம் நான் சாட்சியம் அளித்தேன். பின்னர், அதற்கு மறுநாள் இரவு மீண்டும் தொலைபேசி ஊடாக எனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதோடு, உடனடியாக வழக்கைத் மீளப்பெறுமாறு கூறப்பட்டது. அது தொடர்பாக முறைப்பாடு செய்ய நான் மறுநாள் திக்வெல்ல பொலிஸ் நிலையத்துக்குச் சென்று வெளியே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் என் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றார். அது குறித்து அந்த இடத்திலேயே திக்வெல்ல பொலிஸ் அதிகாரிகளுக்குத் தெரிவித்தபோதும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அப்போதைய தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவிடம் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்தேன்,” என பியுமி வத்சலா அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 பக்கக் கடிதம்
தான் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதை விரும்பாத மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர தலைமையிலான குழுவினர், பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி தமக்கு எதிராகத் தொடர்ச்சியாக துன்புறுத்தல்களையும் அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர், சில சந்தர்ப்பங்களில் அவர்களது பொலிஸ் அதிகாரம் மற்றும் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றப் புலனாய்வுத் திணைக்களம், குற்றத்தால் பாதிக்கப்பட்டோர்களையும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையைக் கூட இதற்காக சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
“2023.10.27ஆம் திகதி என்னை சி.ஐ.டி.யின் பாரிய கொள்ளைச் சம்பவங்கள் விசாரணைப் பிரிவுக்கு அழைத்து, வருண ஜயசுந்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் நான் வழங்கிய சாட்சியத்தை மாற்றுமாறு அங்கிருந்த அதிகாரிகள் என்னை அச்சுறுத்தினர்,” என பியுமி வத்சலா தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
“வருணவுக்கு எதிராகச் செயற்பட்டால் உனக்கு எதிராகப் பொய் வழக்குத் தாக்கல் செய்வோம்”
நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தை மாற்ற முடியாது எனவும், தனது கணவர் கொல்லப்பட்டது தொடர்பாக மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர மற்றும் ஏனையோருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் மீளப்பெற முடியாது எனவும் தான் கூறியபோது, ‘உனக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வோம்’ என அங்கிருந்த அதிகாரிகள் தன்னைத் தொடர்ச்சியாக அச்சுறுத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சட்டத்தை நிலைநாட்டும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் நிறுவனமான இலங்கை பொலிஸில் இவ்வாறான அதிகாரிகள் இருப்பது, என்னைப் போன்ற பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்குவதாகும்,” என அவர் தனது கடிதத்தில் இன்னும் முடிவுக்கு வராத பல பொலிஸ் துன்புறுத்தல்களைக் குறிப்பிடும்போது தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் தலைவரின் சட்டவிரோத செயல்களைக் காப்பாற்றி அவர் சார்பாகத் தோன்றி தனக்கு எதிராகச் செயற்பட்டது பொலிஸார் மாத்திரமல்ல என்று குற்றம் சுமத்தியுள்ள பியுமி வத்சலா, தனது கணவரின் கொலை தற்காப்புக்காக விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டது அல்ல என அன்றைய பலபிட்டிய நீதவான் ஆர்.டி. ஜானக தீர்மானித்து, சந்தேகநபர்களைக் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்த போதிலும், அதற்கு மாறாக சந்தேகநபரான வருண ஜயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகளைப் பாதுகாப்பதற்கும், சட்டவிரோதமாக வழக்கை மீளப்பெறுவதற்கும் சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டமா அதிபரின் இந்தத் தவறான செயல் நீதியை நிலைநாட்டும் நடைமுறைக்குக் கொடுக்கப்பட்ட பலத்த அடி என்பதையும் அவர் நினைவூட்டியுள்ளார்.
வருணவுகாக அனைவரும் ஒரே அணியிலா?
அதுமட்டுமன்றி, வழக்குத் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை தான் அனுபவித்து வரும் துன்புறுத்தல்கள், மரண அச்சுறுத்தல்கள் மற்றும் பல்வேறு அவதூறுகள் குறித்து குற்றத்தால் பாதிக்கப்பட்டோர்களையும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபை மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல நிறுவனங்களுக்குப் பலமுறை முறைப்பாடு செய்த போதிலும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.விசேட அதிரடிப்படையினரால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டதாக நம்பப்படும் தனது கணவருக்கு நீதி கிடைப்பதற்கு இருக்கும் தடைகளை நீக்குமாறு கோரி, பியுமி வத்சலா கடந்த 5ஆம் திகதி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸுக்கு அனுப்பிய கடிதத்திற்கு முன்னதாக, இரண்டு அரசாங்கங்களினதும் ஜனாதிபதிகள், பிரதமர்கள், பொதுப் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் அந்த அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் பல கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இருப்பினும், எந்தவொரு நபரிடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ இதுவரையில் அவருக்குத் எதிர்பார்க்கப்பட்ட நிவாரணமோ அல்லது திருப்திகரமான ஒரு பதிலோ கிடைக்கவில்லை.
நீதி கோரி அனுப்பப்பட்ட கடிதக் குவியல்
நாட்டின் குடிமகள் ஒருவர் தனக்கு நீதி கிடைப்பதற்காக எவ்வளவு தூரம் போராட வேண்டும், எவ்வளவு துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பதைக் காண்பிப்பதற்காக அவர் அனுப்பிய கடிதங்களில் சிலவற்றின் திகதிகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள்
2024 ஒக்டோபர் 21, டிசம்பர் 12
2025 பெப்ரவரி 14, மார்ச் 20, டிசம்பர் 29
2026 மார்ச் 12, மார்ச் 15, மார்ச் 20
பிரதமர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள்
2024 டிசம்பர் 14,
2025 பெப்ரவரி 14
மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும் செயலாளருக்கும் அனுப்பப்பட்ட கடிதங்கள்
2023 டிசம்பர் 28
2025 ஓகஸ்ட் 04, ஓகஸ்ட் 23, ஒக்டோபர் 10, ஒக்டோபர் 16
இது தவிர, சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, குற்றத்தால் பாதிக்கப்பட்டோர்களையும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, ஜெனீவா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைத் தலைமையகம் ஆகியவற்றுக்கும் பலமுறை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர தமக்கு உள்ள பொலிஸ் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருக்கு எதிராகச் செய்யும் துன்புறுத்தல்கள் குறித்து கவனம் செலுத்தி நீதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடனேயே இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வருண ஜயசுந்தரவைப் பாதுகாக்கும் அரசியல்
குறிப்பாக பொலிஸார், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் குற்றத்தால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளைப் பாதுகாக்கும் தேசிய அதிகாரசபை என்பன இந்த அநீதியான செயற்பாட்டில் முன்னணியில் உள்ளன. எக்காரணம் கொண்டும் வருண ஜயசுந்தரவுக்கு எதிராகச் செயற்பட வேண்டாம் என்று கடந்த அரசாங்க காலத்தில் மக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த டிரான் அலஸ் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக அக்காலத்தில் பேசப்பட்டது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழும் வருண ஜயசுந்தரவுக்கு உயர்மட்ட அரசியல் பாதுகாப்பும் விடுபாட்டுரிமையும் வழங்கப்பட்டுள்ளதாக நம்பப்படுவதுடன், அவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை கட்டளைத் தளபதியாக இருந்தபோது செய்ததாகக் கூறப்படும் கொலைகள், சித்திரவதைகள் உள்ளிட்ட பல பாரிய குற்றங்கள் தொடர்பான விசாரணைகளும் இதனால் முடக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. உயர்மட்ட அரசியல் தலையீட்டினால் இவ்வாறு தடுக்கப்படுவதே இதற்குக் காரணமாகும்.
எவ்வாறாயினும், சட்டமா அதிபர் மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸுக்கு தான் அனுப்பிய கடிதத்துக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கும் பியுமி வத்சலா, அதில் உள்ள விடயங்கள் குறித்து உரிய கவனம் செலுத்தி தமக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க சட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கே. விஜேசிங்க


