புளோரிடா மாநில பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு: இருவர் மரணம், 6 பேர் காயம்!
பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் !

புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், உயிரிழந்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அல்ல என்று போலீசார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு குறித்து தனக்கு முழுமையாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்கூறினார். "இது ஒரு கொடூரமான விஷயம். இது போன்ற விஷயங்கள் நடப்பது மிகவும் கொடூரமானது," என்று அவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டினால் புளோரிடா பல்கலைக்கழகத்தில் பதற்றமான நிலை உருவானது.
டல்லாஹஸ்ஸி வளாகத்தில் உள்ள மாணவர் சங்கத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து புளோரிடா மாநில பல்கலைக்கழகம் உடனடியாக மூடப்பட்டது. பல்கலைக்கழத்தில் பிரதான வளாகத்தில் 42,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரடி வகுப்புகளில் ஈடுபட்டிருந்தனர். துப்பாக்கி சூட்டை அடுத்து, வளாகம் முழுவதும் அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன, பல்கலைக்கழகம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு வலியுறுத்தியது. இதனால் வளாகம் முழுவதும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. முன்னெச்சரிக்கையாக, வியாழக்கிழமை திட்டமிடப்பட்ட அனைத்து வகுப்புகள் மற்றும் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. புளோரிடா மாநில பல்கலைக்கழகம், மாநில தலைநகருக்கு அருகில் டல்லாஹஸ்ஸியில் அமைந்துள்ளது, இது புளோரிடாவின் 12 பொதுப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.