கருணாவின் இரண்டகம்!மாமனிதர் தாராகி சிவராம் அவர்கள் எளிய நடையில் விபரித்திருந்தார்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போரியல் மூலோபாயம் எது? அதன் தன்மை என்ன? என்பதை அறியாத சிறுபிள்ளை அல்ல?

கருணாவின் இரண்டகம் எவ்வாறு ஈழத்தமிழர்களின் கழுத்தை துண்டாடியது என்பதை, 'கருணாவிற்கு ஓர் கடிதம்' என்ற கட்டுரையில் மாமனிதர் தாராகி சிவராம் அவர்கள் எளிய நடையில் விபரித்திருந்தார். போராட்டத்தை காட்டிக்கொடுத்தார் கருணா என்று மட்டுமே நில்லாமல் கருணாவின் இரண்டகம் எப்படியானது என்றும் எத்தகைய வரலாற்றுச் சரிவினை கருணா செய்திருக்கிறார் என்றும் அறிய மீள அவரது கட்டுரையைப் பார்க்கலாம்.
இதோ தாராகியின் கருணாவிற்கு ஓர் கடிதம்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போரியல் மூலோபாயம் எது? அதன் தன்மை என்ன? என்பதை அறியாத சிறுபிள்ளை அல்ல நீங்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் போரியல் மூலோபாயம் என்பது நீங்கள் 10 வயதுப் பாலகனாக இருந்த காலத்தில் கிழக்குப் பிராந்தியத்தின் இராணுவ புவியியல் அம்சங்களைக் கவனமாக கருத்தில் கொண்டு வகுக்கப்பட்டதாகும். இது நீங்கள் பள்ளி செல்லும் பாலகனாக இருந்த காலத்தில் மட்டு-அம்பாறை மண்ணில் இருந்து விடுதலைக்கென புறப்பட்ட எமது போராட்ட முன்னோடிகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைப் போரியல் மூலோபாயமாகும்.
உலக விடுதலைப்போரியல் நுணுக்கங்களைக் கவனமாகக் கற்றதன் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலையின் இராணுவ மூலோபாயம் வகுக்கப்பட்டது என்பது நீங்கள் நன்றாக அறிந்தவிடயமாகும். ஒரு தேசிய விடுதலைப்போர் ஏகாதிபத்திய தரவுடன் இயங்கும் ஓர் அடக்குமுறை அரசின் படைகளுக்கு எதிராக போராடுவதனால் அதற்கு விடுக்கப்பட்ட தக்கவைக்கப்படக்கூடிய தளப்பிரதேசம் இன்றியமையாதது. வியட்னாம் விடுதலைப்போருக்கு யுனான் மாநிலமும் கியூபாவின் விடுதலைப்போர், கிழக்கு திமோரின் விடுதலைப்போர் ஆகியவற்றுக்கு அவற்றின் மத்திய மலைப்பிராந்தியங்களும், எரித்திரிய விடுதலைப்போருக்கு அதன் போராளிகளால் தக்கவைக்கப்பட்ட தளப்பிரதேசமும் அந்த நாடுகளின் சுதந்திர போராட்ட வெற்றிக்கு எவ்வாறு வழிவகுத்தன என்பதை உலக போரியல் வரலாறு பதிந்துவைத்துள்ளது. இவ்விடுதலை வரலாறுகளையும் அவை தந்த போரியல் பாடங்களையும் கற்றறிந்த கிழக்கு மாகாண விடுதலைப் போர் முன்னோடிகள் முன்வைத்த கோட்பாட்டையே அறியாதவர் போல் நீங்கள் பேசுவது எனக்கு வேதனையளிக்கின்றது.
ஓர் ஒடுக்குமுறை அரசின் - அதுவும் குறிப்பாக ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய சக்திகளின் துணையோடு செயற்படுகின்ற ஒரு அரசின் படைகளை முறியடித்து தேசிய விடுதலையை ஒரு இனம் முன்னெடுக்க வேண்டுமானால் அது எக்காலத்திலும் சிறிய கெரில்லா போர்முறையில் மட்டும் தங்கியிருக்க முடியாது. பலமான பின்னணியுடன் இயங்கும் எதிரியை முறியடிக்க அல்லது வலுவிழக்க செய்வதனால் விடுதலைப்போராட்ட அணிகளை சிறந்த பயிற்சிகளும் தொழில்நுட்பங்களும் மருத்துவ வசதிகளும் கொண்ட மரபுவழி இராணுவமாக மாற்றியமைப்பது கட்டாயமாகும். பெரிய அணிகளை பயிற்றுவிக்கக்கூடிய ஆயுதங்களை பெருமளவில் களஞ்சியப்படுத்தக்கூடிய காயப்பட்ட ஆயிரக்கணக்கான போராளிகளையும் பேணக்கூடிய தங்குதடைகள் இன்றி களமுனைக்கு சகலவிதமான வழங்கல்களையும் செய்திடக்கூடிய தளம் இதற்கு அவசியம். அதைவிட இப்படியான ஒரு தளப்பிராந்தியம் பாதுகாப்பானதாக இருப்பது இன்னும் அவசியமாகும். இவ்வாறான ஒரு தளத்தை வெற்றிகரமாகத் தக்க வைப்பதிலேயே விடுதலைப்போரின் வெற்றி தங்கியுள்ளது என்பது போரியல் தரும் அடிப்படை பாடம்.
கிழக்கு மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளும் எதிரியின் எறிகணை வீச்சு எல்லைக்கு உட்பட்டவையாகவே காணப்படுகின்றன. அதாவது கிழக்கில் எமக்குத்தளப் பிரதேசங்களாக அமையக்கூடிய கஞ்சிக்குடிச்சாறு, தரவை, வாகரை, சம்பூர், சேனையூர் பகுதி, திருமலை வடக்கில் பேராறு, திரியாய் காடு ஆகிய அனைத்துமே சிறிலங்கா படைகளின் எறிகணை வீச்சு எல்லைக்கு உட்பட்டவையே. அதுமட்டுமன்றி அவை கடல்வழியாகவும் தரைவழியாகவும் சிறிலங்கா படைகளால் மிக இலகுவாக ஊடுருவக்கூடியவையாகும். இதற்கேற்றவகையில் சிறிலங்கா அரசு போரியல் தொலைநோக்குடன் பல சிங்கள குடியேற்றங்களை கிழக்கின் எல்லைப்புறங்களில் ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி கிழக்கின் தளப்பிராந்தியங்களாக கருதப்படக்கூடிய பிரதேசங்கள் காடுகளும் பற்றைக்காடுகளும் வாவிகளும் களப்புகளும் திறந்தவெளிகளும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இவை கடலுக்கும் சிங்கள எல்லைக்கும் இடையில் ஆகக்கூடிய தூரம் 40 கிலோ மீற்றராகவும் ஆகக்குறைந்த தூரம் 15 கிலோ மீற்றராகவும் காணப்படுகின்றன. ஆகவே இவற்றை விடுவிக்கப்பட்ட தளப் பிராந்தியங்களாக ஒரு கெரில்லா இயக்கம் எடுத்த எடுப்பில் தக்கவைப்பது சாத்தியமற்றது என்பது தெளிவு.
ஆனால் முல்லைத்தீவு மாவட்டமானது இலங்கைத்தீவிலேயே காடுகளின் அடர்த்திகூடிய மாவட்டமாகும். அதுமட்டுமன்றி கிழக்கைப்போலல்லாது காடுகளுக்கும் கடற்கரைக்கும் தொடர்ச்சியுள்ள ஒரு பிராந்தியமாக அது காணப்படுகின்றது. கடலிலிருந்தோ சிங்கள எல்லையிலிருந்தோ பெறப்படக்கூடிய எறிகணை வீச்சு எல்லைக்கு அப்பாற்பட்ட பல உட்பிராந்தியங்களைக் கொண்ட இடமாகவும் அது காணப்படுகின்றது.