மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இம்முறை ஒதுக்கிய நிதி 51 மில்லியன் மாத்திரமே!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிசார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இம்முறை ஜனாதிபதியால் அபிவிருத்திக்கு ஒதுக்கிய நிதி வெறுமனே 51 மில்லியன் மாத்திரமே. ஏன் அவரது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அபகரித்து விடுவார் என்ற பயத்தினாலா குறைந்த நிதி ஒதுக்கீட்டை வழங்கியிருக்கின்றார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிசார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பு கூளாவடி டிஸ்கோ விளையாட்டுக் கழக மைதானத்தில் முன்னாள் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைத்தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் உள்ளிட்ட கட்சியின் பிரதேசக் கிளை நிர்வாகிகள், மாநகரசபையின் 20 வட்டாரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள், பட்டியல் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த பற்றாளர்கள் கௌரவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு சபைக்குப் போட்டியிடும் வட்டார வேட்பாளர்கள் 20 பேரும், பட்டியல் வேட்பாளர்கள் 16 பேருமாக 36 வேட்பாளர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து வௌியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தற்போதைய நிலையில் எங்களுடைய கட்சியால் மாத்திரமே ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒவ்வொரு வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தினை நடத்தும் இயலுமை இருக்கின்றது. அந்தளவுக்கு எமது கட்சி மக்களின் நம்பிக்கை வென்ற கட்சியாக இருக்கின்றது.
இந்த மாநகரசபைக்கான தேர்தலைப் பொறுத்தவரையில் இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு நாம் பதில் கொடுக்கத் தேவையில்லை. எமது வட்டார வேட்பாளர்களே போதும். ஊழல் மோசடிகளற்ற ஆட்சியை நடத்திய மாநகரசபை ஆட்சியாக எமது கட்சியின் ஆட்சியே.
கடந்த காலங்களிலே எமது ஆட்சியில் சட்டவிரோதமான வேலைகளை செய்து தர கேட்டுக்கொண்டவர்கள் இன்று வேறு சின்னங்களில் கேட்கின்றார்கள். இலங்கை தமிழரசு கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் சங்கு சின்னத்திற்கு வாக்குகள் கிடைக்காது என்பதற்காக மட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிட தைரியமில்லாமல் வேறு வேறு சின்னங்களில் போட்டி போடுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இம்முறை ஜனாதிபதியால் அபிவிருத்திக்கு ஒதுக்கிய நிதி வெறுமனே 51 மில்லியன் மாத்திரமே. ஏன் அவரது கட்சியின் பாராளும்னர் உறுப்பினர் கந்தசாமி பிரபு அபகரித்து விடுவார் என்ற பயத்தினாலா குறைந்த நிதி ஒதுக்கீட்டை வழங்கியிருக்கின்றார்.
கிழக்கு மாகாணத்திற்கு இலங்கை அரசாங்கத்தினால் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கவில்லை. இந்தியாவின் ஒதுக்கீட்டின் மூலமே அபிவிருத்தி செய்யப் போவதாக ஜனாதிபதியே சொல்லி இருந்தார்.
கடந்த பாரளுமன்றத்திலே மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரம் தமிழரசுக் கட்சியை வெற்றிபெறச் செய்தது. இந்த உள்ளூராட்சியில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் முழுவதும் தமிழரசுடன் இருக்கின்றது என்ற செய்தியை நாங்கள் இந்த அரசுக்குச் சொல்ல வேண்டும்.
எமது பிரதேசங்ளைப் பற்றி தெரிந்தவர்களே இந்தப் பிரதேசத்தை ஆட்சி செய்ய வேண்டும். தென்னிலங்லையில் இருந்து வந்து அனுரகுமார இங்கு ஆட்சி செய்ய வேண்டியதில்லை. அவருடன் இணைந்திருக்கும் புல்லுருவிகள் ஆட்சி செய்ய முடியாது.