தென்கொரியா அதிபர் யூன் சுக் யோல், பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.
இராணுவம் நேரடியாக நாட்டை ஆளும் உத்தரவை அதிபர் பிறப்பிப்பார். அப்படியான சட்டத்திற்கு பெயர்தான் மார்ஷல் சட்டம்.

வழக்கமாக வடகொரியாவில்தான் பஞ்சாயத்துகள் நடக்கும். ஆனால் இந்த முறை தென்கொரியா அரசியல் சலசலப்பில் சிக்கியிருக்கிறது.
அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோல், பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். அரசியலமைப்பு சட்டம் கொடுத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தென் கொரிய செய்தி ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
தற்போது அதிபராக இருக்கும் யூன் சுக் யோல் சமீபத்தில் சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்றை கொண்டு வந்தார். இது நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. ஒரு நாட்டின் அரசு அல்லது சிவில் நிர்வாகம் முறையாக செயல்பட முடியாத நிலையில், இராணுவம் நேரடியாக நாட்டை ஆளும். இதற்கான உத்தரவை அதிபர் பிறப்பிப்பார். அப்படியான சட்டத்திற்கு பெயர்தான் மார்ஷல் சட்டம். இதன் மூலம் சட்டங்கள், குடிமக்களின் உரிமைகள், நீதிமன்றங்களின் அதிகாரங்கள் மற்றும் அரசின் பொது நிர்வாகம் அனைத்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்படும். முக்கியப் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் அதாவது கிளர்ச்சி, புரட்சி உள்ளிட்டவை ஏற்படும்போது இதுபோன்ற சட்டம் அமல்படுத்தப்படும். இது தவிர உள்நாட்டு அல்லது வெளிநாட்டு போர் நிலைமை, பெரும் வன்முறைகள், தீவிரவாத தாக்குதல்கள் உள்ளிட்ட நேரத்திலும் இந்த சட்டம் அமல்படுத்தப்படும். இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்படும். கைது வாரண்ட் இல்லாமல் மக்கள் கைத செய்யப்படலாம்.
கடந்த டிசம்பரில் இப்படியான மார்ஷல் சட்டத்தை தென்கொரிய அதிபர் அமல்படுத்தினார். ஆனால் மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக 6 மணி நேரத்தில் சட்டம் வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் இது அந்நாட்டு வரலாற்றில் கருப்பு தினமாக பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது அதிபரை பதவிநீக்கம் செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு பிறகு, அடுத்த 2 மாதங்களில் புதியதாக அதிபர் தேர்தல் நடத்தப்படும்.
தற்போது அவர் மீது துரோகி குற்றச்சாட்டு பதிவாகியிருக்கிறது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது எதிர்க்கட்சி தலைவர் லீ ஜே-ம்யூங் முன்னணியில் இருக்கிறார். அனேகமாக அவர் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. புதிய அதிபர் தேர்ந்தெடுக்கும் வரை இடைக்கால அதிபராக பிரதமர் ஹான் டக்-சூ தொடர வாய்ப்பு இருக்கிறது. பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது. எனுவே அவருடை மக்கள் அதிகார கட்சி வேறு வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும். இப்போது நடந்திருக்கும் நிகழ்வுகள் சர்வதேச அளவில் எதிரொலிக்கும். குறிப்பாக அமெரிக்கா மீதான விமர்சனங்கள் அதிகம் எழ வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் தென்கொரியா அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளி. இவ்வளவு நாள் கூட இருந்து அமெரிக்கா வழி நடத்தியது சரியில்லை. அதனால்தான் தென்கொரியாவில் ஆட்சி கவிழ்ந்திருக்கிறது என்று விமர்சனங்கள் எழலாம். இந்த விவகாரங்களை வடகொரியா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக கவனிக்கும். வெளிநாட்டு கொள்கையில் நண்பராக நடந்துக்கொள்ளும் தலைவர், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட பக்கத்து நாடுகள் சில உள்ளடி வேலைகளையும் பார்க்க வாய்ப்பு இருக்கிறது. வழக்கமாக வடகொரியாவில்தான் பஞ்சாயத்துகள் அடிக்கடி நடக்கும். ஆனால், இந்த முறை தென்கொரியாவில் அரசியல் சலசலப்பு ஏற்பட்டிருப்பது மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.