யாழ். பல்கலைத் துணைவேந்தருக்கு எதிராக கொழும்பு உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைமீறல் மனு!
,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரால் விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடைக்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 4ஆம் வருட சட்டத்துறை மாணவன் சி.சிவகஜன் என்பவரால் கொழும்பு உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைமீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவகஜன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி பல்கலைக்கழகத் துணைவேந்தரால் சட்டத்துறை மாணவன் சிவகஜனுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது. இந்த வகுப்புத் தடை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கலைப்பீடாதி முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய விதிக்கப்பட்டுள்ளது என்று துணைவேந்தரால் மாணவனுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகுப்புத் தடையைச் சவாலுக்குட்படுத்தியே சட்டத்துறை மாணவன் சிவகஜனால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
'தன்மீது பாரதூரமான அவதூறை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு சிவகஜன் செவ்வி வழங்கினார்' என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கலைப்பீடாதி துணைவேந்தரிடம் முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாடு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கலைப்பீடாதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த மறுநாளே வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் 9 மாணவர்களுக்கு எதிராக மூன்று வௌ;வேறு சம்பவங்கள் தொடர்பாகக் குற்றச்சாட்டுக்கள் முவைக்கப்பட்டிருந்த நிலையில், அவை தொடர்பில் முறையான விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் பரிந்துரைகள் ஒழுக்காற்று சபையின் பரிந்துரைக்காக விடப்பட்டபோது, ஒழுக்காற்று சபையின் பரிந்துரைகளை ஏற்காது கலைப்பீடாதிபதியின் வலியுறுத்தலின் அடிப்படையில் அந்த மாணவர்களுக்குத் தண்டனையாக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு சம்பவம் கலைப்பீடத்தில் பாடத்தெரிவில் வெளிப்படையான ஒரு முறைமை கடைப்பிடிக்கப்படவில்லை என்பது தொடர்பில் வட்ஸ்அப் செயலியில் கருத்துத் தெரிவித்த மாணவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இந்த விடயத்தில் முறைப்படி அமைக்கப்பட்டிருந்த ஒழுக்காற்று விசாரணைக் குழு, இரு மாணவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வழங்குவது என்று மட்டுமே தீர்மானித்திருந்தது. ஆனால் கலைப்பீடாதிபதியின் வலியுறுத்தலுக்கு அமைய ஒரு வருடத்துக்கு மாணவ நிலையிலிருந்து அவர்களை இடைநிறுத்தும் தண்டனை வழங்கப்பட்டது.
இரண்டாவது சம்பவம் விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத்தின் தலைவராலும், துணைத்தலைவராலும் மாணவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவைக்கும் இடத்தில் போடப்பட்ட பூட்டை உடைத்தது தொடர்பானது. பலமுறை கூறியும் அந்தப் பூட்டுத் திறக்கப்படாததால் பூட்டை உடைத்த குற்றச்சாட்டுக்காக அவர்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டிருந்து.
மற்றையது பரமேஸ்வரன் ஆலயத்துக்கு அண்மையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பானது. இந்தவிடயத்தில் முறைப்படி அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, ஒரு மாணவனுக்கு எதிராக மட்டும் மதுபோதையில் இருந்தார் என்று தெரிவித்து ஒரு வருடம் மாணவ நிலையில் இருந்து இடைநிறுத்த வேண்டும் என்று முன்மொழிந்திருந்தது. ஆனால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கலைப்பீடாதியின் அழுத்தத்தின் அடிப்படையில் ஒழுக்காற்று சபை 5 மாணவர்களுக்கு எதிராகவும் ஒரு வருட இடைநிறுத்தல் தண்டனையை வழங்கியது.
இந்த மூன்று விடயங்களும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழ மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக அண்மைக்காலம்வரை செயலாற்றிய சி.சிவகஜனால் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டது. அவர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கலைப்பீடாதி தொடர்பாக எவ்விதமான அவதூறான கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. பல்கலைக்கழக நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட தவறுகள் தொடர்பாக ஒரு சட்ட மாணவனாக, சட்ட வரையறைகளுக்கு உட்பட்டே கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஊடகங்களுக்கு செவ்வி வழங்கியிருந்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கலைப்பீடாதியால் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்சமான முடிவுகளை ஏற்கவில்லை என்ற பல்கலைக்கழகப் பேரவையின் முடிவை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கலைப்பீடாதி வழங்கிய அழுத்தத்தின்பேரிலும், யாழ்.பல்கலைக்கழ ஆசிரியர் சங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தத்தின்பேரிலும் துணைவேந்தர் ஒருதலைப்பட்சமாக மாற்றியுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பாக உண்மைகளைத் தரவுகளுடன் பேசிய சி.சிவகஜன் என்ற மாணவன் எதிர்வரும் மார்ச் மாதம் இறுதிப் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில், இறுதியாண்டு விரிவுரைகளில் அவர் பங்குற்றாதவகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்று நிருபம் 946இன் பிரகாரம் காலவரையின்றி ஒருவரை வகுப்புத் தடைக்கு உட்படுத்த முடியாது. வகுப்புத் தடைக்கு உட்படுத்த முன்னர் அந்த மாணவனின் கருத்தைக் கேட்க வேண்டும் போன்ற விடயங்கள் பின்பற்றப்படாது அவசர அவசரமாகக் கலைப்பீடாதிபதியைத் திருப்திப்படுத்துவதற்காக துணைவேந்தரால் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத் துணைவேந்தரின் செயற்பாடு ஏதேச்சதிகாரமானதும், பக்கச்சார்பானதுமாகும். கலைப்பீடாதிபதியைத் திருப்பதிப்படுத்துவதற்காகவும், அவர் தனது பதவி விலகலை மீளப்பெற வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் உறுப்புரை 12 உப பிரிவு ஐ, 14 உபபிரிவு (அ) ஆகியவற்றில் இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்று நிருபங்களையும், பல்கலைக்கழக பேரவையால் உருவாக்கப்பட்ட துணைவிதிகளை மீறும் செயற்பாடாக இது அமைந்துள்ளது என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மனுவில் எதிர்மனுதாரர்களாக யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் சிறிசற்குணராஜா, கலைப்பிடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மாணவர் ஒழுக்காற்று அதிகாரி போன்றவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த மனு அடுத்தவாரம் சிவகஜனால் கோரப்பட்டுள்ள இடைக்காலக் கட்டளை தொடர்பான விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.