அமெரிக்காவில் அனுமதியின்றி வசிக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதாக டிரம்ப் உறுதி!
.
அமெரிக்காவில் அனுமதியின்றி வசிக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதாக டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் தனது முதல் நாளிலேயே 'அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தும் நடவடிக்கையை தொடங்குவேன்' என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் 11 மில்லியன் பேர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பலர் பல ஆண்டுகளாக அங்கு வேலை செய்து, வாழ்ந்து வருகின்றனர். 'குற்றவாளிகளிடமிருந்து' இந்த நடவடிக்கையை தொடங்குவேன் என்று டிரம்ப் கூறியுள்ளார், ஆனால் இது தொடர்பாக குறைவான விவரங்களே கொடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க மண்ணில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை என்ற 'பிறப்பு குடியுரிமை' (Birthright citizenship) முறையை முடிவுக்கு கொண்டு வருவதையும் டிரம்ப் நோக்கமாகக் கொண்டுள்ளார்.
தன்னுடைய தேர்தல் பிரசாரத்தின்போது, எல்லைப் பாதுகாப்பை கடுமையாக்கப் போவதாகக் கூறினார். அவரது முந்தைய ஆட்சியில், குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை இருந்தது. அவற்றில் பல முஸ்லிம் நாடுகள். இந்த சர்ச்சைக்குரிய பயணத் தடைகளை இம்முறை மீண்டும் கொண்டுவரப் போவதாகவும் டிரம்ப் கூறினார்.
எவ்வாறாயினும், டிரம்பின் திட்டங்கள் குறிப்பிடத்தக்க சட்ட, நிதி மற்றும் அரசியல் சவால்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று குடியேற்ற நிபுணர்கள் வாதிடுகின்றனர்.