அதிகார ஆக்கிரப்பாளர்களின் நலனுக்காகவும் தமதுநலனுக்காகவும் ஒட்டிவாழும் ஒட்டுக்குழுக்கள்!
மாற்றுக் குழுக்கள்!அவர்களை உருவாக்கியவர்களின் நோக்கத்தை இலகுவாக எட்டுவதற்கு அவர்கள் காரணமாக இருப்பார்கள்.

தமக்கு சவாலான இடங்களில் -சவாலாக இருக்கின்ற அரசுகள் அல்லது அமைப்புகளை, நெருக்கடிக்குள் சிக்க வைப்பதற்கு, மாற்றுக்குழுக்களை அல்லது அமைப்புக்களை உருவாக்குவது ஒரு தந்திரோபாயமாக கையாளப்படுகிறது.
இது மேற்குலகத்தினால் மாத்திரம் கையாளப்படுகின்ற அணுகுமுறை அல்ல. இஸ்ரேல் இதனை கையாளுகிறது. இந்தியாவும் இதனை கையாண்டது, இப்போதும் கையாளுகிறது. இந்த மாற்றுக் குழுக்கள் ஏதேனும் ஒரு பலம்வாய்ந்த அமைப்பை சீர்குலைத்து விடுகின்றன.
அவற்றை உருவாக்கியவர்களின் நோக்கத்தை இலகுவாக எட்டுவதற்கு அவர்கள் காரணமாக இருப்பார்கள். 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் காஸாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு தொடுத்த தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக, இஸ்ரேலிய இராணுவம் நியமித்த விசாரணைக்குழுவின் அறிக்கை சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், இஸ்ரேல் தரப்பில் என்னென்ன தவறுகள் இழைக்கப்பட்டன, அதன் காரணமாக ஹமாஸ் அமைப்பு அடைந்த முன்னேற்றம் அல்லது அதற்கு சாதகமாக அமைந்த விடயங்கள் என்ன என்பது பற்றிய விலாவாரியான விபரங்கள் இடம்பெற்றிருந்தன.
புலனாய்வுத் தகவல்களை திரட்டுவதில் விடப்பட்ட தவறுகள், ஹமாஸ் அமைப்பை குறைத்து மதிப்பீடு செய்தது என பல தவறுகளை இஸ்ரேலிய இராணுவத்தின் விசாரணை அறிக்கை ஒப்புக்கொண்டிருந்தது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த இன்னொரு முக்கியமான விடயம், ஹமாஸ் அமைப்புக்கு இணையான ஒரு மாற்றுக் குழுவை உருவாக்குவதற்கு தவறிவிட்டோம் என்பதாகும். இந்த விடயம் முக்கியமான ஒன்று.
காஸாவை ஹமாஸ் அமைப்பே முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அங்கு வேறு பலஸ்தீனக் குழுக்கள் இயங்கியிருக்கவில்லை. மேற்குக்கரையில் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அரசாங்கம் இருந்தாலும், அங்கு பல்வேறு ஆயுதக்குழுக்கள் இயங்கி வருகின்றன.
ஆனால், காஸாவில் தனியே ஹமாஸ் அமைப்பே இயங்கியது, அந்த அமைப்பே ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தது. இலங்கையில் விடுதலைப் புலிகள் எவ்வாறு தனி ஒரு அமைப்பாக இயங்கினார்களோ, அதுபோன்ற ஒரு நிலையே காஸாவில் காணப்பட்டது.
இவ்வாறான சூழலில், காஸாவில் ஹமாஸுக்கு போட்டியாக ஒரு மாற்றுக் குழுவை உருவாக்குவதற்கு இஸ்ரேல் முயற்சிக்கவில்லை என விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் இயக்கங்களின் ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்காக, இஸ்ரேலின் உதவியை, ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசாங்கம் பெற்றுக் கொண்டது. அப்போது தொடக்கம் அவர்கள் காலத்துக்கு காலம் இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அல்லது போரை சுலபமாக கையாளுவதற்கு, பல்வேறு பயிற்சிகளை வழங்கினார்கள். உத்திகளை கற்றுக் கொடுத்திருந்தார்கள்.
அவை இலங்கைப் படைகளுக்கு மிகவும் உபயோகமானவையாக இருந்தன என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு பிரதேசத்தில் இயங்கும் ஒரு சில போராளிகளை அடையாளம் காண முடியாத போது, அந்த பிரதேசத்தில் உள்ள ஆண்கள் அனைவரையும் அள்ளி சென்று சிறையில் அடைக்கின்ற அல்லது கொலை செய்கின்ற மூலோபாயத்தை கற்றுக் கொடுத்ததும் இஸ்ரேல் தான்.
அப்படிச் செய்யும் போது அந்தப் பகுதிக்குள் இருந்த அத்தனை போராளிகளும் அழிக்கப்படுவார்கள். அதேவேளை, பொதுமக்களும் கொல்லப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள். பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளை கருத்தில் கொள்ளாமல் முன்னெடுக்கப்படுகின்ற இராணுவ நடவடிக்கை அது.
அதனை இலங்கைப் படையினர் 1980 களின் நடுப்பகுதியில் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இந்த உத்தி இலங்கைக்கு முழுமையாக பயனளித்ததா என்பது சந்தேகம். அப்படிப் பயனளித்திருந்தால் , ஆயுதப் போராட்டம் 25 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்திருக்க முடியாது.
மாற்றுக் குழுக்களை உருவாக்கி, அதே பிரதேசத்தில் உலாவ விட்டு, போராட்டத்தில் ஈடுபடுகின்ற பிரதான அமைப்பை பலவீனப்படுத்துகின்ற உத்தியை இலங்கைக்கு கற்றுக் கொடுத்த இஸ்ரேல், அந்த உத்தியை ஏன் ஹமாஸ் தொடர்பாக காஸாவில் பின்பற்றாமல் போனது என்ற கேள்வி வருகிறது.
காஸாவில் ஹமாஸுக்கு போட்டியான ஒரு அரசியல் அமைப்பை அல்லது இராணுவ அமைப்பை இஸ்ரேல் உருவாக்கியிருந்தால் ஹமாஸை பலவீனப்படுத்தி இருக்கலாம். அது இஸ்ரேலுக்கான பாதுகாப்பு கவசமாகவும் இருந்திருக்கும். இதுதான் இஸ்ரேலிய நிபுணர்களின் விசாரணை அறிக்கையில் கூறியிருக்கின்ற முக்கிய விடயம்.
இலங்கையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கு, இலங்கை அரசாங்கம் மாத்திரமன்றி இந்திய அரசாங்கமும் கூட மாற்றுக் குழுக்களை உருவாக்கியது.
வடக்கு, கிழக்கில் ஆயுதப் போராட்டம் முனைப்படைந்த போது பல போராளிக் குழுக்கள் உருவாகின. ஒன்றில் இருந்து ஒன்று உடைந்து புதிது புதிதாக அமைப்புகள் தோன்றின. ஆனால் அத்தனையும் நிலைத்திருக்கவில்லை. கடைசியாக எஞ்சியிருந்தது விடுதலைப் புலிகள் தான்.
அவர்கள் ஏனைய அமைப்புகளைத் தடை செய்து அல்லது வேறு வழிகளில் அடக்கி செயற்பட விடாமல் தடுத்திருந்தனர். அந்த அமைப்புக்களில் இருந்தவர்கள் பலர் இலங்கை அரசாங்கத்தினாலும் இந்திய அரசாங்கத்தினாலும் மாற்றுக் குழுக்களாக உருவாக்கப்பட்டார்கள்.
அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கையில் இலங்கை இராணுவத்திற்கும் இந்திய இராணுவத்தினருக்கும் உதவுகின்றவர்களாக, வழிகாட்டுபவர்களாக, தகவல்களை வழங்குபவர்களாக இருந்தார்கள்.
அந்த மாற்றுக் குழுக்கள், விடுதலைப் புலிகள் தமது இலக்கை அடைவதற்கு பிரதான தடையாக இருந்தனர் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்குப் பின்னர், ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் தோன்றிய பிளவு, இன்னொரு கட்டத்துக்கு சென்றது. அந்த அமைப்பில் இருந்து வெளியேறிய கருணா- பிள்ளையான் போன்றவர்கள் கிழக்கில் விடுதலைப் புலிகளின் இருப்புக்கு சவாலாக மாறினார்கள்.
அவர்களின் கிழக்கு செயற்பாடுகளுக்கு இடையூறாக இருந்தனர். அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் தொந்தரவு கொடுப்பவர்களாக மாற்றப்பட்டார்கள்.
இது கிழக்கில் விடுதலைப் புலிகள் தமது இயங்கு தளத்தை பெருமளவில் இழப்பதற்கு காரணமானது.
தனது படைபலம் மூலம் விடுதலைப் புலிகள் கிழக்கில் கடைசி வரை நிலை கொண்டிருந்தாலும், கருணா- பிள்ளையான் அணிகள் அங்கு மக்கள் மத்தியில் வலுவான பிளவுகளை உருவாக்குவதில் வெற்றியை பெற்றிருந்தார்கள்.
இது ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் வடக்கு மக்களின் போராட்டம் என சித்திரிக்கப்படும் அளவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விடயத்தை கையாளுவதில் விடுதலைப் புலிகள் கடுமையான நெருக்கடிகளையும் சிரமங்களையும் எதிர்கொண்டார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
ஏனென்றால், கருணா விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இரகசியங்கள் பெருமளவில் அறிந்த ஒருவர். அதன் பலம் பலவீனத்தை கணிசமாக அறிந்திருந்தவர். போர்முனையில் புலிகளின் தனித்துவமான தந்திரங்களை பிரயோகிக்கின்ற ஒரு தளபதியாக இருந்தவர்.
அவ்வாறான ஒருவர் இராணுவத்தின் பக்கம் சென்றபோது புலிகளை இலகுவாக கையாளக் கூடிய சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல கருணாவுக்கு விடுதலைப் புலிகளின் அத்தனை போர் தந்திரங்களும் அத்துப்படியாக இருந்தன.
அந்த இடத்தில் இராணுவ ரீதியாகவும் சரி, அரசியல் ரீதியாகவும் சரி, மாற்றுக் குழுக்களை உருவாக்குவதில் இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொண்ட வெற்றி விடுதலைப் புலிகளை முற்றிலுமாக இராணுவ ரீதியாக அழிப்பதில் கணிசமான பங்கை வகித்திருந்தது.
விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தனி ஒரு கட்டமைப்பை உருவாக்கி வைத்திருந்தார்கள். காஸாவில் ஹமாஸ் அமைப்பை போலவே, அது இருந்தது. அங்கு மாற்றுக் குழுக்களை இயங்கக் கூடிய நிலையும் இருக்கவில்லை.
அதனால் தான் விடுதலைப் புலிகளுக்கு உள்ளே இருந்து ஒரு மாற்றுக் குழுவை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதில் உள்நாட்டு, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.
இலங்கையில் இப்படி ஒரு உத்தியை கற்றுக் கொடுத்த இஸ்ரேல், காஸாவில் அதனை பிரயோகிக்க வேண்டும் என ஏன் எதிர்பார்க்கவில்லை என்பது மர்மம். ஆனாலும் இப்பொழுது அது தமது பக்க தவறு என இஸ்ரேல் கூறியிருக்கிறது. அப்படியானால் இனி இஸ்ரேல் என்ன செய்யும் ?
காஸாவில் ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்கும் நடவடிக்கையில் இறங்கினாலும், ஹமாஸுக்கு போட்டியான ஒரு ஆயுதக் குழுவை அல்லது அரசியல் குழுவை அது நிச்சயம் உருவாக்கியே தீரும்.
– ஹரிகரன்