பிரான்சில் 'மருத்துவ விடுமுறை எடுப்பதில் புதிய கட்டுப்பாடு!
,
பிரான்சில் 'மருத்துவ விடுமுறை எடுப்பதில் புதிய கட்டுப்பாடு!
பிரான்சில் மருத்துவ விடுப்பு (Arrêt de travail) எடுக்கும் முறையில் பெரிய மாற்றம் வந்துள்ளது. செலவுகளைக் குறைக்கும் முயற்சியில், பிரான்ஸ் நாடாளுமன்றம் மருத்துவ விடுப்புகளின் கால அளவைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டத்திற்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய விதிமுறை என்ன?
முதல் விடுப்பு (Première prescription): இனி, ஒரு மருத்துவர் ஒரு நோயாளிக்கு முதல் முறையாக மருத்துவ விடுப்பு பரிந்துரைக்கும்போது, அதிகபட்சம் ஒரு மாதத்திற்கு (1 mois) மட்டுமே வழங்க முடியும்.
விடுப்பு நீட்டிப்பு (Renouvellement): அந்த விடுப்பை நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதை அதிகபட்சமாக இரண்டு மாதங்களுக்கு (2 mois) மட்டுமே நீட்டிக்க முடியும்.
இருப்பினும், ஒரு நோயாளியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தாலோ அல்லது நீண்ட கால சிகிச்சை தேவைப்பட்டாலோ, மருத்துவர்கள் இந்தக் கால வரம்பைத் தாண்டியும் விடுப்பு அளிக்கலாம். ஆனால், அதற்கான தெளிவான மருத்துவ காரணத்தை அவர்கள் தங்கள் பரிந்துரைச் சீட்டில் (prescription) கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
பிரான்சில் மருத்துவ விடுப்புகளுக்காக அரசு வழங்கும் தினசரி படிகளின் (indemnités journalières) மொத்த செலவு, ஆண்டுக்கு 11 பில்லியன் யூரோக்களை தாண்டிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக இந்தச் செலவு ஆண்டுக்கு 6% அதிகரித்து வருவதால், இதைக் கட்டுப்படுத்தவே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அரசாங்கம் முதலில் இதைவிடக் கடுமையான (முதல் விடுப்புக்கு 15 நாட்கள் மட்டுமே) கட்டுப்பாட்டைக் கொண்டுவரத் திட்டமிட்டது. ஆனால், சோசலிச கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தத்தின் மூலமே இது ஒரு மாதம் / இரண்டு மாதம் எனச் சற்று தளர்த்தப்பட்டுள்ளது.
இதுவரை, பிரான்சில் மருத்துவ விடுப்புக்கு இத்தனை நாட்கள் தான் அதிகபட்சம் என்ற சட்டம் எதுவும் இருக்கவில்லை. (சில நோய்களுக்கான பரிந்துரைகள் மட்டும் இருந்தன).
இந்தப் புதிய கட்டுப்பாட்டால், விடுப்பை நீட்டிக்க வேண்டிய நோயாளிகள் அடிக்கடி மருத்துவரைச் சந்திக்க வேண்டிய (consultations) நிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


