Breaking News
"நான் சாகடிக்கப்படலாம் ,ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட் டேன்"
"நான் தோற்றுப்போகலாம் -அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றதல்ல" அவரது உடல் புதைக்கப்பட்டு அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்றும் இளைஞர்களின்...
சே குவேரா: மரணமில்லா பெருங்கனவின் நினைவு நாள் (அக்டோபர் 09, 1967)
"நான் தோற்றுப்போகலாம் -அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றதல்ல" . "நான் சாகடிக்கப்படலாம் ,ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட் டேன்" "விதைத்துக்கொண்டே இரு ,முளைத்தால் மரம் , இல்லையேல் உரம்" இந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரரான எர்னெஸ்டோ சே குவேராவின் நினைவு தினம் இன்று. 1967-ம் ஆண்டு, அக்டோபர் 9-ம் திகதி, பொலிவியாவின் மலைப் பிரதேசங்களில், ஏகாதிபத்தியத்தின் கைகளால் வீழ்த்தப்பட்ட அந்த மாபெரும் புரட்சியாளனின் உடல் மட்டுமே மறைந்தது; அவனது சித்தாந்தமும், கனவும் உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் இதயங்களில் விதையாக விழுந்தது.
அர்ஜென்டினாவில் ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்து, மருத்துவம் பயின்ற சே குவேரா, வசதியான வாழ்க்கையைத் துறந்து, லத்தீன் அமெரிக்கா முழுவதும் மோட்டார் சைக்கிளில் பயணித்தார். அந்தப் பயணம், அவரது வாழ்க்கையின் திசையை மாற்றியது. மக்களின் வறுமையையும், பட்டினியையும், நோயையும் அவர் நேரில் கண்டார். முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் மக்களின் ரத்தத்தை எப்படி உறிஞ்சுகின்றன என்பதைப் புரிந்துகொண்டார். ஒரு மருத்துவராக இருந்து சிலரின் நோய்களைக் குணப்படுத்துவதை விட, ஒரு புரட்சியாளனாக இருந்து சமூகத்தின் நோயையே குணப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார்.
அந்த முடிவுதான் அவரை ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைத்தது. கியூபாவின் கொடுங்கோலன் பாடிஸ்டாவின் ஆட்சியை வீழ்த்த நடந்த புரட்சியில், ஒரு மருத்துவராக இணைந்த சே, தனது அபாரமான துணிச்சலாலும், போர்த் தந்திரத்தாலும் தளபதியாக உயர்ந்தார். கியூபப் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு, அவருக்கு அளிக்கப்பட்ட உயர்பதவிகளை அவர் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. கரும்பு வெட்டும் தொழிலாளர்களுடன் சேர்ந்து கரும்பு வெட்டினார், சாதாரண குடிமகனாக வாழ்ந்தார். அதிகாரம் என்பது மக்களுக்கான சேவைதானே தவிர, சுகபோகத்திற்கானதல்ல என்பதைத் தனது வாழ்க்கையின் மூலம் நிரூபித்தார்.
சே குவேராவின் கனவு கியூபாவுடன் முடிந்துவிடவில்லை. "உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு மனிதன் சுரண்டப்பட்டால், அது என்மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதுவேன்" என்றவர் அவர். தனது பதவிகளைத் துறந்து, ஒடுக்கப்படும் மக்களுக்காகப் போராட காங்கோவிற்கும், பின்னர் பொலிவியாவிற்கும் சென்றார். அவரது பார்வையில், புரட்சிக்கு எல்லைகள் கிடையாது.
பொலிவியாவின் காடுகளில், மிகக் குறைவான வீரர்களுடன், நோயுடனும், பட்டினியுடனும் அவர் போராடியபோதும், அவரது கண்களில் இருந்த கனலின் ஒளி குறையவே இல்லை. எதிரிகளால் சுற்றிவளைக்கப்பட்டு, உயிருடன் பிடிக்கப்பட்டபோதும், அவர் மண்டியிடவில்லை. அவரைச் சுட்டுக் கொல்ல வந்த வீரனிடம், "கோழையே, சுடு. நீ கொல்வது ஒரு மனிதனை மட்டுமே" என்று அவர் முழங்கிய கடைசி வார்த்தைகள், இன்றுவரை புரட்சியின் மந்திரமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
சே குவேரா ஒரு தனி மனிதர் அல்ல. அவர் ஒரு சித்தாந்தம். சுயநலமின்றி சமூகத்திற்காக வாழ நினைக்கும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அவர் வாழ்கிறார். அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரின் குரலிலும் அவர் ஒலிக்கிறார். சமத்துவமான, சுரண்டலற்ற ஒரு புதிய உலகை உருவாக்க வேண்டும் என்ற பெருங்கனவுதான் சே குவேரா.
அவரது உடல் புதைக்கப்பட்டு அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்றும் இளைஞர்களின் டி-ஷர்ட்டுகளிலும், போராட்டக் களங்களிலும், கோஷங்களிலும் சே குவேரா வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.ஏனெனில், சே என்பது வெறும் பெயர் அல்ல. அது விடுதலைக்கான தாகம். அது சமத்துவத்திற்கான போராட்டம். அது மரணமில்லாத ஒரு பெருங்கனவு. அந்த மாவீரனின் நினைவு நாளில், அவனது கனவை நம் இதயங்களில் ஏந்துவோம்.
சிவா சின்னப்பொடி.


