'யாருக்காகவும் பாஜக தவம் கிடக்கவில்லை' - விஜய் குறித்த கேள்விக்கு ராம சீனிவாசன் பதில்!
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, உண்மையில் அறிவு இருந்தால் அவர்கள் பாஜக தலைமையிலான தேஜ கூட்டணியில் இணைய வேண்டும் என ராம சீனிவாசன் கூறினார்.
தவெக தலைவர் விஜய்யை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்க முயற்சி நடக்கிறதா? என்ற கேள்விக்கு, யாருக்காகவும் நாங்கள் தவம் இருக்கவில்லை என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் பதிலளித்தார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சுதேசி சித்தாந்தத்தை விரிவுப்படுத்தவும், உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையிலும் 'சுதேசி திருவிழா' என்ற நிகழ்ச்சி தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் 26, 27, 28 ஆகிய மூன்று தினங்கள் நடைபெறுகிறது. இந்து தர்ம சேவா சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் முதல் நாளில் சுதேசி சந்தை, கருத்தரங்கங்கள், பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றது.
இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தில் பாஜக மாநில பொது செயலாளர் ராம. ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கள்ளக்குறிச்சியில் திராவிட மாடல் அரசு பல சாதனைகளை செய்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலர் இறந்து போனார்களே.. அதுவும் உங்கள் சாதனையா? அந்த சமயத்தில் ஏன் முதல்வர் கள்ளக்குறிச்சிக்கு வரவில்லை? அன்றைக்கு மக்களுக்கு விஷ சாராயம் கொடுத்தது எந்த மாடல்அரசு? இங்கு நடப்பவை எல்லாமே கேள்விக்கூத்துதான்" எனக் கூறினார்.
தொடர்ந்து, எஸ்ஐஆர் பணிக்கு பிறகு பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ராம சீனிவாசன், "ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் எத்தனை வாக்குகள் குறைந்திருக்கிறது என்று தேர்தல் கமிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் 50,000 வாக்குகள் குறைந்திருக்கிறது. இதற்கு யார் காரணம்? தூத்துக்குடி கலெக்டர் தான் காரணம். ஏனென்றால் அவர் தான் தேர்தல் அதிகாரி. இதனால் மாவட்ட ஆட்சியரை திமுக அரசு நீக்கி விடுமா?
தமிழக மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் எவ்வாறு எஸ்ஐஆர் பணிகள் நடக்கும்? தெரியாத்தனமாக எஸ்ஐஆர் நடவடிக்கையை எதிர்த்து விட்டோம், நீதிமன்றம் போய்விட்டோம் என்று தமிழக மக்களிடம் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் எத்தனை லட்சம் வாக்குகள் போயிருக்கிறது. ஆனால், திமுகவில் இருந்து யாராவது இதை எதிர்த்து கேட்டார்களா? தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் கேட்டாரா? இல்லையே. எனவே, எஸ்ஐஆர் நடவடிக்கையை எதிர்த்ததற்காக திமுக அரசு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என ராம சீனிவாசன் தெரிவித்தார்.
தொடர்ந்து, நடிகர் விஜய்யை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இந்த கேள்வி ஊடகத்தின் கற்பனை. அதற்கு நான் பதில் சொல்ல முடியாது. நாங்கள் யாருக்காகவும் தவம் இருக்கவில்லை. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். திமுகவிற்கு எதிராக வாக்குகள் சிதறக்கூடாது. திமுக இந்த முறை ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு உண்மையிலேயே அறிவும், நாணயமும் இருந்தால் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும்" என ராம சீனிவாசன் கூறினார்.


