Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் இடையூறாக இருக்கின்றன, மக்கள் காணிகளை உபயோகபடுத்த முடியாத சூழ்நிலை - வடக்கு ஆளுநர்.

காணி விடுவிக்கப்பட்டது என செய்தியை பிரபலமாக்கி ஜனாதிபதியும்,பிரதமரும்,அமைசார் சந்திரா குழுவினரும் மக்களிடம் வாக்கு கேட்பது!

விடுவிக்கப்பட்ட  இடங்களில் விவசாயம் செய்ய இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் இடையூறாக இருக்கின்றன. இவை தொடர்பாக ஆய்வுகள் செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவில் கடந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட காணிகளில் விவசாயச் செய்கையை விரைவுபடுத்துவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (22)  நடைபெற்றது. 

இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர் வேதநாயகன், கடந்த ஆண்டு ஆரம்பத்தில் மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கென காணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்தக் காணிகளில் மக்கள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பல இடர்ப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். இது தொடர்பாக விவசாயிகளால் எமக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, அவர்களுக்கான மின்சார வசதி இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பாதைகள் அமைக்கப்பட வேண்டும் என மின்சார சபையினர் கோருவதாகத் தெரிவித்தார். 

download__3_.jpg

பாதைகள் அமைப்பதற்கு சில இடங்களில் இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் இடையூறாக இருக்கின்றன. எனவே, இந்த விடயங்களைக் களைந்து விவசாயிகள் முழுமையாக விவசாயம் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

வீதிகள் செப்பனிடுவதற்கு இடையூறாக உள்ள பாதுகாப்பு வேலிகளை அகற்றுவது தொடர்பில் உரிய இடங்களுக்கு இராணுவத்தினருடன் நேரில் சென்று பார்வையிடுவதற்கும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

அதற்கு அமைய, விரைவில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி, வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான வீதிகள், பிரதேச சபையின் வீதிகள் என்பவற்றை உடனடியாக செப்பனிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளன என்று இதன்போது யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் குறிப்பிட்டார். 

மேலும், மின்சார இணைப்புக்கான கோரிக்கை கடிதத்தை முன்வைக்குமாறு மின்சார சபையினர் கேட்டுக்கொண்டனர். அதேவேளை பயனாளிகளின் மின்சார இணைப்புக் கட்டணத்தை வழங்குவதற்கும் யாழ். மாவட்டச் செயலர் இணக்கம் தெரிவித்தார். 

இதேவேளை, பயனாளிகள் விவசாயப் பணிகளில் ஈடுபடுவதற்காக காலையில் வந்து மாலையில் செல்ல வேண்டும் என்ற நிலைமை காணப்படுகிறது எனவும், அவர்கள் அங்கு கட்டுமானப் பணிகளில் ஈடுபட அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் இராணுவத்தினரிடம் முன்வைக்கப்பட்டது. அந்த மனிதாபிமானக் கோரிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடி பதிலளிப்பதாக இராணுவத்தினர் குறிப்பிட்டனர். 

மேலும், விவசாயக் கிணறுகளை புனரமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர் நடவடிக்கைகளை இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடனும் வலி. வடக்கு பிரதேச செயலர் தலைமையில் கலந்துரையாடுமாறு ஆளுநர் சபையில் பணிப்புரை விடுத்தார். 

இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்டச் செயலர், வலி.வடக்கு பிரதேச செயலர், வலி.வடக்கு பிரதேச சபைச் செயலரின் பிரதிநிதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், வீதி அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர், இராணுவத்தினர் ஆகியோர் பங்கேற்றனர்.