இலங்கையில் சீனாவின் முதலீடுகள்! இந்தியாவை மீறி இலங்கையால் செயற்படுவது மிகவும் கடினம்!
.
இந்தியாவை தாண்டி, சீனாவுடன் அநுர குமார திஸாநாயக்க நெருங்கிய உறவை பேணுவாரா என்ற கேள்விக்கும் அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் பதிலளித்தார்.
''இலங்கையில் சீனாவின் முதலீடுகள் என்பது இந்தியாவுக்கு பாதகமாக இருக்கக்கூடாது என்பது இந்தியாவின் நிலைப்பாடு. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் சீனாவின் முதலீடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது என்பது எதிர்பார்ப்பாகும்." என்கிறார் அவர்.
அடுத்தது சீனாவின் ராணுவ ரீதியான செயற்பாடுகளுக்கு இலங்கையில் எந்தவொரு இடமும் தளமாக அமையக்கூடாது என்பது இந்தியாவின் முக்கியமான கோரிக்கையாக இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டும் நிக்சன், "அதேவேளை, சீனாவும் அதே கோரிக்கையை முன்வைக்கின்றது. இந்தியாவுக்கு இலங்கை வழங்கப் போகின்ற ராணுவ தளங்கள் தொடர்பான விடயங்களை சீனா எப்போதும் கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றது. அந்த விடயத்தில் இலங்கை சமாந்திர போக்கை கையாள்கின்றது. இந்த இரண்டு நாடுகளின் அழுத்தங்களை எதிர்கொண்டாலும், இந்தியாவின் அழுத்தங்களை மீறி, இலங்கையினால் செயற்பட முடியாது." என்று கூறுகிறார்.
அதற்கான காரணத்தை விளக்கும் நிக்சன், "ஏனென்றால், பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா செய்த உதவி என்பது சீனாவை விட அதிகமானது. அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் வித்தியாசமானது. சீனாவுடன் நெருக்கமான உறவை பேணலாம் என்ற எதிர்வு கூறல் சிங்கள ஊடகங்களில் முன்வைக்கப்படுகின்றது. அது எவ்வளவு தூரத்துக்கு சாத்தியமாகும் என்று சொல்ல முடியாது."
"ஏனென்றால் ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஸ, சந்திரிகா போன்றோர் வகுத்த அந்த திட்டத்தின் அடிப்படையில் இலங்கையின் வெளியுறவு கொள்கை இருக்கின்றது. அதை விட புதிய திட்டத்தை அநுர குமார திஸாநாயக்க செய்யக்கூடிய வாய்ப்பு இல்லை." என கூறுகின்றார்.
''இந்தியாவை மீறி இலங்கையால் செயற்படுவது என்பது மிகவும் கடினமான விடயம். எட்கா உடன்படிக்கையை கையெழுத்திட வேண்டிய தேவை இருக்கின்றது. ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன இருந்த 2016ம்ஆண்டு காலப் பகுதியில் கொண்டு வரப்பட்ட உடன்படிக்கை இது. அந்த சந்தர்ப்பத்தில் அநுர குமார திஸாநாயக்க எதிர்கட்சியிலிருந்து இதனை கடுமையாக எதிர்த்திருந்தார். ஆனால், இன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் வைத்துக்கொண்டு இந்தியாவின் எட்காவை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு சென்றிருக்கின்றார்." என்று கூறினார் நிக்சன்.
உடன்படிக்கையில் மாற்றங்கள், திருத்தங்கள் என்று சொன்னாலும் கூட அந்த உடன்படிக்கையை கையெழுத்திட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் இலங்கை வந்துள்ளது என்று நிக்சன் கூறுகிறார்.