தமிழ்த்தேசியத் தரப்புகளின் அரசியல் வெறுமையும் மக்களின் நம்பிக்கையீனமும்!
.
ஜே.வி.பி தன்னுடைய கடந்த காலத்தைப் பரிசீலித்து என்.பி.பியாக எப்படி உருமாற்றம் பெற்றதோ அதைப்போல தமிழ் அரசியற் தரப்புகளும் யதார்த்தத்தை நோக்கி நகர வேண்டும். அதை விடுத்து கற்பனையில் குதிரையோட்டுவதால் பயனில்லை.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததோடு கலங்கிப்போயிருக்கின்றன தமிழ்த்தேசியவாத சக்திகள். ‘ஜே.வி.பியையோ தேசிய மக்கள் சக்தியையோ பொருட்படுத்த வேண்டியதில்லை. தமது அரசியலுக்கு ஜே.வி.பியோ, என்.பி.பியோ சவாலாக என்றுமே இருக்கப் போவதில்லை‘ என்ற தவறான மதிப்பீட்டுடனேயே தமிழ்த்தேசியவாதிகள் இதுவரையும் இருந்தனர்.
அந்தத் தவறான மதிப்பீட்டுக்கு விழுந்திருக்கிறது பலமான அடி. அதைப்போல தாம் எப்படி நடந்தாலும் எதைச் செய்தாலும் அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு தமிழ் மக்கள் தமக்கே வாக்களிப்பார்கள், தம்மையே ஆதரிப்பார்கள் என்ற இறுமாப்புக்கும் விழுந்துள்ளது சவுக்கடி. ஆக இரட்டைத் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றன தமிழ்த்தேசியத் தரப்புகள்.
நடந்து முடிந்த தேர்தல்களில் தமிழ்த்தேசியவாதிகள் பின்தள்ளப்பட்டு, என்.பி.பி முன்னிலைக்குக் கொண்டு வரப்பட்டதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியலின் தவறான கணிப்புகள் நொருக்கப்பட்டது. தமிழ்ச் சமூகமும் என்.பி.பியும் முகத்திலடித்தாற்போல ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை இவற்றுக்குக் கொடுத்துள்ளன.
இதனால் தடுமாறிப் போயுள்ளன இந்தத் தரப்புகள்.
என்றாலும் இந்தத் தோல்வியிலிருந்தும் வீழ்ச்சியிலிருந்தும் கற்றுக் கொள்ள முற்படாமல், ‘விழுந்தாலும் முகத்தில் பலமான அடியில்லை‘ என்ற மாதிரித் தொடர்ந்து கதை விட்டுக் கொண்டேயிருக்கின்றனர் தமிழ்த்தேசியவாதிகள்.
இதனால்தான் தமக்கு (தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு) ஏற்பட்ட தோல்வியானது, தாம் பல அணிகளாகப் பிளவுபட்டு நின்ற காரணத்தினாலே ஏற்பட்டது. எதிர்காலத்தில் மீளவும் ஒற்றுமைப்பட்டு, ஒன்றாக – ஒரே தரப்பாக நின்றால் மீண்டும் தம்மால் பெரு வெற்றியைப் பெற முடியும். தமிழ்த்தேசியவாதத்தை வலுப்படுத்த இயலும். தமிழ் மக்களைத் (தேசமாகத்) திரட்ட முடியும்‘ என்று அறியாமையில் புலம்பிக் கொண்டிருக்கின்றன. இந்த அடிப்படையில்தான் ‘உடனடியாக ஒற்றுமை அணியைக் கட்ட வேண்டும்‘ என்று கோரஸ்பாடத் தொடங்கியுள்ளன.
இதற்கான முயற்சிகள் உடனடியாகவே ஆரம்பித்து விட்டதாக ரெலோ ஒரு தோற்றத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. அண்மையில் வவுனியாவில் கூடிய ரெலோவின் உயர்மட்டக் குழு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மீள் நிலைப்படுத்த வேண்டும் என்று பேசியிருக்கிறது. அதற்கு முன் தமிழரசுக் கட்சியுடன் பேசி உடன்பாட்டுக்கு வருவதற்கு முயற்சிக்கிறது ரெலோ. ஆனால், இதற்கு தமிழரசுக் கட்சி வட்டாரத்திலிருந்து எந்தக் குரலும் எழவேயில்லை.
இன்னொரு தரப்பாகிய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) தலைவர் காங்கேசர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
புதிய அரசாங்கத்துடன் தீர்வைக் குறித்துப் பேசுவதற்கான தயாரிப்புத் தொடர்பாக இந்தச் சந்திப்பு நடந்தாகச் சொல்லப்பட்டாலும் அதற்கும் அப்பால் உள்ளுராட்சிச் சபை, மாகாணசபைத் தேர்தல்களின்போது தேசிய மக்கள் சக்தி தொடர் வெற்றிகளைப் பெறாமல் தடுப்பதற்கான வியூகத்தைப் பற்றிப் பேசவே இந்தச் சந்திப்புகள் என்று தெரிகிறது.
சிறிதரனைச் சந்தித்த கையோடு கஜேந்திரன்கள் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனைக் கிளிநொச்சியில் சந்தித்துள்ளனர். இங்கும் அதே விடயம்தான் பேசப்பட்டுள்ளது.
ஆனால், வெளியே தீர்வு யோசனைகளைப்பற்றியே பேசப்பட்டது எனக் கஜேந்திரன்கள் சொல்கிறார்கள். கஜேந்திரன்களின் கூற்றுப்படி பார்த்தால், தேசிய மக்கள் சக்தி இனப்பிரச்சினைக்கான தீர்வைப்பற்றி இன்னும் பேசவே தொடங்கவில்லை.
அது அரசியலமைப்பு மாற்றம் பற்றியே பேசி வருகிறது. அரசியலமைப்பு மாற்றத்தை அடுத்தே அதிகாரப் பரவலாக்கம் அல்லது அரசியற் தீர்வைப் பற்றிய பேச்சுகள் நடக்கும் என எதிர்பார்க்கலாம். அதற்கு முன்பாக ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க அரசியல் ரீதியான பயணமாக இந்தியாவுக்குச் சென்றார்.
அதையும் சேர்த்தே இனப்பிரச்சினைக்கான தீர்வைப்பற்றிய அணுகுமுறைகளும் நடவடிக்கைகளும் அமையும். அது கூட தேசிய மக்கள் சக்தி வைக்கப்போகின்ற தீர்வு யோசனைகள் அல்லது அரசியலமைப்பைப் பொறுத்தே எதையும் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். அதற்கு முன் இதுதான் நாங்கள் எதிர்பார்க்கின்ற தீர்வு. இதுதான் நமக்குக் கிடைக்க வேண்டும் என்று வவுனியாவுக்கு அப்பால் பேசுவதால் பயனில்லை.
யதார்த்த நிலை இப்படியிருக்க, தமிழ் மக்களுக்கு தீர்வைக் குறித்துத் தாம் படு சீரியஸாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்றொரு தோற்றத்தைக் காட்ட முற்படுகிறார்கள் கஜேந்திரன்கள்.
இதேவேளை, தேர்தலுக்கு முன்பு கஜேந்திரன்கள் எந்தளவு முறுக்கிக் கொண்டிருந்தார்கள் என்று அவர்களை அவதானித்துக் கொண்டிருப்போருக்குத் தெரியும். ஒரு நாடு இரு தேசம் என்றும் அதை ஏற்றுக் கொள்ளாத எந்தச் சக்தியோடும் தங்களுக்கு வாழ்நாளில் அரசியல் உறவே இல்லை என்ற மாதிரியும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அதெல்லாம் நடந்து முடிந்த தேர்தலோடு முடிந்து போய்விட்டது. அரும்பொட்டில் கிடைத்த வெற்றி – ஒரு உறுப்பினராவது கிடைத்ததே என்ற நிலை கஜேந்திரன்களின் ஞானக் கண்ணைத் திறந்து விட்டுள்ளது. உண்மையில் அவர்களுடைய இயலாமையே இதுவாகும்.
இது தேர்தலில் வெற்றியடைந்த அணிகளின் சந்திப்பு என்றால், தேர்தலில் தோல்விடைந்து படுக்கையில் கிடக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ஸ்ரீகாந்தாவின் தமிழ்த்தேசியக் கட்சி, விக்னேஸ்வரனின் தமிழ்த்தேசிய மக்கள் கூட்டணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்றவை அடுத்த கட்டம் என்ன என்றே தீர்மானிக்க முடியாமல் உள்ளன.
இந்த நிலைமை நீடித்தால் உள்ளூராட்சி சபைகளில் தமக்கு ஒன்றிரண்டு இடங்களைப் பிடிப்பதே கடினமாக இருக்கும் என்று அவற்றுக்குப் புரிந்துள்ளது. மாகாணசபையில் சொல்லவே வேண்டாம். தேர்தலில் நிற்காமலே மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
ஆனாலும் அரசியல் அபிலாசை விடாதல்லவா? அதனால் எப்படியாவது ஒரு கூட்டணியை அமைத்து விடுவோம் என்றே அவை சிந்திக்கின்றன. அதற்கு உடைந்து போயிருக்கும் இடுப்பு எலும்பைச் சரிப்படுத்த வேண்டும். அதாவது ஒரு பலமான தரப்போடுதான் கூட்டமைப்பை உருவாக்க முடியும்.
அப்படியென்றால் அது இப்போதைக்குத் தமிழரசுக் கட்சிதான்.
ஆனால், தமிழரசுக் கட்சியோ இந்தத் தரப்புகளைக் கண்டு கொள்ளாமல் விட்டுப் பிடிக்கிறது. ஆகவே, அதை இப்போதைக்கு வழிக்கு உடனடியாகக்கொண்டு வர முடியாது. அப்படி வந்தாலும் தமிழரசுக் கட்சியே செல்வாக்கை – ஆதிக்கத்தைச் செலுத்தும். இனிமேல் சம பங்கெல்லாம் கிடைக்காது.
தவிர, தமிழரசுக் கட்சிக்குள்ளும் ஏகப்பட்ட உள் வீட்டுப் பிரச்சினைகள் உண்டு. ஏற்கனவே கட்சி நீதிமன்ற வழக்கில் சிக்கியுள்ளது. அதை விட தலைமைப் போட்டியும் பிடுங்குப்பாடுகளும் தொடர்கின்றன.
எனவே, உடனடியாகத் தமிழரசுக் கட்சியோடு ஏனைய கட்சிகள் கூட்டு வைத்துக் கொள்ள முடியாது. அது மட்டுமல்ல, தேர்தலில் வெற்றியடைந்த தரப்புகள் மட்டும் அரசியல் பேச்சுகளுக்காக ஓரணியில் நிற்குமே தவிர, தோல்வியடைந்த தரப்புகளையும் இணைத்துக் கொண்டு செல்ல முடியாது என்று இந்த அணிக்குள்ளிருந்து கலகக் குரல்கள் வேறாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இதேவேளை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சிதான் உள்ளூராட்சித் தேர்தலுக்காக வெளியேறியது. தாம் ஒரு போதுமே வெளியேறவில்லை. ஆகவே மெய்யான தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தாமே என்று பிடிவதாகமாகச் சொல்லிக் கொண்டிருந்தவை, ரெலோவும் ஈ.பி.ஆர். எல்.எவ்வும். இருந்தும் அவை ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (DTNA) என்றே உத்தியோகபூர்வமாகத் தம்மைக் குறிப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படியெல்லாம் கசப்பான பிராந்தியமொன்றிருக்கும்போது அதை எளிதாகக் கடந்து வருமா? தமிழரசுக் கட்சி என்பது கேள்வியே!
அப்படித்தான் தமிழரசுக் கட்சி இணங்கி வந்தாலும் அது தோற்றுப்போன தரப்புகளுடன் எந்தளவுக்கு இணங்கி ஒட்டும் என்பது இன்னொரு கேள்வியாகும்.
இப்படி நெருக்கடிகள் நிறைந்த யதார்த்தப் பரப்பிருக்கும்போது அதைப் பொருட்படுத்தாமல் ஒற்றுமையைப் பற்றிக் கனவு காண்கிறார்கள் சிலர். இதை விட தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டுமானால், தனியே ஆயிரம் அணிகளின் சங்கமம் என்று சொல்லிக் கொண்டிருக்காமல் எந்த அடிப்படையில், எதற்காக, எந்த இலக்கை எட்டுவதற்காக எப்படியான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற தெளிவு இவற்றுக்கு ஏற்பட வேண்டும்.
ஏனென்றால் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் போன்றவற்றில் வடக்கு, கிழக்கில் என்.பி.பி வெற்றியைப் பெற்றது என்றால், அதற்குக் காரணம், தமிழ்த்தேசியத் தரப்புகளின் அரசியல் வெறுமையும் அவற்றின் மீது ஏற்பட்ட நம்பிக்கையீனமுமேயாகும். தமிழ்த் தேசியத் தரப்புகள் புதிய சூழலைக் கருத்திற்கொண்டு தம்முடைய அரசியலை வடிவமைக்காமையே பிரதான காரணமாகும்.
குறிப்பாக போருக்குப் பிந்திய சூழலையும் புலிகளுக்குப் பிந்திய நிலைமையையும் இவை கணக்கிடத் தவறின. பதிலாக 1970 களுக்குத் தமது அரசியலைப் பின்னோக்கி இழுத்துச் சென்றன. இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் எந்த முயற்சி எடுத்தாலும் அதனால் பயன் கிட்டப்போவதில்லை.
இது அவர்களுடைய அரசியல் இயலாமையையும் அரசியல் வரட்சியையுமே காட்டுகிறது. வரலாற்றிலிருந்தும் மக்களுடைய மனங்களிலிருந்தும் எதையும் படித்துக் கொள்ள விரும்பாத தன்மையைத் தெளிவாகச் சொல்கிறது.
என்பதால்தான் இப்படிச் சிறுபிள்ளைத்தனமாக யோசிக்கின்றன.
தமிழ்த்தேசியவாத அரசியற் கட்சிகள் மட்டுமல்ல, தமிழ் ஊடகங்கள், அரசியல் பத்தியாளர்களில் பலரும் கூட அப்படித்தான் தவறாகக் கருதிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. உண்மையான காரணத்தை ஆராய்ந்தறிந்து கொள்வதற்கு யாருமே தயாராக இல்லை.
மக்களின் மனமாற்றத்துக்கு உண்மையான காரணம், வெறுமையான தமிழ்த்தேசியவாத அரசியலின் மீது ஏற்பட்ட சலிப்பும் வெறுப்புமேயாகும். முக்கியமாக அதனுடைய உள்ளடக்கப் போதாமை, புதிய சவால்களைப் புரிந்து கொண்டு செயற்படக் கூடிய வளர்ச்சியின்மை, செயற்றிறனின்மை, நம்பிக்கையின்மை போன்ற பல பாதகமான விடயங்கள் தமிழ்த்தேசியவாத அரசியல் கட்சிகளை மக்களிடமிருந்து தூரத் தள்ளியுள்ளன.
இவற்றை இனங்கண்டு, புரிந்து கொண்டு தம்மை மீள்நிலைப்படுத்தாமல் வெறுமனே ஒற்றுமைக் கோசம் போடுவதாலோ ஒற்றுமை என்ற நாடகத்தை ஆடுவதாலோ மாற்றமேதும் நிகழப்போவதுமில்லை. வெற்றி கிடைக்கப்போவதுமில்லை.
வேண்டுமானால், ஒரு செயற்கையான கட்டமைப்பையோ கூட்டமைப்பையோ தற்காலிகமாக உருவாக்கி, அடுத்து வருகின்ற உள்ளூராட்சி, மாகாணசபை, பாராளுமன்றத் தேர்தல்களில் குறிப்பிட்டளவு தற்காலிக வெற்றியை இவர்கள் பெறலாம். அது தொடர்ந்தும் நீடிக்காது. அது மட்டுமல்ல, அந்த வெற்றி முன்னரைப்போல சில கட்சிகளின், அணிகளின், சில நபர்களின் வெற்றியாக அமையுமே தவிர, தமிழ் மக்களின் அரசியல் வெற்றியாக அமையாது.
பதிலாக ஜே.வி.பி தன்னுடைய கடந்த காலத்தைப் பரிசீலித்து என்.பி.பியாக எப்படி உருமாற்றம் பெற்றதோ அதைப்போல தமிழ் அரசியல் தரப்புகளும் யதார்த்தத்தை நோக்கி நகர வேண்டும். அதை விடுத்து கற்பனையில் குதிரையோட்டுவதால் பயனில்லை.
வடக்குக் கிழக்கில் என்.பி.பி பெற்ற வெற்றிக்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். அவை சரியானவையா? தவறானவையா? என்பது ஒருபுறமிருக்கட்டும். தாம் ஏன் தோற்கடிக்கப்பட்டோம்? என்பதைச் சரியாக ஆராய்ந்து அறிய வேண்டும். அதற்கென்ன வழிவகை என்பதை விஞ்ஞானபூர்வமாகக் கண்டறிய வேண்டும்.
இல்லையெனால் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் போக வேண்டியதுதான்.