இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் புதிய தீர்மானம் அவசியம் என்கிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி.
‘இலங்கை குறித்த முதலாவது தீர்மானம் 2012 இல் நிறைவேற்றப்பட்டு பல வருடங்களாகிவிட்டது’.

‘ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிர்காலத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு தமிழ் மக்களின் சம்மதத்தினை பெற வேண்டுமாயின் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் ஏனைய சர்வதேச நீதி கட்டமைப்புகளிலும் பாரப்படுத்தும், புதிய தீர்மானம் அவசியம்’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 58 வது அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானம் தொடர்பில் இணைஅனுசரணை நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதனை தெரிவித்துள்ளது.
2021 ஜனவரி 15ம்திகதியும் பெப்ரவரி 24ம் திகதியும் செப்டம்பர் 8 ம் திகதியும் 2022 பெப்ரவரி 25ம் திகதியும் கூட்டாக வெளியிட்ட கடிதங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி எடுத்துக்காட்டியுள்ளது.
அந்த தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என தெரிவித்திருந்தோம்.
‘அனைத்து முன்னைய தீர்மானங்களும் ஜெனீவாவில் பொறுப்புக்கூறலை தேக்கமடையச் செய்கின்றன’.
‘மேலும் இவை இலங்கைக்கு காலஅவகாசத்தை வழங்குகின்றன’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இரண்டு உறுப்பினர்களை கொண்டுள்ள இணை அணுசரனை நாடுகள், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நாங்கள் கேட்டிருந்தோம்’.
‘இலங்கையில் தொடரும் வன்முறைகளை கண்காணித்து அறிக்கையிடுவதற்காக விசேட அறிக்கையாளரை நியமிக்கும் வகையிலும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தோம்’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
‘இலங்கை குறித்த முதலாவது தீர்மானம் 2012 இல் நிறைவேற்றப்பட்டு பல வருடங்களாகிவிட்டது’.
‘எங்களின் எச்சரிக்கைகள் ஒவ்வொன்று சரியானவை என்பது நிரூபணமாகியுள்ளது’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
‘இந்தநிலையில் இலங்கையின் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் முன்னைய தீர்மானங்களை, இலங்கை விவகாரத்தில் தலையிடுபவை, அரசியல் நோக்கம் கொண்டவை என நிராகரித்துள்ளதுடன் உள்நாட்டு பொறிமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது’ என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உருவாக்கப்படும் எந்த பொறிமுறையும் உண்மையை கண்டறிவதை நோக்கமாக கொண்டிருக்கும் மாறாக பொறுப்புக்கூறலை நோக்கமாக கொண்டிராது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
‘இவ்வாறான சூழ்நிலைகளில் இந்த அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களை போல குற்றவாளிகளிற்கு எதிராக சுயவிருப்புடன் நடவடிக்கைகளை எடுக்காது என்பது மிகவும் தெளிவாக தெரியவந்துள்ளது’ என்று இணை அனுசரணை நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
‘குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவேண்டும் என்பதையே பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வலியுறுத்திவருகின்றனர்’. ‘மீளநிகழாமைக்கு இது மிகவும் அவசியம்’ என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.