பலதும் பத்தும்,,, 05,02,2025,
,
* “சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் வயது வந்தோருக்கான பள்ளிக்கூடம் உள்ளது.கேம்பஸ் ரிஸ்பெர்க்ஸ்கா என்று அழைக்கப்படும் இந்தப் பள்ளி, 20 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கிறது. இந்த பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவர்கள் பெரும்பாலானோர் தேர்வு முடிந்ததை அடுத்து தங்களின் வீடுகளுக்கு திரும்பினர். எனினும் ஒரு சில மாணவர்கள் பள்ளியில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் இந்த பள்ளிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 10 பேர் பலியானார்கள். அதை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். “
* யாழ்ப்பாணத்தில், வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் செவ்வாய்க்கிழமை (4) இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். யாழ். கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த தங்கவேல் விபுசன் (வயது 28) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். இருப்பினும் இரண்டு வருடங்களாக வேலை கிடைக்காத காரணத்தால் செவ்வாய்க்கிழமை (4) தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
* ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்வரும் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது வேறொரு சின்னத்தில் போட்டியிடுவதா என்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், இது தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் இதுவரையில் கலந்துரையாடவில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதே தற்போது கட்சியின் நிலைப்பாடாக காணப்படுவதாகவும், கட்சியில் பெரும்பான்மையானோர் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
* நெல் கிலோ ஒன்றின் விலை தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (05) வெளியிடப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்திருந்த நிலையில், நெல் கிலோ ஒன்றுக்கான அதிகபட்ச விலையை அரசாங்கம் சற்று முன்னர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, நாட்டு அரிசி கிலோ ஒன்றின் அதிகபட்ச விலை 120 ரூபாய் எனவும், சம்பா கிலோ ஒன்றின் அதிகபட்ச விலை 125 ரூபாய் எனவும், கீரி சம்பா கிலோ ஒன்றின் அதிகபட்ச விலை 132 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் தற்போதைய நெல் கொள்முதல் விலைகள் குறித்து விசனம் தெரிவித்து வந்த பின்னணியிலேயே, அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது.
* இலங்கை இராணுவத்தின் புதிய பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மாசி மாதம் 9ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் இராணுவத் தளபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
* நெல் கிலோ ஒன்றின் விலை தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (05) வெளியிடப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இன்று காலை 11 மணியளவில் விவசாய அமைச்சில் ஊடக சந்திப்பு இடம்பெறவுள்ள நிலையில், அதன்போது நெல் விலை தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒரு கிலோ நெல்லின் உற்பத்தி செலவுடன் 30 வீதம் சேர்க்கப்பட்டு இந்த புதிய விலை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்த பிரதி அமைச்சர், விவசாயிகள் சார்பாக பல வருடங்களாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் இதன் மூலம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் அரசாங்கம் நெல் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்காக தற்போது வரையில் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் கருணாரத்ன கூறினார்.