பெரியார் அவமதிப்பு : நாம் தமிழர் நிர்வாகி சிறையில் அடைப்பு!
,
பெரியார் சிலை மீது காலணி வீசியதை அடுத்து கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு தினம் நேற்று மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. சென்னை ஜாபர்கான் பேட்டையில் நடந்த நினைவு தின நிகழ்ச்சியில் அண்ணா மற்றும் பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது மேடையேறிய சென்னை நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பிரிவு செயலாளரான அஜய் (வயது 32), பெரியார் சிலை மீது காலணி வீசினார். இதனைக்கண்டு கொந்தளித்த திமுக மற்றும் பெரியார் அமைப்பினர் அஜயை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சீமானுக்கு எதிராகவும் அவர்கள் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து பெரியார் அமைப்பினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கைதான அஜய் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது பிப்ரவரி 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அஜய் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏற்கெனவே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியாருக்கு எதிராக சர்ச்சையாக கருத்து தெரிவித்து வருகிறார். அவர் மீது 70க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை கைது செய்யக் கோரி, பெரியார் அமைப்பினர் உட்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.