ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
,

ஜெர்மனியில் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஆட்சியில் இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பரில், கூட்டணிக் கட்சியை சேர்ந்தவரான நிதி அமைச்சரை சான்சலர் ஒலாப் ஸ்கால்ஸ் திடீர் பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வியுற்றதை தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில், ஒலாப் ஸ்கால்ஸின் சமூக ஜனநாயகக் கட்சிக்கும், முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் கிறிஸ்துவ ஜனநாயக யூனியனுக்கும் கடும் போட்டி இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், வலதுசாரி கட்சியான ஏ.எப்.டி, கட்சியும் கடும் போட்டியை அளித்து வருகிறது.
ஆளும் கட்சி சார்பில் ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU-CSU) சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர், சான்சலர் பதவிக்கான தேர்தலில் மோதுகின்றனர். பசுமை கட்சியின் ராபர் ஹபெக்கும் களத்தில் இருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் சான்சலர் ஆவதற்கே வாய்ப்புள்ளதாகவும், அவரது கன்சர்வேடிவ் கட்சியே முன்னணியில் இருப்பதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவுகளில் தெரியவந்துள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்புகளின்படி, பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சி (CDU/ CSU) கூட்டணி தேர்தலில் 28.9% வாக்குகளையும், தீவிர வலதுசாரி கட்சியான AFD (Alternative for Germany) 19.9% வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்து எதிர்க் கட்சியாக உருவெடுக்கும் என தெரியவந்துள்ளது. ஜெர்மனியின் தற்போதைய சான்சலர் ஓலாப் ஸ்கால்ஸின் SPD கட்சி 16% வாக்குகளுடன் 3வது இடம் பிடிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
ஜெர்மனி சான்சலர் பதவிக்கான தேர்தலில் பிரெட்ரிக் மெர்ஸ் வெற்றி உறுதியானதை தொடர்ந்து, ஒலாஃப் ஸ்கால்ஸ் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு பிரெட்ரிக் மெர்ஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த தேர்தல் முடிவுகளானது SPD கட்சியினருக்கு கசப்பானது என்றும் தெரிவித்துள்ளார்.