மகிழ்ச்சியில் சென்னை வாகன ஓட்டிகள்!, போக்குவரத்து சிக்னல்களில் 'பச்சை நிற பந்தல்' !
தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி கொண்டிருக்கிறது.

கொளுத்தும் வெயிலில் சற்று இளைப்பாற சென்னை மாநகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 போக்குவரத்து சிக்னல்களில் 'பச்சை நிற பந்தலை ' மாநகராட்சி அமைத்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கோடை காலம் துவங்குவதற்கு முன்னதாகவே சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. ஆனால் தற்போது மார்ச் மாதத்திலேயே வெயில் அதிக அளவு உணரப்படுகிறது. இன்னும் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் முடியாத நிலையில், சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டிருக்கிறது.
அதிலும் காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரையில் வெயில் அதிக அளவு உணரப்படுகிறது. ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் சிலர் வேலைக்காக வாகனங்களில் வெயிலில் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட நேரங்களில் பொதுமக்கள் வெயிலில் இருந்து பாதுகாக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சென்னையில் 14 இடங்களை தேர்வு செய்து போக்குவரத்து சிக்னல்களில் பச்சை நிற பந்தல் அமைத்துள்ளது.
எந்தெந்த இடங்களில் பச்சை பந்தல்?: வெயிலில் பல கிலோமீட்டர்கள் பயணித்து களைத்து வரும் வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்த பச்சை நிற பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்ட இந்த பந்தலானது தற்பொழுது வெயின் தாக்கம் அதிகம் இருப்பதால் முன்கூட்டியே போடப்பட்டுள்ளது.
அதன்படி பெரியமேடு ராஜா முத்தையா சாலையில் 15 அடி நீளம் - 10 அடி அகலம், ஐசிஎஃப் சிக்னலில் 20 அடி நீளம் - 11 அடி அகலம், நியூ ஆவடி சாலையில் 15 அடி நீளம் - 10 அடி அகலம், அண்ணா நகர் ரவுண்டானாவில் 20 அடி நீளம் - 12 அடி அகலம், சிந்தாமணி சிக்னலில் 15 அடி நீளம் - 10 அடி அகலம், அண்ணாசாலை பின்னி ரோட்டில் 30 அடி நீளம் - 12 அடி அகலத்தில் பசுமை நிற பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தியாகராய நகர் பசுல்லா சாலையில் 25 அடி நீளம் - 8 அடி அகலம், வடக்கு உஸ்மான் சாலையில் 25 அடி நீளம் - 8 அடி அகலம், திருவான்மியூர் அருகே இசிஆர் மேற்கு அவென்யூ சாலையில் 30 அடி நீளம் - 12 அடி அகலம், டைட்டல் பார்க் மேற்கு அவன்யூ சாலையில் 30 அடி நீளம் - 10 அடி அகலத்தில் பசுமை நிற பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருவான்மியூர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எல்.பி. சாலையில் 26 அடி நீளம் - 12 அடி அகலம், கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை அடையாறு சிக்னலில் 10 அடி நீளம் - 12 அடி அகலத்தில் பசுமை நிற பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி: இதுகுறித்து அயனாவரத்தை சேர்ந்த முத்து கூறுகையில், ''சிக்னல் அருகே உள்ள பந்தல் வெயிலில் இருந்து வந்து நிற்பதற்கு நன்றாக இருக்கிறது. பந்தல் இல்லை என்றால் வெயிலில் தான் நிற்க வேண்டும். சென்னை மாநகராட்சி செய்துள்ள இந்த செயல் பாராட்டுக்குரியது.
வாகனம் ஓட்டி வரும்போது பதற்றமில்லாமல் பொறுமையாக நின்று செல்ல வசதியாக இருக்கிறது. ஒரு சிலர் வெயிலில் நிற்க வேண்டும் என சிக்னலை கடந்து செல்வார்கள். தற்போது பந்தல் அமைக்கப்பட்டிருப்பதால் அவர்களும் நின்று செல்வதற்கு வசதியாக இருக்கிறது.
வயதானவர்கள் வாகனத்தில் வரும்போது வெயிலில் இருந்து அவர்களை காத்துக் கொள்ள முடிகிறது. பந்தல் போடுவதற்கு முன்னால் இதே வழியில் தான் சென்றிருக்கிறேன். வெயில் அதிகமாக தெரியும். ஆனால் தற்போது வெயில் தெரியாமல் நிழலில் நிற்பதற்கு நன்றாக உள்ளது.'' என முத்து தெரிவித்தார்.
ராயப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணகுமாரி கூறுகையில், ''பந்தல் போடப்பட்டு இருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. வெயிலில் இருந்து வந்து நிற்பதற்கு நன்றாக உள்ளது. குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்ல வெயிலில் நிற்காமல் சிக்னலில் பந்தல் அமைக்கப்பட்டு இருப்பதால் நிழலில் நிற்க முடிகிறது. அதேபோல் பந்தல் அமைக்கும் சிக்னலின் எண்ணிக்கையை உயர்த்தினால் நன்றாக இருக்கும்.'' என கிருஷ்ணகுமாரி தெரிவித்தார்.
மைலாப்பூரை சேர்ந்த பாபு கூறுகையில், ''கடந்த இரண்டு வாரங்களாகவே வெயிலில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஏப்ரல், மே மாதம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் அதிக அளவு இருக்கிறது. தற்போது சிக்னலில் பந்தல் போடப்பட்டிருக்கிறது. வெயிலில் வாகனத்தில் வந்து சிக்னல் நிழலில் நிற்கும்போது நன்றாக இருக்கிறது. வெயில் எப்படியும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் வரை இருக்கும். அதனால் அதிக இடங்களை தேர்வு செய்து பந்தல்கள் அமைக்க வேண்டும். அதேபோல போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் இந்த பந்தல்களை அமைக்க வேண்டும்.'' என பாபு தெரிவித்தார்.