'பொன்னியின் செல்வன்' ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்
,
![](https://www.sankathi.com/uploads/0068.jpg)
தமிழ் திரையுலகைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் உகலப் புகழ் பெற்ற அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
’பொன்னியின் செல்வன்’, ’இந்தியன் 2’, ’காற்று வெளியிடை’ ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளரான ரவிவர்மன், சர்வதேச அங்கீகரமான அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தில் உறுப்பினராக ஏற்கப்பட்டு இருக்கிறார். பெயருக்கு ஏற்றாற் போல் ஓவியங்களை படைப்பது போல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யக்கூடிய ரவிவர்மன் முதலில் மலையாள சினிமாவில்தான் பணியாற்ற ஆரம்பித்தார்.
அதன் பின் 2001இல் பைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒளி ஓவியம் தீட்ட ஆரம்பித்தார். பின்பு ’ஆட்டோகிராப்’, ’அந்நியன்’, ’தசாவதாரம்’, ’வேட்டையாடு விளையாடு’ என தமிழிலும் ’பிர் மிலேங்கே’, ’பார்ஃபி’, ’தமாஷா’, ’சஞ்சு’ என இந்தியிலும் முக்கிய படங்களுக்கெல்லாம் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
அவரது வாழ்வில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், ரவிவர்மன் பள்ளிக் கல்வியை முழுமையையாக முடிக்காதவர். ஆங்கில திரைப்படங்களைப் பார்த்துதான் ஆங்கிலம் கற்றுக்கொண்டார். ஹோட்டல் உட்பட பல்வேறு இடங்களில் சின்ன சின்ன வேலை பார்த்தே தனது முதல் கேமராவை வாங்கினார். அதிலிருந்து வளர்ந்ததே இந்த ஒளிப்பதிவு ஆர்வம்.
உலகம் முழுவதும் உள்ள திரைக்கலைஞர்கள் மதிக்கக்கூடிய சர்வதேச அங்கீகாரமாக கருதப்படுவது அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கம் (American Society of Cinematographers (ASC)). உலகின் பல்வேறு மொழிகளில் பணியாற்றும் பெரும்பான்மையான ஒளிப்பதிவாளர்களுக்கு இந்த சங்கத்தில் உறுப்பினராக இணைய வேண்டும் என்பது கனவு. அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள்.
அமெரிக்கர் அல்லாத, பிற நாடுகளில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர்கள் இந்த அங்கீகாரத்தைப் பெறுவது என்பது மிக மிகக் கடினமான ஒன்று. அதற்கு முதலில் எட்டு ஆண்டுகள் ஒளிப்பதிவாளராக பணியாற்றிருக்க வேண்டும். அதன் பின் பல ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒளிப்பதிவாளர்கள், ஒரு ஒளிப்பதிவாளரின் படங்களை பார்த்து, அவரது ஒளிப்பதிவின் தரத்தை சோதித்து, அதைப்பற்றி ஆலோசித்து, அதற்குப் பிறகு தான் கூட்டாக இந்த அங்கீகாரத்தை வழங்குவர்.
ஏற்கனவே தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ள ரவிவர்மன், சர்வதேச அங்கீகரமான ஏ எஸ் சி உறுப்பினராக ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து ரவி கே சந்திரன், விக்னேஷ் சிவன் என திரையுலகினர்பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி ரவிவர்மனிடம்,"ஏ எஸ் சி என்று அழைக்கப்படும் அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் உறுப்பினராக என்னை இணைத்துக் கொண்டதற்காக அதன் தலைமை மற்றும் குழுவினருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் எங்கும் உள்ள ஒளிப்பதிவாளர்கள் இந்த சங்கத்தில் இணைவதைக் கனவாக கொண்டிருப்பார்கள்.
ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளை வென்ற உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் உறுப்பினர்களாக இயங்கும் தளத்தில் நானும் இடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது," என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவனுக்கு பின்னர், அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தில் உறுப்பினராகும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை ரவிவர்மன் பெற்றிருக்கிறார். மேலும் ஆஸ்கர் விருதுகளை நடத்தி வரும் அகடாமி குழுவில் கடந்த ஆண்டு தான் ரவிவர்மன் உறுப்பினராக இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.