தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம்!
.
தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை கதிரையை முன்னாள் அவைத்தலைவரிற்கு வழங்கப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தரப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றது. இதன்மூலம் கட்சியை சீரழிப்பதற்கு சதிவலை பின்னப்பட்டுள்ளதென்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதானது துரதிஸ்டவசமானது. தமிழரசுக் கட்சிக்கு எதிராக நான்கு வழக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படை நோக்கமானது கட்சியை செயற்பாடுகளில் இருந்து ஓரங்கட்டுவதும், கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதுமாகும்.
அதற்கு காரணங்கள் உள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சி தான் தற்போது தமிழ் மக்களின் அதிகளவான பிரதிநிதித்துவங்களை கொண்டுள்ள கட்சியாகும்.
தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்த வேண்டுமெனக் கருதுகின்ற உள்நாட்டு வெளிநாட்டுச் சக்திகள் தமிழரசுக் கட்சியை அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவதன் மூலம் தான் தங்களின் இலக்கினை அடைய முடியும்.
ஆகவே, இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட எட்டு ஆசனங்களை வடக்கு – கிழக்கில் வென்றெடுத்து தனது செல்வாக்கை நிரூபித்துள்ள தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கட்சிக்குள் இருப்பவர்களையும், வெளியில் இருப்பவர்களையும் பயன்படுத்தி கட்சியை பலவீனப்படுத்துவதற்கு முனையும் தரப்புக்கள் பாரிய சதிவலையொன்றை பின்னியிருக்கின்றார்கள் எனவும் சீ.வீ.கே.சிவஞானம் எச்சரித்துள்ளார்.