'ஒரே நாளில்' முடிவுக்குக் கொண்டு வர முடியும்! ; ரஷ்யாவுடன் சமரசம் செய்யுமாறு யுக்ரேனை நிர்பந்திக்கும் டிரம்ப்!
.

தேர்தல் பிரசாரத்தின் போது, ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான போரை 'ஒரே நாளில்' முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று டிரம்ப் பலமுறை கூறினார். ஆனால், அதுகுறித்த கூடுதல் விவரங்களை அவர் அளிக்கவில்லை.
2022ஆம் ஆண்டில் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, யுக்ரேனுக்கு வழங்கப்பட்ட பில்லியன்கணக்கான டாலர்மதிப்பிலான அமெரிக்க ராணுவ உதவி குறித்து டிரம்ப் நீண்டகாலமாக விமர்சித்து வருகிறார்.
இதனால், போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யாவுடன் சமரசம் செய்யுமாறு யுக்ரேனை டிரம்ப் நிர்பந்திப்பார் என்ற அச்சம் யுக்ரேன் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்தது.
யுக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கான டிரம்பின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட கீத் கெல்லாக் என்பவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஜனவரியின் தொடக்கத்தில், ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய கெல்லாக், '100 நாட்களுக்குள் இந்த விவகாரத்தில் ஒரு தீர்வை எட்டுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகக்' கூறினார்.
ரஷ்யாவுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க யுக்ரேன் ஒப்புக் கொண்டால் மட்டுமே, அந்நாடு அமெரிக்காவின் உதவியைப் பெற முடியும் என்று கெல்லாக் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு ஆய்வறிக்கையில் முன்மொழிந்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தன்னைச் சந்திக்க விரும்புவதாகவும், தனது குழுவினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஜனவரி 20ஆம் தேதி வெள்ளை மாளிகைக்குள் அவர் கால் பதிக்கவுள்ளார்.
அமெரிக்க அதிபராக அவரது இரண்டாவது பதவிக்காலம், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளது.
ஏனெனில் அவர் 'அமெரிக்காவுக்கே முன்னுரிமை' (America First) என்ற திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறார். இது அமெரிக்காவின் எல்லைக்கு அப்பால் வாழும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும்.
இதற்கு முன், 2017 முதல் 2021 வரை அமெரிக்க அதிபராக இருந்தார் டிரம்ப். அவரது இரண்டாவது பதவிக்காலத்தில், சில முக்கிய சர்வதேச பிரச்னைகளை எவ்வாறு அணுகக்கூடும் என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.