Breaking News
மனிதனின் நோய்களும், இயற்கை தரும் தீர்வுகளும்!
சித்திரை முழு நிலவு . சித்தர்களை நினைவு கொள்ளும் நாள் ! இது சித்தர்களின் அறிவைப் பேற்றும் சித்த மருத்துவம் எனும் தமிழ் மருத்துவத்தின் பீடுகளைக்கூறுவது .
.jpg)
மனிதனின் நோய்களும், இயற்கை தரும் தீர்வுகளும்!
தன்னை சுற்றிலுமுள்ள பிரம்மாண்ட இயற்கையின் ஒரு அங்கமே மனிதன்! யாவற்றையும் தானே ஆள்வதாக மனிதன் நினைத்தாலும், இயற்கையால் தான் அவன் ஆளப்படுகிறான். இயற்கையின் கருணையே மனித வாழ்க்கை. நம் நோய்களுக்கான மருந்துகளை நமக்கு அருகிலேயே உருவாக்கி தரும் இயற்கையின் சூட்சுமங்களை பார்ப்போம்;
பொதுவாக இயற்கையை ஆய்வு செய்வதென்பது அறிவியலின் மிகப்பெரிய ஒரு பகுதியாகும். பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் , இயற்கையின் ரகசியங்களை உணர்தலே ஆகும்.காலம் காலமாக இருப்பதை அது ஏன் என்று தான் அறிவியல் கேட்டு, பதில் பெறுகிறது . ஆப்பிள் என்றுமே காலம் காலமாக, மரத்தில் இருந்து கீழே தான் விழுகிறது. நியூட்டன் தான் அது ஏன் கீழே விழுகிறது, என்று கேட்டு அந்த விசைக்கு ஒரு பெயர் கொடுக்கிறார். விசை என்னவோ அவர் செய்தது இல்லை, பெயர்தான் அவர் தந்தது!
உயிரினம் மற்றும் உயிரின அறிவு போன்றவையும் இயற்கையில் அடங்கும். இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தையும் இணைத்து இயற்கை என்கின்றோம். மனிதனும் தோன்றி மறைவதால் , அவனும் இயற்கையின் ஒரு அங்கம் தான். இயற்கையை வெல்ல, மரணமில்லா பெருவாழ்வு வாழ்வது தான் சித்தர்களின் தேடல். அவைகளைப் பற்றி பிறகு பார்ப்போம் .
மனிதர்களும் இயற்கையின் ஒரு பகுதியே ஆவர். மனிதன் இயற்கையின் கூறுகளான ஐம்பூதங்களில் இருந்து தான் ஆற்றலை பெறுகிறான். பூதம் என்பதை ஆராய்வதே பௌதீகம் எனப்படுகிறது. இயற்கை என்பது, மரங்கள் செடிகள் தன்னை சுற்றி இருக்கும் காற்று வெளிச்சம் நீர், ஆறுகள், கடல், இவை யாவுமே இயற்கை தான்! இந்த இயற்கையில் ஒரு அம்சம் தான் மனிதன் கூட ! ஆனாலும், மனிதன் என்பவன் மனம் ஒன்று அதிகமாக இருப்பதால், அது கூறும் வகையில் எல்லாம் நடந்து, அது நடத்தும் வழி எல்லாம் பயணித்து, தனக்குத் தானே தீமை விளைவித்துக் கொள்கிறான். இவ்வாறு அவனுக்கு வரும் பல தீமைகளில் ஒன்று நோய்கள்.
முதுமை, மரணம் என்பது வயது முதிர்ச்சியால் இயல்பாக ஏற்படும் விளைவுகள்! அதாவது பூ, காயாகி, பழமாவது போல் அது இயற்கை. ஆனால், நோயுறுதல் என்பது , இயற்கையை மதிக்காததால், இயற்கை பல முன் அறிவிப்புகள் தந்தும், மதிக்காத மனிதனுக்கு தரும் பாடம் தான் நோய்கள். அந்த நோய் என்பது இயற்கையில் இருந்து நாம் நழுவி போவதையே குறிக்கிறது.
இவ்வாறு ஏற்படும் இத்தகைய நோய்களுக்கான தீர்வை அதே இயற்கை தான் தருகிறது. அதில் தான் நோய்களுக்கான தீர்வும் இருக்கிறது. எது அந்த நோயை ஏற்படுத்துகிறதோ, அங்கே தான் அதற்கான தீர்வும் இருக்கிறது. தீர்வுடன் சேர்த்து தான் அந்தச் செயலும் வருகிறது. நோயுடனே அதற்கு தீர்வும் சேர்ந்தே வருகிறது .
மனிதனுக்கு வரும் நோய்களைப் பற்றி பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து கவனித்து, அது குறித்து தீவிரமாக சிந்தித்து தெளிந்த பல உண்மைகளை சித்தர்கள் என்போர் வடித்தனர். இதன் வழி தத்துவங்கள், நெறிமுறைகள், மருத்துவம் முதலியவற்றை நமக்கு தந்து சென்றிருக்கிறார்கள்.
எத்தகைய ஒரு நெடுங்கால பழமையான தேசிய இனத்திற்கும், தங்கள் உடல் நலம் குறித்த சரியான தெளிதல் நிச்சயம் இருக்கும். தங்களது பண்டைய மொழிகளில் அவைகளை பதிவு செய்தும் வைத்திருப்பார்கள்.
தமிழர்களும் அத்தகைய ஒரு பண்டைய தேசிய இனம் தான்! யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகெங்கும் பரவி வாழ்ந்த ஒரு மதிப்பு வாய்ந்த இனம். அவர்களுக்கு என்றும் அறுபடாத மரபு கொண்ட , பண்டைய செம்மொழி தமிழ் உண்டு. தமிழ் சித்தர்களின் தத்துவங்களுக்கும், பாடல்களுக்கும் தமிழின் செவ்விலக்கியங்களில் ஒரு முக்கிய இடம் உண்டு .
இப்போது இந்தத் தொடரில் மனிதர்களின் உடல் நலம் குறித்த சிந்தனைகளையும், பிறகு மன நலம், ஆன்ம ஒருமைப்பாடு இவைகளையும் சிந்திக்க இருக்கிறோம்.
இப்போது உங்களை சுற்றி, நீங்கள் வாழும் இடத்தை, ஊரை, சாலைகளை சுற்றும் முற்றும் பாருங்கள்! மீண்டும் ஒரு முறைப் பாருங்கள் !
நம்மைச் சுற்றி உள்ள அத்தனை செடிகள், மரங்கள் புல்கள் இவை அனைத்தும் நமக்கு கீரையாகவோ, மூலிகைகளாகவே பயன்பெறும் அரிய குணம் கொண்டதாக இருப்பது வியப்பாக இல்லையா ?
எப்படி நம்மைச் சுற்றி உள்ள தாவரங்கள் அத்தனையும் உயரிய மருத்துவ குணம் கொண்டதாக அமைந்திருக்கிறது. இது தற்செயலாக அமைத்துள்ளது என்று கொள்ளலாமா ?
ஆழ்ந்து சிந்திக்கும் போது நமக்கு சில உண்மைகள் தானே விளங்கும் . தொல் தமிழின் சித்தர்கள் மனிதர்களுக்கு வரும் நோய்கள் 4,448 என்று மொத்தமாக வகைப்படுத்தி இருக்கின்றனர்.
அவைகளில் தனித்தனியே மனித உறுப்புகளில் தோன்றும் நோய்களை பின்வருமாறு வகைப்படுத்தி இருக்கின்றனர்
1. தலையில் 307
2. வாயில் 18
3. மூக்கில் 27
4. காது 56
5. கண் 96
6. பிடரி 10
7. கன்னம் 32
8. கண்டம் 6
9. உந்தி 108
10. கைகடம் 130
11. குதம் 101
12. தொடை 91
13. முழங்கால் கெண்டை 47
14. இடை 105
15. இதயம் 106
16. முதுகு 52
17. உள்ளங்கால் 31
18. புறங்கால் 25
19. உடல் உறுப்பு எங்கும் பிற நோய்கள் 3,100
ஆக மொத்தமாக,மனிதர்களுக்கு வரும் நோய்களின் மொத்த எண்ணிக்கை 4,448 என்பனவாகும்!
இவ்வாறு மனிதர்களுக்கு வரும் , வரக்கூடிய நோய்கள் அத்தனையும் , பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சித்தர்களால் பதிவு செய்யப்பட்டுவிட்டது. இதில் நாம் பெருமை கொள்ளக் கூடாதா ? ஆனால் உரக்க சொல்ல மறந்து விட்டோம்.
மீதி கட்டுரையை இணையத்தில் படியுங்கள் . இணைப்பு கீழே !
அண்ணாமலை சுகுமாரன்
23/4/2024