" ஆப்கானில் ஆண்களையும் விட்டுவைக்காத கலாச்சார காவலர்கள்.. அடாவடியாக கைது! பொது இடங்களில் பெண்கள் பேசவே கூட மொத்தமாகத் தடை!
முடி திருத்தம் செய்யாத இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு ஹேர் கட் செய்த தொழிலாளர்களும் கூட கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தாலிபான் கலாச்சார காவலர்கள் ரமலான் மாதத்தில் மசூதிகளில் தொழுகைக்கு வராத ஆண்களைக் கைது செய்து வருகிறார்கள். மேலும், ஹேர் ஸ்டைல் விதிகளுக்கு உட்பட்டு இல்லாததால் அவர்களையும் முடிதிருத்தும் தொழிலாளர்களையும் கூட ஆப்கான் நாட்டின் கலாச்சார காவலர்கள் கைது செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த காலங்களில் அமெரிக்க ராணுவம் இருந்தது. அமெரிக்க ராணுவம் இருந்த வரை அஷ்ரஃப் கானி என்பவர் அதிபராக இருந்தார். அப்போது ஓரளவுக்கு ஆப்கான் நாட்டில் ஜனநாயகம் இருக்கவே செய்தது. ஆனால் கடந்த 2021ல் ஆப்கானிஸ் இருந்து திடீரென அமெரிக்கப் படைகள் வெளியேறின.
இதனால் ஆப்கான் ராணுவம் ஆட்டம் கண்டது. இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட தாலிபான் படை உடனடியாக ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 2021 ஆகஸ்ட் மாதம் ஆப்கனில் இருந்து தாலிபான் வெளியேறிய நிலையில், சில வாரங்களில் ஒட்டுமொத்தமாக ஆப்கானிஸ்தானை தாலிபான் படை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
முதலில் தனிநபர் சுதந்திரத்தில் தலையிட மாட்டோம் என்றே தாலிபான் அரசு சொன்னது. இருப்பினும் சில மாதங்களில் தனது நிலைப்பாட்டை மெல்ல மாற்றியது. கெடுபிடிகளை அதிகப்படுத்தியது. இதற்கிடையே போக்குவரத்து, இசை, சவரம் செய்தல் மற்றும் கொண்டாட்டங்கள் என பலவற்றுக்கும் புதிய விதிமுறைகளை வகுத்து ஆப்கான் நல்லொழுக்க துறை அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பை வெளியிட்டது.
அதில் தான் பொது இடங்களில் பெண்கள் பேசவே கூட மொத்தமாகத் தடை விதித்து இருந்தது. மேலும், பொது இடங்களில் பெண்கள் தங்கள் முகத்தைக் காட்டக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
அதே மாதத்தில் பெண்களுக்கு எதிராக வேலைவாய்ப்புகளில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கல்வி மற்றும் ஆடை விவகாரங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது ஆப்கானிஸ்தான் எதிர்காலத்திற்கு நல்லது இல்லை என்று ஐ.நா அதிருப்தி தெரிவித்திருந்தது. இருப்பினும் ஐநாவின் எதிர்ப்பை தாலிபான் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இதற்கிடையே இப்போது ஆப்கானில் ஆண்கள் மீதும் அடக்குமுறைகளைத் தொடங்கியுள்ளது. அங்கு இணக்கமான தாடி அல்லது முடி திருத்தம் செய்யாத இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு ஹேர் கட் செய்த தொழிலாளர்களும் கூட கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ரம்ஜான் மாதத்தில் ஆப்கானிஸ்தானில் அனைவரும் கட்டாயம் தொழுகைக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், சில ஆண்கள் தொழுகையை மிஸ் செய்ததாகத் தெரிகிறது. அதுபோல தொழுகையைத் தவறவிட்ட ஆண்களையும் குறிவைத்து தாலிபான் அமைப்பினர் இப்போது கைது செய்து வருவதாகக் கூறப்படுகிறது.