ஜனாதிபதி வெளியிட்ட கருத்து, நாட்டின் நீதித்துறை சுதந்திரத்தின் மீதான கடுமையான தாக்குதல்!
இந்த அறிவிப்பு : நீதிமன்ற அவமதிப்புக்குரிய செயல் மாத்திரமன்றி, நீதிபதியின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு அழுத்தம் கொடுத்து நாட்டின் சட்டக் கலாச்சாரத்தை வீழ்த்தும் இழிவான முயற்சி
மஹரகமவில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு ஒன்றின் தீர்ப்பு குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட சர்ச்சைக்கரிய கருத்து, நாட்டின் நீதித்துறை சுதந்திரத்தின் மீதான கடுமையான தாக்குதலாகும் என பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேனவிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமிருந்து விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு நீதிமன்ற அவமதிப்புக்குரிய செயல் மாத்திரமன்றி, நீதிபதியின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு அழுத்தம் கொடுத்து நாட்டின் சட்டக் கலாச்சாரத்தை வீழ்த்தும் இழிவான முயற்சி என்பதால், இது குறித்து உடனடியாக தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதம நீதியரசரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பல்வேறு முக்கிய அரசியல் பிரதிநிதிகளால் பிரதம நீதியரசருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :அரசியல் பகுப்பாய்வு
நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பான மிக விபரீதமான ஒரு நகர்வை உங்களது கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றோம். மஹரகமவில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது உரையின் போது, நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள ஒரு வழக்கு தொடர்பில் குறிப்பிடுகையில், அதற்கு முந்தைய நாள் அந்த வழக்கின் விசாரணை நடைபெற்றதாகவும், அதன் தீர்ப்பு மே மாதம் 25ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அந்தத் தீர்ப்பை அமோக கைதட்டல்களுடன் வரவேற்பதற்குத் தயாராக இருக்குமாறும் அவர் அங்கிருந்தவர்களைக் கேட்டுக்கொண்டார்.
எமது நாட்டின் அரசியலமைப்பின் தூண்களாக விளங்கும் நீதித்துறையின் நேர்மை மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றில் மிக முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய இந்த அறிக்கையினால் நாம் அதிர்ச்சியடைந்துள்ளோம். இதனால் பல சிக்கல்கள் எழுகின்றன. வழங்கப்படவிருக்கும் தீர்ப்பு குறித்து ஜனாதிபதி முன்கூட்டியே அறிந்திருப்பதாகக் காட்டிக்கொள்கிறார். நீதி வழங்கப்படுவது மட்டுமல்லாமல், அது சந்தேகத்திற்கிடமின்றி வழங்கப்படுவதாக வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்பது எமது அரசியலமைப்பு முறையின் அடிப்படைத் தத்துவமாகும்.
விசாரணை முடிவடைந்தவுடன், சாட்சியங்களை மதிப்பீடு செய்து, சட்டத்துக்கு இணங்க தனது முடிவுக்கு வருவது ஒரு நீதிபதியின் கடமையாகும். அவரது மனச்சாட்சியே அவருக்கு ஒரே வழிகாட்டியாகும். தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர், அது குறித்து எந்தவொரு மூன்றாம் தரப்பினருடனும் நீதிபதி விவாதிப்பது அபத்தமானது. ஒரு தீர்ப்பு மூன்றாம் தரப்பினரை மகிழ்விக்கும் வகையில் அமைந்திருக்குமா, அதன் காரணமாக அத்தீர்ப்பை கைதட்டலுடன் வரவேற்பதற்கு அவர் தூண்டப்படுகிறாரா என்பது முற்றிலும் பொருத்தமற்ற, மற்றும் மிகவும் முறையற்ற ஒரு கருத்தாகும். இது நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் தெளிவான ஆற்றலைக் கொண்டுள்ளதுடன், இது மிகவும் தூரநோக்கிய மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமாகும். இந்த அபத்தமான கூற்று நீதிமன்ற அவமதிப்பைக் குறிக்கிறது என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
மிகக் குறைந்தபட்சமாக கூறினால், இது ஒரு நீதிபதிக்கு முன்னால் விசாரணையில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாக அவர் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கான ஒரு இழிவான முயற்சியாகும். இந்த அழுத்தமானது நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமிருந்து வெளிவருகிறது என்பது இந்நிலமையின் தீவிரத்தன்மையை மேலும் அதிகரிக்கின்றது. ஒரு நீதிபதி தனது உத்தியோகபூர்வ கடமைகளைச் செய்யும்போது, இந்த அளவிலான தீவிரத்தன்மை கொண்ட அழுத்தத்திற்கு, அதுவும் இந்த மட்டத்தில் ஆளாக்கப்படுவது சகித்துக்கொள்ள முடியாத அநீதியாகும். இது எமது சட்டக் கலாச்சாரம் மற்றும் விழுமியங்களின் அடித்தளத்தை இழிவாக அரித்துவிடுகிறது.
நமது நாட்டில் இன்னும் பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்று விளங்கும் சில நிறுவனங்களில் நீதித்துறையும் ஒன்றாகும். ஒரு இயங்கும் ஜனநாயகக் கட்டமைப்பிற்குள், இத்தகைய கொடூரமான தாக்குதல்களிலிருந்து நீதித்துறையைப் பாதுகாப்பதற்கு எமது கூட்டுச் சக்தியால் இயன்ற அனைத்தையும் செய்வது எமது உறுதியான தீர்மானமாகும். இந்த துயரரமான சூழ்நிலை குறித்து நீங்கள் பொருத்தமானதாகக் கருதும் நடவடிக்கைகளை எடுப்பதற்காக, இந்த சூழ்நிலைகளை உரிய மரியாதையுடன் உங்களது கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.


