முன்னாள் பெண் போராளி வெளிநாட்டில் உயிரிழப்பு.!
தேச விடுதலைக்காய் சுவாசித்த இதயம் ஒன்று தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது.
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் போராளி ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) ஆஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மறைந்த ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) விடுதலை போராட்டக் களத்தில் கடற்புலிகள் மகளிர் படையணியில் இருந்தவர் என கூறப்படுகின்றது.
போராட்ட காலத்தில் கடற்புலிகள் படையினை சேர்ந்த மகளிர் போராளி ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) பல்துறை பணிகளிலும் இறுதிவரை பயணித்தவர் என்றும் கூறப்படுகின்றது.
அதன் பின்னர் புலம்பெயந்து அவுஸ்திரேலியா அவர் சென்றதாகவும் , இந்நிலையில் சுகயீனம் காரணமாக ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) நேற்று (23.12.2025) உயிரிழ்நதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் மறைந்த முன்னாள் பெண் போராளி ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) க்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நினைவுப் பகிர்வு!
தேச விடுதலைக்காய் சுவாசித்த இதயம் ஒன்று தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது.
அன்றைய வெளியீட்டு விழா நிகழ்விற்கான வெளியீட்டுரையில் நான் பதிவு செய்த ஒரு பகிர்வு:
ஒரு நூலின் உயிர்ப்பானது நூலாசிரியர் திறமையில் தங்கியிருக்கின்றது. அவ்வாறு படைக்கப்படும் நூல்களே காலம் கடந்தும் வாழும்.
ஆனால் ஒரு விடுதலைப் போராட்ட நூலின் உயிர்ப்பானது ஒரு நூலாசிரியரின் போராட்ட வாழ்வியலை அடிப்படையாக கொண்டது. அதுவே அந்த நூலுக்கு உயிர்ப்பை கனதியை கொடுக்கின்றது.
அந்த வகையில் தான் எழுத்தாளர் ஆநதி அவர்களின் இந்த படைப்புகள் அவரின் போராட்ட வாழ்வியல் ஊடாக பார்க்கப்படுவதால் உயிர்ப்படைகிறது. சிறப்படைகிறது.
தமிழீழத் தாயகத்தில் அடக்குமுறையை எதிர்கொண்ட எவருக்கும் எழுகின்ற உரிமைக்கான எழுச்சி - அவரையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு போராளியாக இணைத்தது. போருக்குள் வாழ்வு, போருக்கான நிர்வாகம், தமிழீழ நிதித்துறையில் தமிழேந்தி அப்பாவுடன் நேரடிப்பணி, அமைதிக் காலத்தில் உள்ளக கல்வி மற்றும் கிடைத்த இடைவெளியில் யாழ் பல்கலைக்கழகம் சென்று கல்வி, மீளவும் போர்க்காலத்தில் நிர்வாகப்பணி என சுழன்ற ஒரு வாழ்வியலுக்குள் வாழ்ந்தவர்.
அந்த இடைவெளியில் ஒரு காதல் - அது கடிதமாகின்றது. அவரது காதலியும் ஒரு போராளி. ஆனால் கடிதம் கரைசேர முன்னரே, அந்தக் காதலி வெளிநாடு ஒன்று செல்வதற்கான ஏற்பாடு நடக்கின்றது.
அவர் அந்த கடிதத்தை அனுப்பாமலே அதனை ஈழநாதத்திற்கு அனுப்புகின்றார். அதுவும் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றது.
தாயக மண்ணை விட்டு வெளியே செல்ல அவருக்கு விருப்பமில்லை. மண்ணை காதலித்ததால் காதலை காற்றில் விடுகின்றார். ஆனால் காலம் அவர்களை சேர்த்து வைக்கின்றது.
இப்படியான ஒரு நூலாசிரியரின் கதைகள் - பதிவுகள் - பகிர்வுகள் தான் இவை.
அவரது அன்றைய காதலி இன்றைய துணைவியார் கடற்போர்க்களத்தில் காவியம் படைத்தவர்.
கடற்புலியாகி அதில் பயிற்சியாளராக செயற்பட்ட துடிப்பான போராளி. பல கடற்சண்டைகள் கண்ட போராளி. பல விழுப்புண்களை ஏற்று தமிழின விடுதலைக்காக களமாடிய கடல்புலி.
நெஞ்சை நிமிர்த்தி படை நடத்திய போராளி. ஆழ ஊடுருவிய சன்னங்களின் வலி, அவரை மீள எழுந்து நடக்கமுடியாத நிலைக்கு கொண்டுவந்துவிட்டது.
தாய்மண்ணை விட்டு விலகமறுத்து காதலை கரையில் வைத்த ஒருவர்,
உயிர்போகும் களங்களில் உயிர்ப்போடு செயற்பட்ட கடற்போராளியான அவரது துணைவர் என அவர்களை காலம் இணைத்தது.
அவுஸ்திரேலியக் கரையில் சேர்த்தது. இதுவும் காலத்தின் பரிசு தான்.
- கீதன் இளையதம்பி


