"அதிமுக, விஜய் கதவை மூட திருமாவளவன் யார்?'' - நயினார் நாகேந்திரன் நறுக்!
பிரதமர் நரேந்திர மோடியின் 121 ஆவது 'மனதின் குரல்' அனுமதியை ரத்து செய்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் 121 ஆவது 'மனதின் குரல்' (மன் கி பாத்) நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள நடுக்குப்பம் மீன் மார்க்கெட் அருகில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.
நடுக்குப்பம் பகுதி மக்களோடு மக்களாக இணைந்து பிரதமரின் 'மனதின் குரல்' நிகழ்ச்சியை காண வந்த நயினார் நாகேந்திரனுக்கு மீனவர்கள் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சியும், மக்களுக்கு பாஜக சார்பில் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதை முன்னிட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பாஜக சார்பில் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் அனுமதி கடிதம் கொடுத்த நிலையில் திடீரென காவல் துறையினர் இன்று (ஏப்ரல் 27) காலை பிரதமரின் 'மனதின் குரல்' நிகழ்ச்சி பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்று கூறி, உடனே நிகழ்ச்சிக்கான அனுமதியை ரத்து செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து பாஜகவினர் காவல் துறையினரோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பிறகும், அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து 'மனதின் குரல்' நிகழ்ச்சி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் பொதுமக்கள் மற்றும் பாஜகவினரோடு நடத்தப்பட்டது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், துணைத்தலைவர் கரு. நாகராஜன் மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பிரதமரின் 'மனதின் குரல்' நிகழ்ச்சியை தமிழ் மொழிபெயர்ப்பில் பொதுமக்களோடு சேர்ந்து கேட்டனர்.
இதன் பின்னர் நடுக்குப்பம் மீனவர்கள் சார்பில் மீனவ முறைப்படி நயினார் நாகேந்திரனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சிறிய படகு ஒன்றை அவருக்கு நினைவு பரிசாக வழங்கினார்கள்.
பிரதமரின் 'மனதின் குரல்' நிகழ்ச்சியை கேட்ட பின்னர் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''காஷ்மீர் சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. காஷ்மீர் சம்பவம் குறித்து பிரதமர் மனதின் குரல் நிகழ்ச்சியில் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் ஒலிபரப்பாகும் மனதின் குரலில் முக்கியமான நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களோடு பேசி அவர்களது நினைவுகளையும், நிகழ்வுகளையும் பிரதமர் மோடி பகிர்ந்து கொள்கிறார்.
இந்த முறை 121 ஆவது 'மனதின் குரல்' நிகழ்ச்சியை மக்களோடு நான் நின்று பார்த்தேன். கடந்த ஆண்டு இதே இடத்தில் நடைபெற்ற மனதின்குரல் நிகழ்ச்சிக்கு எங்களுக்கு அனுமதி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு காவல் துறையினர் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியாக இருக்கும் காரணத்தினால் காவல் துறை அதிகாரி பாஜக நிகழ்ச்சி நடத்தக்கூடாது என கூறினாரா? என்று தெரியவில்லை. காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு எங்களது கடுமையான கண்டனங்களை நாங்கள் பதிவு செய்கிறோம்.
துணை முதலமைச்சராக இருக்கக்கூடிய காரணத்தினால் அடக்குமுறையை கையில் எடுக்கலாம் என உதயநிதி ஸ்டாலின் எண்ண வேண்டாம். மக்கள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று எண்ணிவிட்டார்கள். ஆட்சி என்பது நிரந்தரமானது இல்லை என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.திருமாளவன் கூட்டணி கதவுகளை அடைத்தேன் என்று கூறியதாக சொல்கிறீர்கள். திருமாவளவன் ஒரு கூட்டணியில் இருக்கிறார். இவர் எப்படி அதிமுகவின் கதவையும், விஜயின் கதவையும் மூட முடியும்? அவரின் வீட்டு கதவை வேண்டுமானால் அவர் மூடிக் கொள்ளட்டும். அடுத்த வீட்டு கதவை திருமாவளவன் எப்படி அடைக்க முடியும்? அதிமுக, விஜய் கதவை மூட திருமாவளவன் யார்?'' என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வியெழுப்பினார்.