மாநில சுயாட்சியை காக்க முன்னாள் நீதிபதியை தலைமையாகக் கொண்ட குழு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!
சட்டப் பேரவையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை கொண்டுவந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

தமிழ்நாடு சட்டப் பேரவை இன்று தொடங்கியதும் செய்தித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது. கேள்வி நேரத்திற்கு பின் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதலமைச்சர் தாக்கல் செய்து உரையாற்றினார்.
முதலமைச்சர் தனது உரையில், “நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக இல்லாததால், கூட்டாட்சி தத்துவத்தினை கொண்ட நெறிமுறைகளை கொண்ட ஒன்றியமாக உருவாக்கினார்கள். இந்த சூழலில் மாநில மக்களின் உரிமைகளை போராடி பெற வேண்டியதாக உள்ளது,” என்று தெரிவித்தார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கு.மே.ஜோசப் அவர்களை தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் உறுப்பினர்களாக இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர். மு.நாகநாதன் ஆகியோர் இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.
இந்த உயர்நிலைக்குழுவிற்கு கீழ்க்கண்ட கொள்கைகள் குறித்து ஆய்வை நடத்தும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி,
- ஒன்றிய-மாநில அரசுகளின் உறவு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகளையும், நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஆணைகள், கொள்கைகள் மற்றும் ஏற்பாடுகளின் அனைத்து நிலைப்படிகளையும் உயர்நிலைக் குழு ஆராய்ந்து, மறுமதிப்பீடு செய்தல்.
- இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தற்போதுள்ள விதிகளை உயர்நிலைக் குழு ஆராய்ந்து, காலப்போக்கில் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு நகர்த்தப்பட்ட பொருண்மைகளை மீட்டெடுப்பது குறித்த வழிமுறைகளைப் பரிந்துரைசெய்தல்.
- உயர்நிலைக் குழு, மாநிலங்கள் நல்லாட்சி வழங்குவதில் உள்ள சவால்களை, அதை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்தல்.
- நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில், நிர்வாகத் துறைகளிலும், பேரவைகளிலும், நீதிமன்றக் கிளைகளிலும், மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிட உரிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்தல்.
- 1971-இல் அமைக்கப்பட்ட இராஜமன்னார் குழு மற்றும் ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த ஏனைய ஆணையங்களின் பரிந்துரைகளையும், 1971 முதல் நாட்டில் நிலவும் பல்வேறு அரசியல், சமூகம், பொருளாதார மற்றும் சட்டம் சார்ந்தவற்றில் உள்ள வளர்ச்சியினையும் உயர்நிலைக் குழு கருத்திற்கொள்ளுதல் வேண்டும்.
ஆகியவற்றை ஆராய்ந்து அறிக்கைகள் வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு 1974 ஏப்ரல் 16-ஆம் தேதி மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றியது நினைவுக்கூரத்தக்கது. அந்த நிகழ்வின் பொன் விழா நாளில் மீண்டும் மாநில சுயாட்சித் தீர்மானத்தை இன்றைக்கு நிறைவேற்றியிருகிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு.