மே – 18 எமது தலைமுறை கண்ட வலியும், வார்த்தைகளில் அடங்காத வேதனையும், குற்ற உணர்வும் நிரம்பிய நாட்கள்.
வலதுசாரி ரணிலும் சரி இடதுசாரி இன்றைய சனதிபதியும் சரி சிங்கள பேரினவாதத்தினை காவியே நிற்கின்றனர்

கனத்த இதயங்களோடு முள்ளிவாய்கால் நினைவு சுமந்து கூடியிருக்கும் தமிழீழ மக்கள் அனைவருக்கும் இந்நேர வணக்கம்!
மே – 18 எமது தலைமுறை கண்ட வலியும், வார்த்தைகளில் அடங்காத வேதனையும், குற்ற உணர்வும் நிரம்பிய நாட்கள்.
மக்களின் விடுதலைக்காக போராடிய போராளிகள் - விடுதலைக்காற்றினை சுவாசிக்கும் ஈர்ப்புடன் வன்னி மண்ணில் வாழ்ந்த தமிழ் பொதுமக்கள் என அனைவரையும் தமிழர்கள் என்பதற்காக அல்லது சிங்கள மேலாதிக்க வாதத்தினை எதிர்த்தமைக்காக எமது உறவுகள் பல்லாயிரக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட அந்த நாட்கள் எமது நினைவுகளில் மிக கருமையான நாட்களாகும்.
சர்வதேசம் - சர்வதேச சட்டங்கள் - காந்தியம் பேசிய இந்தியா என நாம் தமிழர்களாய் உலகப் பரப்பு பூராவும் அழுது கெஞ்சிக் கிடந்த காலம் அது. ஆதாரவற்றவர்கள் என்றால் என்ன என்பதை ஈழத்தமிழராய் நாம் மட்டுமல்ல உலக தமிழர்கள் உணர்ந்த இருள் சூழ்காலமும் அதுதான். இன்னுமொரு வார்த்தைகளில் கூறினால் தேசியத்தலைவர் பிரபாகரன் உருவாக்கி தந்த வலுவில் நின்று உலகை பார்த்த காலங்கள் இல்லாத போது நாம் செல்லாக் காசுகள் என்று முகத்திலறைந்தது போல் உணர்நத காலம் அது.
சர்வதேச கணிப்புக்கள் கூட பல லட்சம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஒப்புக்கொள்ளும் இந்த இனப்படுகொலை கொடூரத்தினை மே 18 என்கின்ற குறியீடு வரலாறுபூராவும் பாதுகாக்கின்றது.
1950களில் தொடங்கி 2009 முள்ளிவாய்க்கால் வரை நீண்ட இனப்படுகொலை வரலாறு இது. யூத இனப்படுகொலைகள், ஆர்மேனிய இனப்படுகொலைகள் என உலகம் நினைவில் வைத்திருக்கும் படுகொலைகள் போன்று இனத்துவ காரணங்களுக்காக கொல்லப்பட்டோம் என்கின்ற ஈழத்தமிழர்களின் குரலும் அமைகின்றது.
இன்றுவரை இந்த இனப்படுகொலைகளுக்கு சிங்கள அரசுவோ – சிங்கள சமூகமோ பொறுப்புக் கூறவுமில்லை. மன்னிப்புக்கேட்கவுமில்லை. அங்குமிங்கும் எழும் சிறிய குரல்களை தவிர சர்வதேசரீதியான நடவடிக்கைகளும் இந்த இனப்படுகொலைகளை புரிந்தவர்கள் மீது எடுக்கப்படவில்லை.
வருடம் தோறும் விடுதலைப் போரிற்கு ஆதரவளித்தவர்களையும், முன்னாள் போராளிகளைகயும் பட்டியல் போட்டு ஐநாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தனக்காக பயன்படுத்தும் சிறீலங்கா, தான் நடத்தியது இனப்படுகொலை என்பதை மறைக்க தனது புவிசார் வியூக பலத்தினை இன்றுவரை வீரியத்துடன் பயன்படுத்துகின்றது. காலி துறைமுகம் சீனாவிற்கு – திருமலை அமெரிக்காவிற்கு – யாழ்ப்பாணம் இந்தியாவிற்கு என்று போக்குக் காட்டி தன் இனப்படுகொலை குற்றத்தினை திறம்பட சிறீலங்கா மறைத்து – காத்து வருகின்றது.
இன்றும் கூட புலிகளை தடைசெய்ய வேண்டும் என்று விடாது சட்ட நடவடிக்கை எடுக்கும் இந்தியாவும் - இந்தியாவை பின்தொடரும் ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் கூட சிங்கள பாசிசம் நடத்திய இனப்படுகொலைகளை அர்த்தமுள்ள விசாரணைக்கு உட்படுத்தவில்லை. இந்த மோசமான கண்மூடித்தனமான புவிசார் அரசியலின் தொடர்ச்சிதான் இன்றும் தமிழர் தாயகம் மீது நடத்தப்படுகினற மண்பறிப்பு, குடியேற்ற நடவடிக்கைகள். தொடரும் இராணுவ குவிப்பும், புலனாய்வு வலையமைப்பும் ஈழத்தமிழர்களின் குரல் வளைகளை நெருக்கி வைத்துள்ளது. மெல்ல மெல்ல எமது நகரங்கள் அம்பாறை, திருமலை போன்று அறுத்தெடுக்கப்படுகின்றன. தமிழர் தேசம் என்பது அர்த்தமிழந்து வருகின்றது. தேசம் என்பது மண்மீதுதான் கட்டியெழுப்பப்பட வேண்டும். மண்ணை பறிப்பது தேசத்தினை இடித்தழிக்கும் நடவடிக்கையாகும்.
தந்தை செல்வா காலம் தொடக்கம் படிப்படியாக ஓங்கிஒலித்து வந்த ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான குரல் அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் பெரும் இனப்படுகொலை மூலம் முடக்கப்பட்டது என்கின்ற உண்மை இன்று எமது நடவடிக்கைகளை வலுவாக தாக்குகின்றது.
வலதுசாரி ரணிலும் சரி இடதுசாரி இன்றைய சனதிபதியும் சரி சிங்கள பேரினவாதத்தினை காவியே நிற்கின்றனர் என்பது முள்ளிவாய்க்காலிற்குப் பின்னர் நாம் அறிந்த வரலாறு. எவரும் ஈழத்தமிழ் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது மீண்டும் மீண்டும் வெளிப்படுகின்றுது.
இதற்கான எமது தீர்வுதான் என்ன? செல் நெறியென்ன?
இன்று தாயகத்தில் மிதிக்கப்படும் தமிழர் அபிலாசைகளை, தேசம் என்கின்ற உணர்வினை உலகளாவிய புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகம் அக்னிக் குஞ்சு போன்று பாதுகாக்க வேண்டும். நீங்கள் மறுப்பதை நாங்கள் கேட்டுக்கொண்டே இருப்போம் என உலகின் நான்கு மூலைகளிலிருந்தும் நாம் உரத்துக் கேட்க வேண்டும். அது ஈழத்தின் தேசியசுயநிர்ணய உரிமை என்ற பிரபாகரக் குரலின் எதிரொலி போன்று ஒலிக்க வேண்டும்.
அந்த குரலை வலுப்படுத்த தேவையான அரசியல் - சமூக – பொருளாதார வலுவினை எம் புலம்பெயர் சமூகம் திரட்ட வேண்டும். ஆவணக்காப்பகங்கள், வரலாற்று ஆவணங்கள் என பலவித வழிகளில் வலியும், வலுவும் கடத்தப்பட வேண்டும்.
தமிழீழ மக்களின் உரிமை போராட்டத்தை சிதைக்கும் திரைப் படங்கள் மூலம் அறிந்தோ, அறியாமலோ சொல்ல வந்த கருத்துக்களில் உள்ள அபத்தங்களை எமது வரலாற்றினை தலைமுறைகளுக்கு கையளிப்பதன் ஊடாக முறியடிக்க வேண்டும்.
அதற்கான விதைகளை இளம் தலைமுறைகளிடம் எமது தலைமுறை இடைவிடாது விதைக்க வேண்டும். மே-18 இதற்கான ஒரு வலுவான குறியீடு. இனத்தால் அழிக்கப்பட்டோம் என்பதன் எதிர்வினை இனத்தால் ஒருங்கிணைந்து வெல்வோம் என்பதாய் அமையட்டும்.
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்