17ஆம் திகதி ஆரம்பமான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (26) நிறைவடைகின்றன.
பரீட்சை நிறைவடைந்த பின்னர் ஏற்படக்கூடிய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸ் தவிசேட பாதுகாப்பு!
கடந்த 17ஆம் திகதி ஆரம்பமான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (26) இனிதே நிறைவடைகின்றன. பரீட்சை நிறைவடைந்த பின்னர் மாணவர்கள் மத்தியில் ஏற்படக்கூடிய தேவையற்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸ் தலைமையகம் விசேட பாதுகாப்புத் திட்டமொன்றை அமுல்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் பரீட்சை முடிந்த கையோடு மாணவர்கள் பாடசாலைச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது, மோதல்களில் ஈடுபடுவது அல்லது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இவ்வாறான அசம்பாவிதங்களைத் தவிர்த்து, சட்டமும் ஒழுங்கும் பேணப்படுவதை உறுதி செய்யவே இந்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன: பரீட்சை முடிந்தவுடன் மாணவர்கள் நேரடியாக இல்லங்களுக்குத் திரும்புவதை பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
பிள்ளைகளின் செயற்பாடுகள் குறித்து அதிக அவதானம் செலுத்தி, அவர்கள் தேவையற்ற குழு மோதல்கள் அல்லது வன்முறைகளில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் அல்லது வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
பாடசாலை வளாகங்கள் மற்றும் மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களை மையப்படுத்தி மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


