யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் புதிய தீர்மானம்!
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக நடைபெறும் போராட்டம் அரசியல் கட்சிகள் சாராத ஒரு மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்படும்
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (18) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, தையிட்டி தெற்கில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள “திஸ்ஸ விஹாரை" எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த கட்டடம், சட்டவிரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் சபையினால் அறிவித்தல் பலகை ஒன்று நாட்டப்பட வேண்டும் என்ற பிரேரணை சபையில் கொண்டுவரப்பட்டது.
குறித்த பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் சட்டவிரோத தையிட்டி விகாரையின் விகாராதிபதியின் பவுதவி உயர்க்காக எதிர்ப்பை தெரிவித்தும், தீர்மான பிரேரணை ஒன்று சபையில் முன்மொழியப்பட்டது.
குறித்த பிரேரணையையும் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதேவேளை, பிரதேச சபையின் உறுப்பினர்களால் தையிட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது
தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது என மூன்று மொழிகளிலும் விகாரைக்கு முன்பாக பெயர் பலகை நாட்டுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் நடத்தப்படும்.
இந்தத் தீர்மானங்கள் வலி வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் பூரண ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளன.
வலி வடக்குப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பத்மநாதன் சாருஜனால் கொண்டுவரப்பட்ட பிரேரணைகள் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. தையிட்டியில் அமைந்துள்ள “திஸ்ஸ விகாரை” சட்டவிரோதமானது என்றும், அதற்கு பிரதேச சபையில் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக நடைபெறும் போராட்டம் அரசியல் கட்சிகள் சாராத ஒரு மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்துள்ளனர். மக்கள் போராட்டமாக இருக்குமானால் தாங்களும் கலந்துகொள்வோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணை தலைமை சங்கநாயக பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புத்தசாசன சமயம் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தலைமையில் கொழும்பில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


