பிரான்ஸை முடக்கிய மாபெரும் போராட்டம்: நாடு முழுவதும் பதற்றம், 140 பேர் கைது!
தலைநகர் பாரிஸில் நிலைமை மிகவும் பதற்றமாகக் காணப்பட்டது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த சுமார் 80,000 காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர்.
பிரான்ஸ் முழுவதும் இன்று நடைபெற்ற மாபெரும் வேலைநிறுத்தம் மற்றும் கண்டனப் பேரணிகளால் நாடு ஸ்தம்பித்தது. அரசின் சிக்கன நடவடிக்கைகளைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் விடுத்த அழைப்பை ஏற்று, லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடியதால், பாரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி நடைபெற்ற "அனைத்தையும் முடக்குவோம்" போராட்டத்தைவிட, இன்றைய போராட்டம் மிகப்பெரும் எழுச்சியுடன் காணப்பட்டது. தொடருந்து சேவைகள் பாதியாகக் குறைக்கப்பட்டன, மூன்று ஆசிரியர்களில் ஒருவர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது, மருந்தகங்கள் கூட இந்த வேலைநிறுத்தத்தில் இணைந்துகொண்டன.
தலைநகர் பாரிஸில் உச்சகட்ட பதற்றம்
தலைநகர் பாரிஸில் நிலைமை மிகவும் பதற்றமாகக் காணப்பட்டது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த சுமார் 80,000 காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர். மேலும், 'சென்டார்' கவச வாகனங்கள், தண்ணீர் பீரங்கிகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. பாரிஸில் மட்டும் 21 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் 16 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. ஊர்வலத்தின் தொடக்கத்தில் சில பதற்றமான சூழல்கள் நிலவியபோதும், பெரிய மோதல்கள் எதுவும் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் மட்டுமல்ல... பற்றி எரியும் பிற நகரங்கள்
இந்தப் போராட்டம் பாரிஸில் மட்டும் முடங்கிவிடவில்லை. பிரான்சின் பிற முக்கிய நகரங்களிலும் போராட்டத்தின் தீப்பரவியது.
துலூஸ் (Toulouse): இங்குச் சுமார் 18,000 பேர் திரண்டனர். காவல்துறையின் தண்ணீர் பீரங்கியை எதிர்த்துப் போராட்டக்காரர்கள் நேருக்கு நேர் சாலையில் அமர்ந்து "எங்களை நடக்க விடுங்கள்" என்று கோஷமிட்டது அனைவரையும் கவர்ந்தது.
லீல் (Lille): ஊர்வலம் முக்கிய வீதியை நெருங்கியபோது, கூட்டத்தைக் கலைக்கக் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இங்குள்ள புகழ்பெற்ற தியேட்டரின் ஊழியர்கள், அதன் முகப்பில் போராட்டத்திற்கு ஆதரவாகப் பதாகையைத் தொங்கவிட்டனர்.
ரென் (Rennes): போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நேரடி மோதல்கள் வெடித்தன. இதன் காரணமாக ரென் தொடருந்து நிலையம் சுமார் ஒரு மணி நேரம் மூடப்பட்டது.
மாண்ட்பெல்லியர் (Montpellier): சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்கக் காவல்துறை கண்ணீர்ப்புகையைப் பயன்படுத்தியது. இங்கு 10 பேர் கைது செய்யப்பட்டு, 7 பேர் காவலில் வைக்கப்பட்டனர்.
புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி
மொத்த கைது: நாடு முழுவதும் 140 பேர் (75 பேர் காவல்).
காயமடைந்த காவலர்கள்: 8 பேர்.
பாரிஸைத் தவிர்த்த போராட்டக்காரர்கள்: 2,80,000க்கும் அதிகமானோர்.
பங்கேற்ற இளைஞர்கள்: 1,10,000க்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள்: சுமார் 11% அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் "மாக்ரோன் பதவி விலகு" (Macron Démission) என்ற கோஷம் ஓங்கி ஒலித்தது. கடந்த வாரப் போராட்டத்தைவிட இது மிகப் பெரியது என அரசுத் தரப்பே ஒப்புக்கொண்டுள்ளது. தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஓரணியில் திரண்டிருப்பதால், பிரான்சில் அரசியல் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சிவா சின்னப்பொடி.


