ஜெருசலேமின் மையப்பகுதியில் வெடித்த சீயோனிச எதிர்ப்புப் போராட்டம்!
இஸ்ரேல் தனது பலத்தைக் காட்ட முனையும் அதே நேரத்தில் , அதன் இதயப் பகுதியிலேயே கொடிகள் எரிக்கப்படுவது அந்த நாட்டின் உள்நாட்டுப் பிளவை அப்பட்டமாகக் காட்டுகிறது.
இஸ்ரேலியக் கொடிகள் எரிப்பு: ஜெருசலேமின் மையப்பகுதியில் வெடித்த சீயோனிச எதிர்ப்புப் போராட்டம்!
இஸ்ரேலின் 78-வது சுதந்திர தினம் (ஏப்ரல் 23, 2026) இன்று கொண்டாடப்படும் வேளையில், அந்நாட்டின் தலைநகரான ஜெருசலேமின் வீதிகளில் அரங்கேறிய ஒரு முரணான சம்பவம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இஸ்ரேலிய நாட்டின் உருவாக்கத்தையே எதிர்த்து வரும் தீவிர வைதீக யூதர்கள் (Ultra-Orthodox Jews), அந்நாட்டின் தேசியக் கொடிகளைத் தீயிட்டுக் கொளுத்தித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
மேற்கு ஜெருசலேமில் உள்ள மே ஷரீம் (Mea Shearim) என்ற பகுதியில் இப்போராட்டம் நடைபெற்றது. இந்தப் பகுதி காலம் காலமாகத் தீவிர வைதீக யூதர்களின் (Haredim) கோட்டையாகக் கருதப்படுகிறது. இஸ்ரேல் அரசு தனது 78-வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், ஆயிரக்கணக்கான யூதர்கள் திரண்டு இஸ்ரேலியக் கொடிகளைக் குவித்து வைத்துத் தீயிட்டுக் கொளுத்தினர்.
"சீயோனிசம் என்பது யூத மதத்திற்கு எதிரானது" போன்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஏந்தி அவர்கள் முழக்கமிட்டனர். இஸ்ரேலிய அரசின் எந்த ஒரு கொண்டாட்டத்திலும் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்றும், இஸ்ரேல் என்ற நாடு மத ரீதியாக அங்கீகரிக்கப்படாத ஒன்று என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
ஏன் இந்த எதிர்ப்பு? - ஆன்மீகக் காரணங்கள். ஒரு நாட்டின் குடிமக்களே அந்த நாட்டின் கொடியை எரிப்பது நமக்கு விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால், இவர்களுக்குப் பின்னால் ஒரு நீண்டகாலத் தத்துவார்த்தக் காரணம் உள்ளது,
மெசியாவுக்கான காத்திருப்பு: தீவிர வைதீக யூதர்களின் (குறிப்பாக 'நெதூரே கர்தா' போன்ற பிரிவினர்) நம்பிக்கைப்படி, யூதர்களுக்கான ஒரு நாடு 'கடவுளால் அனுப்பப்படும் மெசியா' (Messiah) வந்த பின்னரே உருவாக்கப்பட வேண்டும். தற்போதுள்ள இஸ்ரேல் நாடு அரசியல் ரீதியாகவும், மனித முயற்சியாலும் (Zionist Movement) உருவானது என்பதால், இதனை அவர்கள் ஒரு 'பாவமான செயலாகக்' கருதுகின்றனர்.
சீயோனிசம் vs யூத மதம்: இவர்களின் பார்வையில், சீயோனிசம் என்பது ஒரு மதச்சார்பற்ற அரசியல் சித்தாந்தம். இது யூத மதத்தின் தூய்மையைக் கெடுத்துவிட்டதாக இவர்கள் நம்புகிறார்கள். இஸ்ரேலிய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் உலகளாவிய சீயோனிச 'வழிகாட்டுபவர்கள்' (Handlers), இஸ்ரேலை ஒரு பலமான இராணுவ மற்றும் அரசியல் சக்தியாகக் காட்ட முயல்கின்றனர். ஆனால், அந்த நாட்டின் உள்ளேயே இருக்கும் இத்தகைய தீவிர மதக்குழுக்கள் அந்தப் பிம்பத்தைச் சிதைக்கின்றனர்.
இஸ்ரேலிய அரசாங்கம் இவர்களை ஒரு பெரும் தலைவலியாகவே பார்க்கிறது. ஏனெனில், இவர்களில் பெரும்பாலோர் இராணுவத்தில் சேர மறுப்பதோடு, அரசின் சட்டதிட்டங்களையும் ஏற்பதில்லை. இஸ்ரேல் தனது பலத்தைக் காட்ட முனையும் அதே நேரத்தில் , அதன் இதயப் பகுதியிலேயே கொடிகள் எரிக்கப்படுவது அந்த நாட்டின் உள்நாட்டுப் பிளவை அப்பட்டமாகக் காட்டுகிறது. "ஒரு தேசம் தனது சொந்த மக்களாலேயே (குறிப்பாக அந்த மதத்தின் தீவிரப் பற்றாளர்களாலேயே) அங்கீகரிக்கப்படாதது" என்பது ஒரு மிகப்பெரிய அரசியல் முரணாகும்
சிவா சின்னப்பொடி


