பாரிஸின் வான்வெளியில் ஒரு வலம்!
இன்று முதல் இல் து பிரான்ஸின் முதல் கேபிள் கார்!
வான்வெளியில் ஒரு வலம்: இல் து பிரான்ஸின் முதல் கேபிள் கார் (C1) இன்று சிறகடிக்கிறது!
சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்களின் இரைச்சல்களுக்கும், சலிப்பூட்டும் போக்குவரத்து நெரிசல்களுக்கும் (Embouteillages) விடைகொடுக்கும் நேரம் வந்துவிட்டது. இன்று முதல், பாரிஸின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் மக்கள் வானில் மிதந்தபடியே தங்கள் பயணத்தைத் தொடங்கலாம்!
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இல் து பிரான்ஸின் முதல் கம்பி வட ஊர்தியான 'சி1' (C1 - Câble 1) இன்று, டிசம்பர் 13, 2025 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படுகிறது.
பயணத்தின் சிறப்பம்சங்கள்.
வான்வழிப் பாலம்: இந்தத் திட்டம் Val-de-Marne மாவட்டத்தின் முகத்தையே மாற்றப்போகிறது. Créteil மற்றும் Villeneuve-Saint-Georgesஆகிய நகரங்களை இது இணைக்கிறது. இடையில் Limeil-Brévannes மற்றும் Valentonஆகிய பகுதிகளையும் தொட்டுச் செல்கிறது.
நேரமே மிச்சம்: வழக்கமாகப் பேருந்திலோ அல்லது காரிலோ சென்றால் ஏற்படும் நேர விரயத்தை இது பாதியாகக் குறைக்கிறது. வெறும் 17 நிமிடங்களில் 4.5 கிலோமீட்டர் தூரத்தை, எவ்விதத் தடங்கலுமின்றி வானில் பறந்தபடியே கடந்துவிடலாம்.
இடைவிடாத சேவை: வார நாட்களில் காலை 5:30 மணி முதல் இரவு 11:30 மணி வரையிலும், வார இறுதிகளில் (Le week-end) நள்ளிரவு 12:30 மணி வரையிலும் இது இயங்கும். ஒவ்வொரு 30 விநாடிகளுக்கும் ஒரு கேபிள் கார் (Cabine) வந்து கொண்டே இருக்கும்!
வசதிகள் என்னென்ன?
ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 10 பேர் அமர்ந்து செல்லலாம்.
இது அனைவருக்கும் ஏற்றது! நீங்கள் குழந்தைகளுக்கான தள்ளுவண்டி (Poussette), சக்கர நாற்காலி (Fauteuil roulant), பயணப் பொதிகள் (Bagage) அல்லது மிதிவண்டி (Vélo) என எதை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.
கீழே ஓடும் நெடுஞ்சாலைகளையும், தொடருந்து தண்டவாளங்களையும் மேலே இருந்து வேடிக்கை பார்த்தபடியே செல்வது ஒரு தனி சுகம் தானே!
கட்டணம் என்ன?
இதற்காகத் தனியாக அதிகப் பணம் செலவழிக்கத் தேவையில்லை. உங்களிடம் ஏற்கனவே இருக்கும் 'நவிக்கோ' (Passe Navigo) அட்டையே போதுமானது! தனியாகச் சீட்டு வாங்குபவர்களுக்கு, மெட்ரோ இணைப்பையும் சேர்த்து வெறும் 1.60 யூரோ மட்டுமே கட்டணம்.
பிரம்மாண்டத்தின் பின்னணி:
சுமார் 135 மில்லியன் யூரோ மதிப்பீட்டில், மூன்று ஆண்டுகள் உழைப்பில் இது உருவாகியுள்ளது. ஐரோப்பாவிலேயே மிக நீளமான நகர்ப்புற கேபிள் கார் திட்டம் இதுவாகும். தினமும் சுமார் 11,000 பயணிகள் இதில் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுருக்கமாக: இனி மெட்ரோ எண் 8 (Métro மூலம் Créteil – Pointe du Lac வந்து இறங்கினால், அங்கிருந்து வானில் ஏறி வீடு சென்று சேரலாம். தரைவழிப் பயணம் சலித்துப் போனவர்களுக்கு, இந்த வான்வழிப் பயணம் ஒரு இனிய வரப்பிரசாதம்!


