'இந்திய விரிவாக்கம்' தொகுதி JVP-இன் 'ஐந்து வகுப்புகளிலிருந்து' நீக்கப்பட்டது!
மக்கள் விடுதலை முன்னணி இயக்கம் மாகாண சபைகளை நிறுவுவதற்காக இந்தியாவுடன் ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கம் மேற்கொண்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராகவே ஆயுதம் ஏந்தியது.
தனது அரசியல் இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் கட்சி ஊழியர்களுக்காக நடத்தப்படும் கற்கைநெறியில் இனிமேல் ‘இந்திய விரிவாக்கம்’ பற்றி போதிக்கப்படாது எனத் தெரிவித்துள்ளார்.
ஒருவார கால இந்திய விஜயத்தின் பின்னர், கொழும்பில் ‘த ஹிந்து’ இதழுக்கு வழங்கிய நேர்காணலில் டில்வின் சில்வா மக்கள் விடுதலை முன்னணி நீண்டகாலமாக முன்னெடுத்து வரும் “ஐந்து வகுப்புகளை/ஐந்து கலந்துரையாடல்களை” கொண்ட அரசியல் கல்வித் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், “இந்தியா தொடர்பாக அதில் விசேடமாக எதுவும் உள்ளடக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான பிரதிநிதிகள் குழு இந்திய கலாசார உறவுகளுக்கான சபையின் (ICCR) அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டதோடு, இந்திய அரசியல் தலைவர்களைச் சந்தித்ததுடன் புதுடில்லி, குஜராத் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் முக்கியமான அபிவிருத்தி மற்றும் தொழினுட்ப நிறுவனங்களையும் பார்வையிட்டது.
கடந்த காலத்திலிருந்து குறிப்பிடத்தக்கதொரு திருப்பம்!
பல தசாப்த காலங்களாக, “ஐந்து வகுப்புகள்” எனப் பிரபலமாக அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் உள்ளக அரசியல் கல்வி நிகழ்ச்சித்திட்டமானது, பிராந்திய மேலாதிக்க அரசுகள் மட்டுமன்றி இலங்கையின் இடதுசாரி இயக்கம் குறித்தான விமர்சனப் பார்வைகள் உட்பட தமது கட்சியின் ஆழ வேரூன்றிய கருத்தியல் பயிற்சியைக் கொண்டிருந்ததுடன், கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணியின் பேச்சாளர்கள் கடுமையான இந்திய எதிர்ப்பை வெளிப்படுத்துவதைக் காணக்கூடியதாக இருந்தது.
எண்பதுகளின் பிற்பகுதியில் நிகழ்ந்த இரண்டாவது கிளர்ச்சியின் போது, மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் மாகாண சபைகளை நிறுவுவதற்காக இந்தியாவுடன் ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கம் மேற்கொண்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராகவே ஆயுதம் ஏந்தியது.
அக்காலத்தில் இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்பட்டதன் மூலம் இந்தியா ஒரு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை முன்னெடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கையைப் பின் தொடர்ந்தோருக்கு போதிக்கப்பட்டது. அந்தப் படைகள் பகிரங்கமாக ‘குரங்குப் படைகள்’ என இழிவுபடுத்தப்பட்டன.
இலங்கையின் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி சுதந்திரம், இந்திய விரிவாக்கம், இலங்கையின் இடதுசாரி இயக்கம் மற்றும் இலங்கைப் புரட்சியின் தந்திரோபாயங்களும் செல்ல வேண்டிய பாதையும் என்பனவே மக்கள் விடுதலை முன்னணியின் ஆரம்பகால ஐந்து வகுப்பு அரசியல் கல்வி நிகழ்ச்சித்திட்டம் ஆகும். அதில், “இந்திய வம்சாவளி” தமிழ் மக்கள் இந்திய விரிவாக்கத்தின் ஐந்தாவது படைப்பிரிவாகவே அடையாளப்படுத்தப்பட்டனர்.
எவ்வாறெனினும், தமது கட்சியின் தற்போதைய பாடத்திட்டத்தில் இந்தியாவை இலக்கு வைத்த எந்த விதமான பாட அலகுகளும் உள்ளடக்கப்படவில்லை என்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு விளக்கமளித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களுக்கு போதிக்கப்படும் தற்போதைய பாடத்திட்டத்தில் பொருளாதார நெருக்கடி, தேசிய இனப் பிரச்சினை, இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாறு, சோசலிசத்தை நோக்கிய பாதை மற்றும் போல்ஷ்விக் வகையிலான கட்சிக் கட்டமைப்பை உருவாக்குதல் பற்றிய பாடங்களே உள்ளடக்கப்பட்டுள்ளன.
“மார்க்சிசம் மற்றும் அரசியல் விழிப்புணர்வை போதிப்பதற்காக முதன்முதலாக 1968 டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட வகுப்புகள், காலச்சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது திருத்தப்பட்டுள்ளன” என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய விஜயமும் இந்திய செயற்றிட்டங்களும்
புதுடில்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை ஒரு “சுமுகமான” உரையாடல் என வர்ணித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, இந்தியாவுடன் சுமூகமான உறவைப் பேணுவதற்கான விருப்பத்தை அங்கு வெளிப்படுத்தியதாக ‘த ஹிந்து’ பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீநிவாசனுடன் இடம்பெற்ற நேர்காணலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தித்வா சூறாவளியிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை போன்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இந்திய ஆதரவுடன் செயற்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து இலங்கைக்குள் நிலவும் கரிசனைகள் தொடர்பாக ‘த ஹிந்து’ பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டில்வின் சில்வா, மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு இந்தியாவுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்பதை வலியுறுத்தியுள்ளார்.
“பாரிய திட்டங்கள் தொடர்பில் எமது நிலைப்பாடு இந்தியாவுக்கு மட்டுமே விசேடமானது அல்ல” என விளக்கிய அவர், பங்காளி நாடு எதுவாக இருப்பினும், அனைத்து முக்கிய திட்டங்களிலும் அவை பற்றிய தீர்மானங்களும் அவற்றின் செலவு, நியாயத்தன்மை மற்றும் அதனூடாக இலங்கைப் பொதுமக்களுக்குக் கிடைக்கும் நன்மைகளின் அடிப்படையில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனது விஜயத்தின் போது மாகாண சபைத் தேர்தல்கள், அதிகாரப் பகிர்வு அல்லது தேசியப் பிரச்சினை குறித்து எந்த விதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை எனவும், இந்த விஜயத்தின் போது அபிவிருத்தி ஒத்துழைப்பு குறித்தே கவனம் செலுத்தப்பட்டதாகவும் ‘த ஹிந்து’ பத்திரிகையின் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- சண்.பார்தீபன்


