புதிய பிரான்ஸ் அரசுக்குக் கடும் எதிர்ப்பு: 'தோல்வியாளர்களின் மறுவருகை' என எதிர்க்கட்சிகள் சாடல்!
"மாற்றமே இல்லாத இந்த அரசாங்கத்தின் தேர்வு பரிதாபகரமானது," - மரீன் லூ பென்
பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவின் புதிய அரசு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, பிரான்சின் எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன. "தோல்வியாளர்களின் மறுவருகை" என்றும், "இது ஒரு ஜனநாயகப் படுகொலை" என்றும் இடது சாரி கட்சிகள் சாடியுள்ளன. மறுபுறம், ஆளும் மக்ரோன் தரப்பினர் "செயல்பாடுகளில் தொடர்ச்சியை" உறுதி செய்யவே இந்த அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளதாகப் பதிலடி கொடுத்துள்ளனர்.
இடது சாரிகளின் கடும் தாக்குதல்
புதிய அரசுகுறித்து பிரான்சின் பிரபல வானொலிக்குப் பேட்டியளித்த தீவிர இடது சாரிக் கட்சியான 'La France Insoumise'ன் நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் கோக்ரெல், "இது தோல்வியாளர்களின் மறுவருகை. இந்த அரசு முன்பை விட இன்னும் தீவிர வலது சாரிகளால் ஆனது. இன்று பிரெஞ்சு மக்களின் கோபம் உச்சத்தில் இருக்கும், நாம் உலக ஜனநாயக நாடுகளின் மத்தியில் ஒரு கேலிக்கூத்தாகிவிட்டோம்," என்று கடுமையாகச் சாடினார்.
அதே கட்சியின் தலைவர் ஜோன்-லூக் மெலன்சோன், "திரும்பி வந்தவர்களின் அணிவகுப்பு இது, இந்த அரசு நீடிக்காது," என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பசுமை கட்சியின் தேசிய செயலாளர் மரீன் டொண்டலியர், "திறமையற்றவர்களுக்குப் பரிசு கொடுப்பதை மக்ரோனிஸ்டுகள் புதிதாகக் கண்டுபிடித்துள்ளனர்," என்று விமர்சித்துள்ளார்.
ஆளும் தரப்பின் விளக்கம்
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த மக்ரோன் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீன்-ரெனே கசனேவ், "செயல்பாடுகளில் ஒரு தொடர்ச்சி இருப்பதே நல்ல செய்தி. முடிவில்லாத மாற்றங்களால் பிரெஞ்சு மக்கள் சோர்வடைந்துவிட்டனர். நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள், நாட்டிற்குத் தேவையான சமரசங்களைக் காணக்கூடிய தகுதியானவர்கள்," என்று அரசின் நிலைப்பாட்டை விளக்கினார்.
வலது சாரிகள் மற்றும் கூட்டணிக்குள்ளும் எதிர்ப்பு
தீவிர வலது சாரிக் கட்சியான தேசிய பேரணியின் தலைவர் மரீன் லூ பென், "மாற்றமே இல்லாத இந்த அரசாங்கத்தின் தேர்வு பரிதாபகரமானது," என்று நிராகரித்துள்ளார்.
அதே சமயம், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் குடியரசுக் கட்சியினரும் (LR) அதிருப்தியில் உள்ளனர். அக்கட்சியின் தலைவர் புருனோ ரிடெய்லோ, "அரசாங்கத்தின் அமைப்பு, உறுதியளிக்கப்பட்ட மாற்றத்தைப் பிரதிபலிக்கவில்லை," என்று கூறியுள்ளார். குறிப்பாக, புருனோ லு மேர் மீண்டும் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டது குறித்து அவரது நெருங்கிய வட்டாரம், "இதுதான் எல்லா விமர்சனங்களுக்கும் மகுடம் வைத்தாற்போல் உள்ளது," என்று தங்கள் எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளது.
புதிய அமைச்சரவையில் 18 பேரில் 11 பேர் மக்ரோனின் மறுமலர்ச்சி கட்சியைச் சேர்ந்தவர்கள், நால்வர் மட்டுமே குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மீதமுள்ள துணை அமைச்சர்கள் பட்டியல், நாடாளுமன்றத்தில் பிரதமரின் கொள்கை விளக்க உரைக்குப் பிறகு வாரத்தின் நடுவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


