வேலணையில் அமரர் மகேஸ்வரனின் 18 ஆவது நினைவுகூரல் நாள் !
2008 ஜனவரி 1ஆங்கிலம் புத்தாண்டு தினத்தன்று பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் வைத்து ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் அமரர் மகேஸ்வரன்.
தீவக முன்னேற்றக் கழகம் ஏற்பாடு - வேலணையில் அமரர் மகேஸ்வரனின் 18 ஆவது நினைவுகூரல் நாள் !
முன்னாள் அமைச்சர் தியாகராச மகேஸ்வரனின் 18 ஆவது நினைவுகூரல் நாள் தீவக முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில் வேலணை மண்கும்பானில் இன்று ( 01) அனுஸ்டிக்கப்பட்டதுடன் அமரரது நினைவாக ஒருதொகுதி பாடசாலை மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இலங்கையின் முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் 18 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
இன்நிலையில் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சுவாமினாதன் பிரகலாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவுகூரல் நிகழ்வு இன்று (1) மாலை 3.30 மணியளவில் வேலணை மண்கும்பானில் உள்ள தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது அமரர் மகேஸ்வரனின் நினைவுகள் நினைவுகூரப்பட்டு திருவுருவப் படத்துக்கு சுடரேற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்பதாக அமரர் மகேஸ்வரன் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி அதாவது ஆங்கிலம் புத்தாண்டு தினத்தன்று கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் வைத்து ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
1966 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம் காரைநகரில் பிறந்த இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்த நிலையில், இந்து கலாசார அமைச்சராகவும் இருந்து மக்களுக்கான தனது பணியை முன்னெடுத்திருந்தார்.
அதனடிப்படையில் படுகொலை செய்யப்பட்ட அமரர் மகேஸ்வரனின் நினைவு நாளை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் திகதியன்று அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களால் அஞ்சலித்து நினைவு கூரப்பட்டுவருகின்றது.
இன்னிலையில் இன்று வேலணையில் தீவக முன்னேற்றக் கழகத்தினரால் அவரது நினைவுகள் நினைவுகூரப்பட்டதுடன் அவரது ஞாபகார்த்தமாக பாடசாலை மாணவர்களின் கல்வியை ஊக்குவிப்பதற்காக பாடசாலைக்கான கற்றல் உபகரணங்களுள்ளடக்கிய பொதி தீவக முன்னேற்றக் கழக தலைவர் சுவாமினாதன் பிரகலாதன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
இதனடிப்படைய 30 மாணவர்கள் தமது 2026 ஆம் ஆண்டுக்கான கல்வியை தடைகளின்றி முன்னெடுக்கும் வகையில் பயன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நினையுகூரல் நிகழ்வில் நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் குகானந்தன் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதினிதிகள், மாணவர்கள், பெற்றோர் என பலர் கலந்துகொண்டு அஞ்சலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


