வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்
மலர்ந்திருக்கும் பராபவ வருடப்பிறப்பை முன்னிட்டு விசேட வழிபாடுகளும், பூஜைகளும் இடம்பெற்று வருகின்றது.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப்பிரிவில் ஒலுமடு கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்தில் தமிழ், சிங்கள வருடப்பிறப்பை முன்னிட்டு விசேட வழிபாடுகளும், பூஜைகளும் பூசகர் மதிமுக ராசா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
பெருந்திரளான பொதுமக்கள் வழிபாட்டில் பங்கேற்றனர்.
இதேவேளை நாடளாவிய ரிதியில் உள்ள ஆலயங்களிலும் இன்று தமிழ், சிங்கள வருடப்பிறப்பை முன்னிட்டு விசேட வழிபாடுகளும், பூஜைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மலர்ந்திருக்கும் பராபவ புத்தாண்டை முன்னிட்டு, இன்று காலை நாடளாவிய ரீதியாக உள்ள ஆலயங்களில் விஷேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இலங்கையில் நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் தமிழ் சிங்கள சித்திரைப்புத்தாண்டு- பராபவ வருடப்பிறப்பு இன்று காலை 8 மணி 40 நிமிடத்துக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, இன்று காலை 9 மணி 32 நிமிடத்துக்கு பிறந்திருக்கின்றது.
தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை வழிபாடுகள் நடைபெற்றன.
சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ சுகுமார் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளின்போது நாட்டில் துன்பம் நீங்கி நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டை குறிக்கும் வகையில் கைவிசேடமும் வழங்கிவைக்கப்பட்டதுடன் ஆலய தரிசனம் செய்தவர்கள் தங்களுக்குள் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.
இதேவேளை மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு விசேட பூஜை இன்று காலை பக்திபூர்வமாக நடைபெற்றது.
ஆலய பிரதம குரு திருவேரக சர்மா தலைமையில் நடைபெற்ற இப் பூஜை வழிபாடுகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதுடன், கைவிசேடமும் ஆலயத்தில் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு குருக்கள்மடம் அருள்மிகு கிருஷ்ணன் ஆலயத்தில் சித்திரை புதுவருட விசேட பூஜை வழிபாடுகள் பக்தி பூர்வமான முறையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நடைபெற்றது.
ஆலயப்பிரதம குரு சிவ ஸ்ரீ சோமேஸ்வரம் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.
இதேவேளை புத்தளம் - உடப்புக் கிராமத்தில் உள்ள தமிழ் மக்கள் இன்று சித்திரைப் புத்தாண்டை மிகவும் பக்தி பூர்வமாகக் கொண்டாடினர்.
உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலயத்தில் சித்திரைப் புத்தாண்டு விஷேட பூஜைகள் நடைபெற்றன.
ஆலயத்தில் விஷேடஅபிஷேகம், பூஜைகள் நடந்த பின்னர், சுபநேரத்தில் சித்திரை மாதப்பிறப்பு பஞ்சாங்கம் ஆலயக்குருக்கள் சிவஶ்ரீபஞ்சாட்சரக் குருக்களினால் பக்தர்களின் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.
பக்தர்கள் பலர் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றுக்கொண்டனர்.


