பிரான்சில் கடுமையான வெப்ப அலை (Canicule) 40°C, என்ன நடக்கப்போகிறது?
வட ஆப்பிரிக்கா மற்றும் ஐபீரியத் தீபகற்பத்திலிருந்து (Péninsule Ibérique) வரும் அதீத வெப்பக் காற்றே இந்தத் திடீர் வெப்பநிலை!
புதன்கிழமை முதல் 40°C வெப்பநிலை பிரான்சில் என்ன நடக்கப்போகிறது?
கோடைகாலம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கு முன்பே, பிரான்சில் இரண்டாவது கடுமையான வெப்ப அலை (Canicule) வரும் புதன்கிழமை (ஜூன் 17) முதல் நாட்டைத் தாக்கவுள்ளது. வட ஆப்பிரிக்கா மற்றும் ஐபீரியத் தீபகற்பத்திலிருந்து (Péninsule Ibérique) வரும் அதீத வெப்பக் காற்றே இந்தத் திடீர் வெப்பநிலை மாற்றத்திற்குக் காரணமாகும்.
புதன்கிழமை முதல் பிரான்சின் வானிலை எப்படி இருக்கப்போகிறது.
40°C வெப்பமும் முறியடிக்கப்படும் சாதனைகளும்
வாரத்தின் தொடக்கத்தில் வானிலை இயல்பாக இருந்தாலும், புதன்கிழமைக்குப் பிறகு வெப்பம் கிடுகிடுவென உயரும். பகல் நேரங்களில் சில பகுதிகளில் நிழலிலேயே அதிகபட்சமாக 40°C வெப்பம் பதிவாகி, மாதாந்திர வெப்பச் சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளது. பகலில் மட்டுமல்லாமல், இரவு நேரங்களிலும் வெப்பம் பெரிய அளவில் குறையாமல் மக்களை வாட்டி வதைக்கும்.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நிலவரம்
Météo-France விடுத்துள்ள எச்சரிக்கையின்படி, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெப்ப அலையின் ஆபத்து எந்தெந்தப் பகுதிகளில் எப்படி இருக்கும் என்பது பின்வருமாறு:
நடுத்தர ஆபத்து: வடகிழக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில்.
அதிக ஆபத்து (Risque élevé): தென்கிழக்குப் பகுதிகளில்.
வெள்ளிக்கிழமை (ஜூன் 19) வெப்பநிலை: ஆக்செர் (Auxerre) நகரில் 35°C, பாரிஸ் மற்றும் கிளெர்மான்ட்-ஃபெராண்ட் (Clermont-Ferrand) நகரங்களில் 34°C, சலோன்-சுர்-சோன், லியோன் மற்றும் பௌர்ஜஸில் 33°C என நாட்டின் மையப் பகுதிகளில் கடுமையான வெயில் சுட்டெரிக்கும்.
வார இறுதியில் அதிகரிக்கும் ஆபத்து
இந்த வெப்ப அலை வார இறுதியில் (சனி, ஞாயிறு) பிரான்சின் ஒட்டுமொத்தப் பகுதிகளுக்கும் பரவி, நாடு முழுவதும் அதிகபட்ச ஆபத்தை (Risque le plus élevé) ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாத வெப்ப அலையை விட இது மோசமானதா? ஆம், இது கடந்த மே மாதம் பிரான்சைத் தாக்கிய வெப்ப அலையை விட மிகவும் தீவிரமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கான முக்கியக் காரணங்கள்,
நீண்ட பகல் நேரங்கள்: கோடை நெருங்குவதால் பகல் நேரம் நீண்டு, சூரியனின் தாக்கம் அதிக நேரம் இருக்கும். தற்போது நிலத்தடி ஈரப்பதம் குறைந்து மண் மிகவும் வறண்டு (Sols secs) காணப்படுகிறது. இதனால் பூமி தன்னைத்தானே குளிர்வித்துக் கொள்ளும் திறன் (Capacité à se rafraîchir) குறைந்து, பகலில் வெப்பநிலை மேலும் அதிரடியாகக் கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். (கடுமையான வெப்பம் நிலவ உள்ளதால், மக்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்கவும், மதிய வேளைகளில் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.)
- சிவா சின்னப்பொடி


