பொது மனுக்கள் தொடர்பான பரிந்துரைகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது!
,
பொது மனுக்கள் பற்றிய குழுவின் மூன்றாவது அறிக்கை அக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம்.காமினி ரத்னாயக்கவினால் கடந்த 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பொது மக்களுக்கள் பற்றிய குழுவில் 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 2025 டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொது மனுக்கள் தொடர்பான பரிந்துரைகள் மற்றும் குழுவின் கண்காணிப்புக்களை உள்ளடக்கியதாக பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 125 (5) இற்கு அமைவாக இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த காலப் பகுதியில் பொது மனுக்கள் பற்றிய குழு 15 அமர்வுகளை நடத்தியிருப்பதுடன், 89 பொது மனுக்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இவற்றில் 43 பொது மனுக்கள் பற்றிய பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருப்பது.
அத்துடன், 33 மனுக்களுக்கான நிவாரணங்கள் இதில் பரிந்துரைக்கப்படவில்லை என்பதுடன், 13 மனுக்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குழுவினால் கவனத்தில் எடுக்கப்பட்ட 89 மனுக்கள் தொடர்பான விபரங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பத்தாவது பாராளுமன்றத்தின் பொது மனுக்கள் பற்றிய குழு பாராளுமன்ற நிலையியற் கட்டளை 125 (5) ற்கு அமைவாக அதன் முதலாவது மற்றும் இரண்டாவது அறிக்கைகளை முறையே (பாராளுமன்ற வெளியீடு இலக்கம் 250 மற்றும் 390) 2025 ஓகஸ்ட் 7ஆம் திகதி மற்றும் 2025 டிசம்பர் 5ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.


