தங்கம், வெள்ளி விலை 2025ஆம் ஆண்டில் உயருமா?- நிபுணர்கள் பதில் !
.
2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து புதிய ஆண்டு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் 2025இல் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து நிபுணர்கள் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
எப்பொழுதுமே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வளர்ச்சி பாதையிலேயே இருந்து வருகிறது. குறிப்பாக 2024 ஆம் ஆண்டினை பொருத்தவரை தங்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் குறிப்பாக சீனா உள்ளிட்ட நாடுகளின் வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை வாங்கி இருப்பு வைப்பதே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கையை எடுக்கக்கூடும் என கணிக்கப்படுவதால் 2025 ஆம் ஆண்டிலும் தங்கத்தின் விலை ஏற்றத்திலேயே இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை 2024 ஆம் ஆண்டு தங்கம் விலை 20.8% உயர்ந்து உயர்ந்தது. இது 2025 ஆம் ஆண்டில் 15 முதல் 18 சதவீதம் வரை மேலும் உயரும் என Stoxkart என்ற நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது. Stoxkart நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரனாய் அகர்வால் தங்கத்தின் விலை 2025 ஆம் ஆண்டிலும் வளர்ச்சி பாதையில் இருக்கும் 15 முதல் 18 சதவீதம் வரை உயர்வதற்கு வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளார்.
2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து வளர்ச்சியில் தான் இருக்கும் என Heraeus Precious Metals என்ற நிறுவனமும் தெரிவித்துள்ளது. அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களுடைய வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் என கருதப்படுவதால் இது டாலரின் மதிப்பை வலுவிழக்க செய்யும் என இந்த நிறுவனம் கூறுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தை நோக்கிதான் அனைவரும் வருவார்கள் என சொல்லப்படுகிறது.
தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2711 அமெரிக்க டாலர்கள் ஆகும். இதுவே 2025 ஆம் ஆண்டில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2950 டாலர்கள் வரை உயரும் என இந்த நிறுவனம் கணித்துள்ளது. தொடர்ந்து உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவுவது, அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்க இருப்பது, சீன மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்து வருவது உள்ளிட்டவை இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில் தான் தங்கத்தின் தேவை 2025இல் அதிகரிக்கும் என ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூறுகிறது.
தற்போது சர்வதேச அளவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் அவற்றுக்கு தேவையான உபகரணங்களை தயாரிக்க வெள்ளி பயன்படுத்தப்படுகிறது .எனவே உலக அளவில் தற்போது வெள்ளிக்கான தேவையும் அதிகரித்து அதன் விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2025 ஆம் ஆண்டில் வெள்ளியின் விலை 7% வரை உயரும் என கூறப்படுகிறது. நடப்பு ஆண்டில் வெள்ளியின் விலை சுமார் 20% வரை அதிகரித்துள்ளது. எனவே 2025 ஆம் ஆண்டில் முதலீடு மேற்கொள்ள வேண்டும் என எண்ணுபவர்கள் தங்களுடைய முதலீட்டு போர்ட்போலியோவில் 5 முதல் 8 சதவீதத்தை தங்கத்திற்கும் 10 முதல் 15 சதவீதத்தை வெள்ளிக்கும் என பிரித்து முதலீடு செய்ய வேண்டும் என இந்த துறை சார்ந்த நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.