Breaking News
கல்லூரியில் மாதா, பிதா குரு தெய்வ வழிபாடு என்ற நிகழ்ச்சி!
.
கல்லூரியில் மாதா, பிதா குரு தெய்வ வழிபாடு என்ற நிகழ்ச்சி!
மாதோட்ட நன்நகர் மன்னாரில் இயங்கி வருகிற பெயர்சொல்லத்தக்க பாடசாலைகளில் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியும் ஒன்று. கல்வி, கலைகள், விளையாட்டுக்கள் என்று இணைபாடவிதான செயற்பாடுகளோடு தன் மாணவர்களை வழிப்படுத்துகிற இந்தக் கல்லூரியில் மாதா பிதா குரு தெய்வ வழிபாடு என்று ஒன்றை நிகழ்த்துவது வழமை. கல்விப் பொது சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்பாக இந்த வழிபாடு நிகழ்த்தப்படும். அன்றைய தினம் கற்பித்த ஆசிரியர்கள், பரீட்சைக்கு தோற்ற இருக்கின்ற பிள்ளைகளின் பெற்றவர்கள் ஆகியோரை வணங்கி மாதா பிதா குரு தெய்வ வழிபாடு இடம்பெறும்.
நேற்றைக்கு நிகழ்ந்தது போலத்தான் இருக்கிறது, எங்களுடைய உயர்தரப் பரீட்சைகளுக்கு முன்பாகவும் இந்த வழிபாடு இடம்பெற்றது, ஏனென்று தெரியவில்லை ஒவ்வொரு ஆசிரியர்களுடைய கால்களையும் என் பெற்றவர்களுடைய கால்களையும் தொட்டு வணங்கி எழுந்தபோது என்கண்கள் கண்ணீரால் நனைந்திருந்தன, விம்மி விம்மி அழுதபடி நிகழ்வை விட்டு வெளியேறினேன்.
எதுக்கு இப்ப அழுறாய்? இப்பிடியே இங்கயே இருக்க போறியா? அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி போக வேண்டாமா?
அன்றைக்கு என்னுடைய ஆசிரியர் சொன்ன வார்த்தைகளை இன்றைக்கு மீட்டிப் பார்க்கிறேன். காலம் !! அது தன்பாட்டிற்கு எவ்வளவு வேகமாக ஓடிவிடுகிறது.
நேற்றைய தினம் கல்லூரியில் நடைபெற்ற வாணிவிழாவில் சிறப்பு அழைப்பாளராக சென்றிருந்தேன், நாங்கள் கற்ற காலத்திலிருந்த ஆசிரியர்களை கண்கள் தேடின, ஓரிருவர் அங்கிருந்தார்கள், மற்றவர்கள் எல்லோரும் இளமையின் துடிப்போடு வலம்வந்துகொண்டிருந்த நல்லாசிரியர்களாகியிருந்தார்கள். எல்லோரையும் புன்னகையால் நிறைத்து விட்டு அங்கு குழுமியிருந்த தம்பி தங்கைகளிடம் ஒன்றைச் சொல்லிவிட்டு வந்தேன்.
“வானுயர சிந்தித்து, உங்கள் வாழ்வுயர
பாடப் புத்தகங்களை கடந்து இன்னும் சில நூல்களையும் புரட்டுங்கள்” என்றேன். “ஆமாம்” என்பதைப்போல வானமும் கீழிறங்கி நிலமெல்லாம் நீராகியிருந்தது. சில்லென்ற அந்தக் குளிர்ச்சியோடு நேற்று அங்கு கண்டுவந்த அத்தனை கலைகளையும் மேடையின் உற்சாகத்தையும், நம் காலத்திலிருந்த தயாநந்தராஜா அதிபர், சண்முநாதன் ரீச்சர், கீதா மிஸ், புஸ்பலதா மிஸ், சண்சேர், ரவிசேர் இப்படி பல ஆசிரியர்களின் நினைவுகளையும் இன்னமும் மீட்டிக்கொண்டிருக்கிறேன்.
மண்ணின் கானங்கள் என்கிற கூத்துருவ ஆற்றுகை, வேப்பிலை நடனங்கள், காவடிகள், வில்லிசைகள், சொல்லிசைகள் என்று நம் பிள்ளைகளின் அத்தனை ஆற்றல்களையும் ஒருங்கிணைத்த அந்த அவை அற்புதமானதுதான். காலையில் படிப்பு, மாலையில் விளையாட்டு என்பதைப்போல இப்படிக் கொஞ்ச கலைகளின் பக்கமும் நம் பிள்ளைகளை அழைத்துச் சென்றுவிட்டால் அவர்கள் அவர்களாகவே வாழப் பழகிவிடுவார்கள் இல்லையா? வேறெதற்கு வீண்பேச்சுக்கள்.