கற்கள் கருவியானதுதான் உலகின் முதல் விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் ஆகும்!
.

முதன் முதலாக நான்கு கால்களில் இருந்து, இரண்டு கால்களுக்கு மாறிய பின்னர் விலங்கு மனிதனாக உருப்பெற்றது, கற்களை கருவிகள் ஆக்க துவங்கிய போதுதான். அவ்வாறாக கற்கள் கருவியானதுதான் உலகின் முதல் விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் ஆகும்! அதுதான் அந்த வேட்டைச் சமூகம்.
ஆதிமனித இனம் நீடித்து நிலைத்திருக்க, புதிதாக ஒன்றை கற்க வேண்டிய அவசியமும், கூட்டாக வாழ வேண்டிய கட்டாயமும் பிறந்தது.அப்படியான புதிய புத்தாக்க சிந்தனையும், கூட்டு வாழ்வும், மனித மூளையை விலங்குகளிடமிருந்து பன்மடங்கு பெரிதாக்கியது. அதைத்தான் 'Social Brain' என்கிறோம். (Read: Robin Dunbar) அங்கேதான், அதாவது, அந்த மூளை அளவின் மாற்றம் நிகழ்ந்த பின்தான் தன்னையொத்த அனைத்து விலங்குகளிடமிருந்து (உயிர்களிடமிருந்தும்) வேறுபட்டு, அசைக்க முடியாத மகத்தான ஆற்றலாக மனிதன் மாறுகிறான்.
அந்த 'Social Brain' கூட்டு வாழ்வை மேலும், மிகவும் திடப்படுத்துகிறது, மூளையில் மொழிக்கான பாகங்கள் விரிவடைகின்றன. மொழி பிறக்கிறது, மொழியின் மூலம் பண்பாடு பிறக்கிறது.ஒரு இனக் கூட்டம்-ஒரு மொழி-ஒரு பண்பாடு-ஒரு தேசிய இனம் எல்லாம் அந்த சமூக-உயிரியல் சங்கிலி தொடர்தான்.
கற்களை கருவிகளாக படைத்ததுதான் (tool making) மனித வரலாற்றின் முதல் தொழில்நுட்பம். அதுதான் மானுட பரிணாம பாய்ச்சலை புரட்சிகரமாக்கியது. கற்களை கருவிகளாக பயன்படுத்தி, உணவை பெறவும், வேட்டையாடவும் கற்கிறான். கற்கருவிமுதலில் உருண்டையாக, பின்னர் தட்டையாக, அதன் பின்னர் சற்று கூரிய முனையுடன் என பரிணாம மாற்றம் பெற்று, கடைசியாக Spear head மற்றும் Spearக்கு வந்து நிற்கிறான்.
டார்வின்
தனது 'The Descent of man' நூலில் குறிப்பிடுவார். "....எந்த அறிவும், முன் மாதிரியும் இல்லாத காலத்தில் கல்லை உடைத்து, அதை ஆயுதமாக்க தெரிந்தவன் மிகச்சிறந்த கலைஞனாகவும், அற்புதமான வேலைக்காரனாகவும் இருந்திருக்க வேண்டும்'' என்பார் டார்வின். ஏனெனில் கருவி ஒன்றை படைக்க, புத்தாக்க சிந்தனை உதிக்க, மூளையின் பல பகுதிகள் ஒன்றிணைந்து, ஒரே நேரத்தில் வேலை செய்ய வேண்டும். அதற்குமுன் அது நிகழ்ந்திருக்கவில்லை. அது நிகழாமல் போனதால்தான் குரங்குகளால் மனிதனாக மாற முடியவில்லை.
அந்த கூரிய கற் கருவியை நீண்ட குச்சிகளில் கட்டி வேட்டைக்கு பயன்படுத்துகிறான். அதுதான் வேல் (Vel). நாம் கொண்டாடும், நாம் முழங்கும் வெற்றி வேல், வீர வேல்! அதை தமிழ் மட்டுமன்றி மசாய் போன்ற ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்க பழங்குடிகளிலும் காணலாம். ஆங்கிலத்தில் சொல்லக் கூடிய Ja(vel)in இங்கிருந்து பிறந்திருக்கலாம் (என்னுடைய யூகம்). இதெல்லாம் நிகழ துவங்கியது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்... அதாவது, பாலியோலித்திக் துவங்கி 5000 ஆண்டுகளுக்கு முந்தைய நியோலித்திக் காலம் வரை தொடர்கிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில்தான் வேட்டை சமூகங்கள் மாறி, இனக்குழு சமூகங்கள் உருவாகின்றன, வேளாண்மை செய்கிறான், முன்னோர் வழிபாடு உருவாகிறது.ஆக மதுரை அருகே விருமாண்டியிடம் இருக்கும் 70,000 ஆண்டுகால பழமையான ஜீனான M130 எல்லாம் ஏதோ லாட்டரியில் கிடைத்த அதிர்ஷ்டம் இல்லை. அதேவேளை
அத்திரப்பாக்கத்தில் கிடைத்திருக்கும் இதே கற்கருவிகள் 385,000 ஆண்டுகள் பழமையானது.
முன்பு சொன்ன பாலியோலித்திக் காலத்தை சார்ந்தது. பல்லாயிரம் ஆண்டுகளாக எவ்வாறு ஒரு பண்பாட்டை தொடர்கிறோம் என்பது மாபெரும் அதிசயம். ஆனால் அதுதான் இந்த இனத்தை உயிரோடு வைத்திருக்கிறது. ஒரே நிலப்பரப்பிற்குள் நாகரீகமடைந்து, மொழியை வளர்த்து, வேளாண் செய்து, பண்பாட்டை வளர்த்து, அரசுகளை கட்டமைத்ததால் மட்டுமே இது சாத்தியப்பட்டு இருக்காது. அதைதாண்டி ஏதோ இருக்கிறது. தமிழன் என்று சுருக்காமல்,இந்த மானுட பண்பு அவசியம் ஆய்வு செய்யப்பட்ட வேண்டியது. அதேவேளை, தெற்காசியாவின் ஒரு நிலப்பரப்புக்குள் பல்லாயிரம் ஆண்டுகளாக தேங்கி, சுருங்கி பின்தங்கி விடவும் இல்லை.ஆக இத்துணை ஆயிரம் ஆண்டுகளாக ஒரு பண்பாட்டை பின்பற்றுவதென்பது... அது வெறும் வறட்டுத்தனமாக தனக்கு தெரிந்த ஒன்றை தொடர்வது என்பதில்லை.
மனிதன் படைத்திட்ட மாபெரும் தொழில்நுட்ப விஞ்ஞானமான கருவிகள் செய்ததை இன்றும் வணங்குகிறான். முதற் கற்கருவியான 'வேல்'லையே வணங்குகிறான். பகுத்தறிவு மூடர்கள் நம்மிடம் அறிவியல் இல்லை என்றார்கள். அந்த 'வேலே' அறிவியல்தான். அறிவியலையே கடவுளாக்கினான். இவ்வாறான பழங்குடித்தனமாக பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையின் மீதான, உயிர்களின் மீதான, வரலாற்றின் மீதான, விஞ்ஞானத்தின் மீதான ஒரு இனத்தின் அடங்கா பற்றை எவ்வாறு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது என்பதில்தான் மானுடத்தின் வெற்றி இருக்கிறது. கட்டுரையின் நோக்கம் நாம்தான் உலகின் மூத்த இனம், சிறந்த இனம் என வெட்டி பெருமை பேச வைப்பதல்ல. இங்கு வியாபித்து இருக்கும் வேல் வழிபாடு, மூதாதையர் வழிபாடு, தேசிய இனவிடுதலை வேட்கை என இவற்றுக்கு பின்னே இருக்கும் அறிவியலை விளக்குவதாகும்.
இதில் இருந்து சமூக-அரசியல் ரீதியாக எதையாவது எடுத்துக் கொள்ள வேண்டுமானால் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். மேற்கத்தியஐரோப்பிய ஆங்கிலேயர்தான் நாகரீகமானவர்கள், அறிவிற் சிறந்தவர்கள்,அவர்கள்தான் உயர்ந்த சமூக கூட்டம் எனும் காலனிய-முதலாளித்துவ உளவியல் மூளைச்சலவையை ஒருபோதும் நம்ப கூடாது. அவர்களின்கைக்கூலிகளாக இங்கே இருந்து கொண்டு உன்னிடம் ஏதுமில்லை, உன் வரலாறு இழிவு, உன் பண்பாடு பிற்போக்கானது, உன் மொழி ஒரு குப்பை என்றெல்லாம் கதையாடும் ஏகாதிபத்திய கைக்கூலி நாய்க்கன்களை வரலாற்றில் இருந்து அப்புறப்படுத்தி விடுங்கள்!அறிவியலின் அடிநாதமான 'வேலை' வணங்குங்கள், கொண்டாடுங்கள்! வெற்றிவேல் வீரவேல் என விண் அதிர முழங்குங்கள்! பரிணாம,விஞ்ஞான, உற்பத்தி மாற்றத்தை சாத்தியப்படுத்திய கருவிகளை ஆயுத பூசையில் கொண்டாடுங்கள்! அண்டத்திற்கு முதன்முதலாக நாகரிகத்தை கொடை வழங்கிய தொல்குடி தமிழர்க்கும், மற்ற பிற பழங்குடி இனங்களுக்கும் ஆயுத பூசை வாழ்த்துக்கள்!!!
- Krishna